(பாங்கொக்) – செப்ரெம்பர் 23, 2024இல் ஆட்சிக்குவந்த ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸநாயக்காவின் அரசாங்கமானது இலங்கையினை மீண்டும் மீண்டும் நெருக்கடிக்குள் தள்ளுகின்ற நீண்டகாலமாக தொடரும் மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதாக வாக்குறுதியளித்திருக்கின்றது, என மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தனது உலகளாவிய அறிக்கை 2025இல் குறிப்பிட்டிருந்தது. திஸ்ஸநாயக்க சமத்துவமான பொருளாதாரக் கொள்கைகளை அறிமுகப்படுத்துவதாகவும், மிகமோசமான பயங்கரவாதத்தடைச் சட்டத்தினைத் திருத்துவதாகவும் வாக்குறுதியளித்திருந்தார், ஆனால் அவர் இலங்கை அரசாங்கத்திற்கும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப்புலிகளுக்குமிடையில் 1983 – 2009 வரை இடம்பெற்ற உள்நாட்டுப் போரின்போது மேற்கொள்ளப்பட்ட பரந்தளவிலான மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறலுக்கு ஆதரவளிக்கவில்லை.
மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பானது தனது 35வது பதிப்பான 546 பக்கங்களைக்கொண்ட 2025ம் ஆண்டிற்கான உலகளாவிய அறிக்கையில் 100இற்கும் மேற்பட்ட நாடுகளில் மனித உரிமைகள் தொடர்பான நடைமுறைகளை மதிப்பாய்வு செய்கின்றது. நிர்வாக இயக்குனர் திரன ஹசன் அவரது அறிமுக உரையில், உலகின் பல பாகங்களிலும் அரசாங்கங்கள் அரசியல் எதிரிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை ஒடுக்குகின்றது, கைதுசெய்து சிறையிலிடுகின்றது. ஆயுதக்குழுக்களும், அரசபடைகளும் சட்டவிரோதமாக மக்களை கொலைசெய்திருக்கின்றார்கள், பலரை அவர்களின் வீடுகளிலிருந்து விரட்டியிருக்கின்றார்கள், மனிதாபிமான உதவிகளைத் தடைசெய்திருக்கின்றார்கள். 2024இல் இடம்பெற்ற 70க்கும் மேற்பட்ட தேர்தல்களில் பலவற்றில் பாரபட்சமான பிரச்சாரங்களையும், கொள்கைகளையும் கொண்டிருக்கும் சர்வாதிகார தலைவர்கள் தேர்வுசெய்யப்பட்டிருக்கிறார்கள் எனக்குறிப்பிடுகின்றார்.
மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பின் ஆசியாவிற்கான துணை இயக்குனரான மீனாக்ஷி கங்குலி “இலங்கையின் பல்தரப்பட்ட நெருக்கடியானது மனித உரிமை மீறல்களுக்கான தண்டனை விலக்குகள், சிறுபான்மைச் சமூகங்களுக்கெதிரான பாரபட்சம், விமர்சகர்களை மௌனிக்கச்செய்யும் சட்டங்கள் மற்றும் நிறுவகங்கள் போன்றவற்றுடன் தொடர்புபட்டிருக்கின்றது” என கூறினார். “ஜனாதிபதி திஸ்ஸநாயக்க தனது பிரச்சாரத்தின்போது வழங்கிய வாக்குறுதிகளைச் செயற்படுத்துகையில் உண்மையிலேயே உரிமைகள் தொடர்பில் மாற்றத்தினை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அவருக்கு இருக்கின்றது, ஆனால் அவர் கடந்தகால வன்முறை வரலாற்றுக்கும், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் ஏனையவர்களுக்கெதிராக தொடரும் துஷ்பிரயோகங்களுக்கும் தீர்வுகாண வேண்டும், ஆனால் அவர் இதுதொடர்பில் பிரச்சினைக்குரியவிதத்தில் அமைதியாக இருந்து வருகின்றார்.
- சர்வதேச நாணய நிதியத்தின் நிதியுதவியானது 2022ம் ஆண்டில் இலங்கை தனது வெளிநாட்டுக்கடனைக் கட்டமுடியாத நிலையினை அடைந்தபின்பு உடனடியாக ஏற்பட்ட நெருக்கடியினை எதிர்கொள்ள உதவிய அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபையானது 2024இல் கால்வாசிக் குடும்பங்கள் உணவுப் பாதுகாப்பின்மையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கணிப்பிட்டுள்ளது.
- சர்வதேச நாணய நிதியத்தின்கீழ் முந்தைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகளானவை பொருளாதார மீட்பின் சுமையினைப் பெரும்பாலும் குறைந்த வருமானமுள்ள மக்களின்மீது திணித்தது. திஸ்ஸநாயக்க அரசாங்கம் ஊழலுக்கு எதிராகப் போராடுவதாகவும் சமத்துவமான பொருளாதாரக் கொள்கைகளை உருவாக்குவதாகவும் வாக்குறுதியளித்துள்ளது.
- 2024ம் ஆண்டில் பொலிஸ் மற்றும் ஏனைய பாதுகாப்பு படையினர் செயற்பாட்டாளர்களையும் மனித உரிமைகள் பாதுகாவலர்களையும் குறிப்பாக தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடகிழக்கு பிரதேசங்களில் தொல்லைசெய்து மிரட்டியதுடன் சிவில் சமூக அமைப்புக்களின் நிதிமூலங்கள் தொடர்பிலும் தேவையற்ற கட்டுப்பாடுகளையும் தலையீடுகளையும் மேற்கொண்டனர், இவற்றிற்கான தண்டனைகளிலிருந்தும் விலக்களிக்கப்பட்டனர்.
- மே மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான அலுவலகமானது தசாப்தங்களாக மக்கள் விடுதலை முன்னணியினரின் எழுச்சிகள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதப்போர் ஆகியவற்றின்போது வலுக்கட்டாயமாக காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் ஆயிரக்கணக்கான இன்னும் தீர்க்கப்படாத சம்பவங்களை எதிர்கொள்ளும் விதத்தில் வழக்குகளைத் தொடர்வதற்கும் ஏனைய பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் சர்வதேச சமூகத்திற்கு அழைப்புவிடுத்து அறிக்கையொன்றினை வெளியிட்டிருந்தது. மனித உரிமைமீறல்களைக் கண்காணிப்பதற்கும், உள்நாட்டுப்போரின்போது மேற்கொள்ளப்பட்ட குற்றங்களுக்கான ஆதாரங்களைச் சேகரிப்பதற்குமான ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் காலஎல்லை அதிகரிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி திஸ்ஸநாயக்க அவரது கட்சியினரின் தேர்தல் பிரச்சாரங்களின்போது அளித்த வாக்குறுதிகளைப் பூர்த்திசெய்வதன்மூலமும் அவற்றை அடிப்படையாகக்கொண்டு செயற்பாடுகளை முன்னெடுப்பதன்மூலமும் இலங்கையின் மனித உரிமை தொடர்பான பல பிரச்சினைகளை எதிர்கொள்ளத் தொடங்க வேண்டும்.