(குவைத் நகரம், ஒக்டோபர் 6, 2010) - குவைத்தில் துஷ்பிரயோகம் செய்யும் வேலைகொள்வோர்களிடமிருந்து தப்பிச்செல்வதற்கு முயலும் வீட்டுப் பணியாளர்கள் "தப்பியோடுவதற்காக" குற்றவியல் குற்றத்தை எதிர் நோக்குவதுடன், அவர்களது வேலைகொள்வோர்களின் அனுமதியின்றி பணி செய்யும் இடங்களை மாற்றவும் முடியாதுள்ளது என, மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று வெளியிட்ட அதனொரு அறிக்கையில் தெரிவித்தது. சம்பளங்ளை நிறுத்தி வைக்கும், ஓய்வு நாட்களின்றி நீண்ட மணித்தியாலங்களுக்கு பணியாளர்ளை வேலை செய்வதற்கு கட்டாயப் படுத்தும், பணியாளர்களுக்கு போதுமான உணவை அளிக்காதிருக்கும், அல்லது அவர்ளை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகிக்கும் வேலை கொள்வோர்களுக்கெதிராக புலம்பெயர் வீட்டுப்பணியாளர்கள் குறைந்த அளவிலான பாதுகாப்பையே கொண்டுள்ளனர்.
"எங்கு திரும்பினாலும் தடைகள் (Walls at Every Turn): குவைத்தின் அனுசரனை முறைமை ஊடாக புலம்பெயர் வீட்டுப்பணியாளர்கள் துஷ்பிரயோகிக்கப்படல்" எனும் 97 பக்க அறிக்கை, வீட்டுப்பணியாளர்கள் எப்படி, சுரண்டுகின்ற அல்லது துஷ்பிரயோகிக்கின்ற வேலைகளுக்குள் மாட்டிக் கொள்வதுடன் பின்னர் வேலைகொள்வோரின் அனுமதியின்றி வேலையை விட்டு விலகிச் செல்வதற்காக குற்றவியல் தண்டனைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது என்பதனை விபரிக்கிறது. வீட்டுப் பணியாளர்கள் துஷ்பிரயோகிக்கப்பட்டு நிவாரணங்களுக்காக நாடி யிருந்தாலும் கூட, அரசாங்க அதிகாரிகள் "தப்பியோடியமைக்காக" வீட்டுப்பணியாளர்ளை கைது செய்து அநேகமான சந்தர்ப்பங்களில் அவர்களை குவைத்திலிருந்து நாடு கடத்தினர்.
"குவைத்தில் வேலைகொள்வோர்களே எல்லா உரிமைகளையும் கொண்டுள்ளனர்", என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மத்திய கிழக்கிற்கான பணிப்பாளர் சாரா லெ விற்சன், கூறினார். "துஷ்பிரயோகிக் கப்பட்டால் அல்லது சுரண்டப்பட்டால் பணியாளர்கள் தமது வேலைத் தலங்களிலிருந்து தப்பிப்பதற்கு அல்லது முறையிடுவதற்கு முயல்கின்றனர், அவ்விதமான சந்தர்ப்பங்களில், ‘தப்பியோடிமைக்காக' குற்றஞ் சுமத்தி பணியாளர்கள் நாடு கடத்தப்படுவதற்கு, சட்டம் வேலைகொள்வோர்களுக்கு இலகுவாக வழியேற்படுத்திக் கொடுக்கிறது. குவைத் அரசாங்கம், பணியாளர்கள் வேலைகொள்வோரின் தயவில் தங்கியிருப்பதற்கு அல்லது தயவு இல்லாதவிடத்து துன்பப்படுவதற்குமாக இடமளித்துள்ளது".
மத்திய கிழக்கிலேயே வீட்டுப்பணியாளர்களின் உயர்ந்த விகிதாசாரத்தைக் கொண்ட குவைத், பெப்ரவரி 2011 இல் அனுசரனை முறைமையை (kafala) ஒழிப்பதாகவும், அதற்குப் பதிலாக அரசாங்க நிர்வாக ஆட்சேர்ப்பு அதிகாரத்தோடு வேலைகொள்வோரை அடிப்படையாகக் கொண்டதொரு முறைமையால் மாற்றீடு செய்வதாகவும் செப்டெம்பர் 26, 2010 இல் அறிவித்தது. இதுவொரு முக்கியமான சீர்திருத்தமாக அமையக்கூடியதாக இருக்கையில், அரசாங்கம் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நாட்டில் எத்தகைய சட்டப் பாதுகாப்புகள் வழங்கப்படும் என்பது பற்றியோ, அல்லது சீர்திருத்தங்கள் வீட்டுப்பணியாளர்களையும் உள்ளடக்குகின்றதா என்பது பற்றியோ தகவல் எதனையும் அளிக்கவில்லை.
