Skip to main content

இந்தியா: காவல்துறைக் காவலில் நடக்கும் கொலைகளுக்குத் தண்டனை இல்லை

சித்திரவதையையும், காவலில் வைக்கப்பட்டவர்களின் சாவுகளையும் தடுப்பதற்கான சட்டங்களைச் செயலாக்குக

(நியூ யார்க்) – இந்தியாவில் காவல்துறையினர் பல நேரம் கைது நடைமுறைகளை அசட்டை செய்வதாகவும், காவலில் சந்தேகக் குற்றவாளிகளை சாகும் வரை சித்திரவதை செய்வதாகவும் மனித உரிமைக் கண்காணிப்பகம் இன்று வெளியிட்ட புதிய அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. அதிகாரவழித் தரவுகளின் படி, 2010 2015க்கும் இடையே குறைந்தது 591 ஆட்கள் காவல் துறைக் காவலில் உயிரிழந்தார்கள். இதற்குக் காவல்துறையைப் பொறுப்பாக்க வேண்டிய ஆட்சியாளர்களோ அதை விடுத்து, இன்னுங்கூட உரிமைகளை மதிக்கும்படியான படையைக் கட்டியமைக்கத் தேவையான சீர்திருத்தங்களுக்கு முட்டுக்கட்டை போட்டுள்ளார்கள்.

சகோதர உணர்வால் கட்டுண்டார்: காவல்துறைக் காவலில் நடக்கும் கொலைகளைத் தடுக்கத் தவறிய இந்தியா என்ற 121 பக்க அறிக்கை கைது ஒழுங்குமுறைகளையும் சித்திரவதையால் நேரிடும் காவல்-சாவுகளையும் அவற்றுக்குப் பொறுப்பானவர்கள் குற்றம் புரிந்தும் தண்டிக்கப்படாத நிலை குறித்தும் காவல்துறையின் அலட்சியப் போக்கை அலசுகிறது. இது 2009க்கும் 2015க்கும் இடையில் நடைபெற்ற 17 காவல்-சாவுகளைப் பற்றிய ஆழமான புலனாய்வுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. பாதிப்புற்றகார்களின் குடும்பத்தினர், சாட்சிகள் நீதி வல்லுநர்கள், காவல்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் எடுத்த 70க்கு மேற்பட்ட நேர்காணல்களும் இவ்வறிக்கையில் இடம்பெற்றுள்ளன. இந்தப் 17  நேர்வுகள் ஒவ்வொன்றிலும் காவல்துறை சரியான கைது நடைமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறியதால் சந்தேகக் குற்றவாளிகள் இன்னுங்கூட எளிதாய் முறைகேட்டுக்கு ஆட்பட்டார்கள்.

ஜனவரி 2016 இல்  இந்தியாவின் தலைநகர் புது தில்லியில் உள்ள காவல்துறை அதிகாரிகள். குற்றம் இழைக்கும் காவலர்களை அவர்களின் உயர் அதிகாரிகளே காப்பாற்றி விடுகின்றனர் என இந்திய காவல்துறை மீது அடிக்கடி குற்றஞ்சாட்டப்படுகிறது.  © 2016 Reuters


“இந்தியாவில் காவல்துறை சந்தேகக் குற்றவாளிகளை அடித்துக் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வது ஏற்புடைத்தன்று என்பதை சித்திரவதைக் குற்றத்துக்காக அதிகாரிகள் மீது வழக்குத் தொடர்ந்த பிறகுதான் கற்றுக் கொள்வார்கள்” என்கிறார் மனித உரிமைக் கண்காணிப்பகத்தில் தெற்காசிய இயக்குநராக இருக்கும் மீனாட்சி கங்குலி: “காவல்-சாவுகளைப் புலனாய்வு செய்யும் காவல்துறை அதிகாரிகள் மிகப் பல நேரம் குற்றத்துக்குப் பொறுப்பானவர்களை நீதிமுன் நிறுத்துவதைக் காட்டிலும் தம் கூட்டாளிகளைப் பொத்திக் காப்பதில்தான் கூடுதலாக அக்கறை கொண்டுள்ளனர்.”

“இந்தியக் காவல்துறையினர் இந்தச் சாவுகள் தற்கொலை, நோய் அல்லது இயற்கைக் காரணங்களால் ஏற்பட்டவை என்று சொல்வதே வாடிக்கையாக உள்ளது. ஆனால் பலநேரம், பாதிப்புற்றவர்களின் குடும்பத்தினர் சித்திரவதையாலும் பிறவகைக் கெடுநடத்துமுறையாலும் சாவு ஏற்பட்டதாகக் குற்றஞ்சாட்டுகின்றனர். வழக்குப் பதிவு செய்தல், கைது செய்யப்பட்டவர்களை நடத்துதல், கேள்வி கேட்டு விசாரணை செய்தல் உட்பட காவல்துறைப் பணியின் பல்வேறு கூறுகளையும் பற்றிய சட்டச் செயலாக்கத்துக்கான நடைமுறைகளை இந்தியச் சட்டமும் உச்ச நீதிமன்றமும் வகுத்துரைத்துள்ளன. ஆனால் சான்று திரட்டச் சரியான பயிற்சியும் மேற்பார்வையும் வளங்களும் இல்லாத நிலையில் காவல்துறையினர் தகவல் பெறவோ ஒப்புதல் வாக்குமூலம் பெறவோ சந்தேகக் குற்றவாளிகளை மோசமாக நடத்துகின்றனர். கடுமையாகக் காலணியால் உதைத்தல், கச்சையால் அடித்தல், சிலநேரம் கையில் கயிறு கட்டித் தொங்க விடுதல் உட்பட சித்திரவதைகள் பலவகை. மனித உரிமைக் கண்காணிப்பகம் ஆய்வு செய்த பிணக் கூறாய்வு அறிக்கைகள் காட்டும் காயங்களும் குருதிச் சிதைவுகளும் முரட்டடி வன்முறையின் அடையாளங்கள் ஆகும்.

மனித உரிமைக் கண்காணிப்பகம் முதன்மையாக எடுத்துக்காட்டும் நேர்வுகளில், வழக்