1.3 மில்லியன் மக்களை மட்டும் கொண்ட இந்த சிறிய வளைகுடா நாட்டின் மொத்தத் தொழிலாளர் சக்தியில் நாட்டிலுள்ள 660,000க்கும் அதிகமான புலம்பெயர் வீட்டுப்பணியாளர்கள், அநேகம் மூன்றிலொரு பங்கை பிரதிநிதித்துவம் செய்கின்றனர். ஆனாலும், ஏனைய தொழிலாளர்களைப் பாதுகாக்கும் தொழில் சட்டங்களிலிருந்து வீட்டுப் பணியாளர்கள் விலக்கப்பட்டுள்ளனர். தனியார் துறைக்கான புதிய தொழில் சட்ட வரைபை சட்டமாக்கும்போது அதில் வீட்டுப்பணிகளை உள்ளடக்குவதற்கு தவறிய குவைத் நாட்டின் சட்டமியற்றுவோர்கள் இந்த விலக்குதலை அண்மையில், பெப்ரவரி 2010இல் சீர்செய்து மீள்வலுப்படுத்தினர்.
தன்னை வெளிப்படுத்தாதிருப்பதற்கு கேட்டுக் கொண்டவரும், குவைத்தில் வீட்டுப்பணியாளர்களுக்கு ஆதரவாக வழமையில் வாதாடி வரும் ஒரு சமூக ஆர்வலர், "துஷ்பிரயோகம் செய்யுமொரு வேலை கொள்வோரிடமிருந்து தப்பியோடுவது சட்டத்திற்கு எதிரானதல்ல", என்று கூறினார். "அந்த வீட்டில் எனக்கு என்ன நடந்தது என உங்களுக்கு தெரியுமா?, அவர்கள் எனக்கு அடித்தார்கள், என் மீது துப்பினார்கள்.... அப்படியிருக்கையில் எனக்கெதிராக வழக்கொன்று எப்படியிருக்க முடியும்?, என சில சமயங்களில் இந்த பணிப்பெண்கள், சொல்வார்கள்", என்று கூறினார்.
இலங்கை, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் எதியோப்பியா நாடுகளிலிருந்தான வீட்டுப்பணியாளர்கள் குவைத் நாட்டிலுள்ள தங்களது தூதரகங்களில் தாங்கள் நடாத்தப்படும் முறை குறித்து 10,000க்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை செய்துள்ளதாக, 2009 இல் மனித உரிமைகள் கண்காணிப்பகம் தொகுத்த தரவுகள் காண்பிக்கின்றன.
தற்போதைய அனுசரனை முறைமை மீதான குவைத் அரசாங்கத்தின் சீர்திருத்தம், "தப்பியோடுதலை" ஒரு சட்ட மீறலாக கருதுவதை நீக்குவதற்கு உடனடியான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை உள்ளடக்குவதோடு, வேலைகொள்வோரின் ஒரு அனுமதியின்றி தொழிலாளர்கள் பணிகளை மாற்றிக் கொள்வதையும் அனுமதித்தல் வேண்டுமென, மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்தது. தங்களது உரிமைகளை மீறியமைக்காக வேலைகொள்வோர்களை விட்டு விலகிய பணியாளர்ளை கைது செய்வதையும் மற்றும் நாடு கடத்துவதையும் அரசாங்கம் நிறுத்துதல் வேண்டுமென்பதோடு, பதிலுக்கு வீட்டுப் பணியாளர்களுக்கு உடனடித் தங்குமிடத்தை வழங்கி முறைப்பாடு செய்யும் பொறிமுறைகளைத் துரிதப்படுத்தலும் வேண்டும்.
நேபாள நாட்டைச் சேர்ந்த 23 வயதுடைய தில்குமாரி எனும் பெயர் கொண்ட வீட்டுப்பணிப்பெண்ணொருவர், தான் 13 மாதங்கள் சம்பளம் எதுவுமின்றி வேலை செய்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு தெரிவித்தார். ஒரு இதய சத்திரசிகிச்சையின் தேவையைக் கொண்டிருந்த தனது தந்தைக்காக, தனது நாட்டுக்கு திரும்பிச் செல்வதற்காக அவர் தனது வேலைகொள்வோரிடம் தனது சம்பளக் கொடுப்பனவிற்காக திரும்பத் திரும்ப வேண்டிக் கொண்டார். வேலைகொள்வோர்கள் சம்பளக் கொடுப் பனவைச் செய்வதற்கான ஏற்பாடுகளுக்காக 10 மாதங்கள் வரை காத்திருந்த பின்னர், உதவி நாடி பொலிஸாரிடம் சென்றதாகவும், ஆனால் அவர்களோ தன்னைத் தடுத்து வைத்ததாகவும் அவர் கூறினார், "பொலிஸ் நிலையத்திலிருந்து நான் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு செல்ல வேண்டியிருந்தது. எனது எஜமானும், எஜமானியும் (எனது வேலை கொள்வோர்கள்) எனக்கெதிராக பொலிஸ் வழக்கொன்றைப் பதிவு செய்திருந்தனர்".
"எங்கு திரும்பினாலும் தடைகள்" அறிக்கை, தொழில் மற்றும் சமூக விவகாரங்கள் அமைச்சு மற்றும் உட்துறை அமைச்சு என்பவற்றிலிருந்தான பிரதிநிதிகள் உட்பட 49 வீட்டுப்பணியாளர்கள், அவர்ளை அனுப்பும் நாடுகளின் குவைத்திலுள்ள தூதரகங்களின் பிரதிநிதிகள் ஆகியோர்களுடன் நடாத்திய நேர்காணல்களை அடிப்படையாகக் கொண்டது. மனித உரிமைகள் கண்காணிப்பகம் வேலைகொள்வோர்கள், குவைத் நாட்டில் மனித உரிமைகள் மற்றும் சிவில் சமூக விவகாரங்களில் ஆதரவாக வாதாடுபவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் கல்விமான்கள் ஆகியோரையும் நேர்காணல் செய்தது.
நேர்காணல் செய்யப்பட்ட வீட்டுப்பணியாளர்கள், சம்பளம் கொடுப்பனவு செய்யப்படாமை, ஓய்வுநாள் வழங்குவதற்கு மறுத்தல் மற்றும் உடல் ரீதியான அல்லது பாலியல்ரீதியான துன்புறுத்தல் உட்பட அவர்களது வேலைகொள்வோர்களினால் இழைக்கப்படும் பல்வேறு விதமான துஷ் பிரயோகங்களை குறிப்பிட்டுக் கூறினர். ஆனால், தங்களது முறைப் பாடுகளை மேற்கொண்டு முன்னெடுத்துச் செல்வது உண்மையிலேயே சாத்தியமற்றது என்பதைத் தாம் கண்டுகொண்டதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
தங்களது அனுசரனையாளருடன் பேச்சு வார்த்தை மேற்கொள்ளப் படுகையில், அல்லது காலதாமதமாகும் ஒரு சட்ட வழக்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படும் வரை தூதரகங்களின் சனநெருக்கடி மிகுந்த கூடாரங்களில் வாரங்கள் அல்லது மாதங்களுக்கு தங்கியிருப்பதற்கு தயாராக இருந்தால் மாத்திரம் ஒரு சட்ட உரிமைக் கோரிக்கையை முன்னெடுக்க முடியுமென்பதை அவர்கள் கண்டுகொண்டனர். வேலை கொள்வோரினால் செய்யப்படும் ஒரு "தப்பியோடுதல்" முறைப்பாடு உடனடியாக ஒரு புலம்பெயர் பணியாளரின் சட்டரீதியாக நாட்டில் தங்கியிருக்கும் அந்தஸ்தை செல்லுபடியற்றதாக்கி, அவர் தனது உரிமைக் கோரிக்கைக்கான தீர்வுக்காக காத்திருக்கும் வேளையில் வேலை செய்வதற்கும் மற்றும் வீட்டிற்கு பணம் அனுப்புவதற்கும் சட்டரீதியில் வழியின்றியிருக்க செய்கிறது.
"வீட்டுப்பணியாளர்கள், சொந்த நாட்டில் தங்களது குடும்பங்களுக்கு உதவி செய்வதற்காக தாங்கள் ஈட்டும் சம்பளத்திலேயே அநேகம் தங்கியிருக்கிறார்கள்", என்று கூறினார் விற்சன். இந்தப் பணியாளர்களில் அநேகமானவர்கள் ஏற்கனவே உரிமை மீறல்களை அனுபவித்திருக்கும் போது, அவர்கள் வேலை செய்வதற்கான வாய்ப்புகளின்றியோ, அல்லது சுதந்திரமாக நடமாடுவதற்கு வழிகளின்றியோ சனநெருக்கடி மிக்க கூடாரங்களில் மாதக் கணக்கில் காத்திருக்கத் தேவையில்லை".
தொழில் சட்டங்களிலிருந்து விலக்கப்பட்ட வீட்டுப்பணியாளர்கள், குறிப்பாக தங்களுக்குரிய சம்பளங்ளைக் கோருவதில் கடினமான சட்டச் சிக்கல்களுக்கு முகம் கொடுக்கின்றனர். தனியார் வீடுகளிலிருந்து கிடைக்கக் கூடிய மட்டுப்படுத்திய சாட்சியங்கள் காரணமாக சுரண்டுதல் அல்லது துஷ்பிரயோகத்தை நிரூபிப்பது கடினமானதாக அமையலாம். நாட்டில் புலம்பெயர் வீட்டுப்பணியாளர்களின் தொகை பாரியதாகவும் மற்றும் புலம்பெயர் பணியாளர்களது சம்பள முறைப்பாடுகளே அவர்களது மனக்குறைகளுக்கான பட்டியலில் மேலுள்ளதாக இருந்த போதிலும் கூட, குவைத், தொழில் நீதிமன்றங்கள் துரிதப்படுத்திய நடவடிக்கைளை வழங்குவதில்லை. நீண்ட காத்திருப்புக்கள், தங்களது உரிமைகள் மற்றும் தெரிவுகள் பற்றிய குறைவான தகவல்கள் மற்றும் நீதி கிடைக்கப் பெறுதலுக்கு குறைந்தளவேயான வாய்ப்புகள் என்பவற்றால் பணியாளர்கள் பலர் நிவாரணத்துக்கான முயற்சிகளைக் கைவிட்டு விடுகின்றனர் என்பதையே இது கருதுகிறது.
வீட்டுப்பணியாளர்கள் தங்களது உரிமைக் கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்லாதிருப்பதற்கு தெரிவு செய்தாலும் கூட அவர்கள் நாட்டை விட்டு வெளியேற முன் நீண்ட தாமதங்களுக்கு தொடர்ந்தும் முகம் கொடுக்க வேண்டியதாக உள்ளது. தங்களது வேலைகளை விட்டு விலகி, மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் நேர்காணப்பட்டவர்களுள் ஒரு சில பணியாளர்கள் மட்டுமே, தாம் விலகிய பின்னர் தங்களது வேலை கொள்வோரிடமிருந்து தங்களது கடவுச்சீட்டுக்களை வெற்றிகரமாகப் மீளப்பெற்றுக் கொண்டவர்களாக இருந்தனர்.
பணியாளர்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதைத் தாமதிப்பதற்காக வேலை கொள்வோர்கள் பணியாளர்களது கடவுச்சீட்டுகளைப் பறிமுதல் செய்து வைத்திருப்பதுடன் பேச்சுவார்த்தைகளின் போது இதனை ஒரு பேரம் பேசும் கருவியாகப் பயன்படுத்துகின்றனர். துஷ்பிரயோகிக்கின்ற வேலை கொள்வோர்களிடமிருந்து தப்பிச் சென்ற அல்லது தங்களது ஒப்பந்தக் கடப்பாடுகளை பூர்த்தி செய்திருந்த சந்தர்ப்பங்களில் கூட, வேலை கொள்வோர்களால் "தப்பியோடியவர்கள்" என பதிவு செய்யப்பட்ட பணியாளர்கள், தங்களது வீடுகளுக்கு திரும்புவதற்கு முன் அரசாங்க அதிகாரிகளால் குற்றச் சாட்டிலிருந்து விடுவிக்கப்படுவதற்காக காத்திருப்பதில் அநேகம் மேலதிக காலத்தை செலவளிக்க வேண்டியதாக உள்ளது.
நாடு கடத்துவதற்காக அரசாங்கத்தின் ஒரு தடுத்து வைத்திருக்கும் நிலையத்தில் நேர்காணப்பட்டவொரு இந்தோனேசியப் பணிப்பெண் நூர்........ கூறுகையில், தனது வேலைகொள்வோர், தனது இரண்டு வருட ஒப்பந்த முடிவின் பின்னர் நாடு திரும்புவதற்கு அனுமதிக்காததுடன், தான் தப்பியோடியதும் தனது கடவுச்சீட்டை திருப்பித் தருவதற்கும் மறுத்ததாகத் தெரிவித்தார். "தான் தனது தூதரகத்துக்குச் சென்றதாக", அவர் கூறினார். "அங்கே அவர்கள் எனது எஜமானியை (வேலைகொள்வோர்) அழைத்தனர். எஜமானியோ எனது கடவுச்சீட்டை திருப்பித் தருவதற்கு இன்னமும் மறுத்தார். இதனால் நான் நாடு கடத்தப்படுவதற்கு உள்ளாக வேண்டியுள்ளது".
"கொடுப்பனவின்றி வேலை செய்வதற்கு கட்டாயப்படுத்தப்பட்ட, உணவு மறுக்கப்பட்ட, அல்லது மனிதத் தன்மையற்ற வகையில் நடாத்தப்பட்ட பணியாளர்கள் தடுப்பு முகாம்களுக்கு அல்லது சிறைகளுக்கு செல்வதற்கோ அல்லது நாடு கடத்தப்படும் செய்முறைகளினூடாக திருப்பி அனுப்பப்படுவதற்கோ உள்ளாக வேண்டியதில்லை", என்றார் விற்சன். "வேலைகொள்வோர்களினால் துஷ்பிரயோகிக்கப்படுவதாக முறையிடும் பணியாளர்களுக்கு அரசாங்கம் தங்குமிட வசதிகளை அளித்தல் வேண்டுமென்பதோடு, ஏற்கனவே துன்புறுத்தல்களினால் பாதிக்கப்பட்ட பெண்கள் மீது வேலைகொள்வோர் விதிக்கக்கூடிய சுமைமிகுந்த இந்த சட்டரீதியான தடைகளை நீக்குதல் வேண்டும்".
வீட்டுப்பணியாளர்களுக்காக 50 படுக்கைகள் கொண்ட ஒரு தங்குமிட வசதியை குவைத்திய அரசாங்கம் தற்பொழுது பேணி வருகையில், தூதரகங்கள் மட்டுமே அதற்கு பணியாளர்களைப் பரிந்துரைக்க முடியும், ஆனால் அதுகூட அனைத்துக் குற்றச் சாட்டுகளிலிருந்தும் பொலிஸார் விடுவித்த பின்னர் மட்டுமேயாகும். இது இப்பணிப்பெண்கள் அரசாங்க வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்கு முன்னர் தூதரக முகாம்களில் நீண்ட காலம் காத்திருக்க வேண்டுமென்பதையே கருதுகிறது. நூற்றுக்கணக்கான வீட்டுப்பணியாளர்களும் மற்றும் தூதரகங்களின் சனநெருக்கடி மிக்க முகாம்களும் அவசியமான தேவைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்த போதிலும், அரசாங்கத்தின் இந்த வசதிகளுக்கு மனித உரிமைகள் கண்காணிப்பகம் விஜயம் செய்திருந்த போது, அவை செயற்றிறன் குன்றிய வகையிலேயே செயற்பட்டுக் கொண்டிருந்தன.
"தீவினைக்கஞ்சாத வேலைகொள்வோர்கள் வீட்டுப்பணியாளர்களை சுரண்டும் பொழுது, அரசாங்கம் அவர்களை மேலும் தண்டித்தல் கூடாது", என்றார் விற்சன். அரசாங்க அதிகாரிகள் கபாலா (kafala) சீர்திருத்தம் பற்றி பல வருடங்களாக கதைக்கிறார்கள், ஆனால் அவற்றை வெறும் காகிதத்தில் மாத்திரம் கொண்டிருக்கக்கூடாது, பணியாளர்களது உரிமைகளை நடைமுறையில் பாதுகாக்கும் முறைமைகளை அமுல் படுத்துவதற்கான காலம் இப்பொழுது வந்துவிட்டது."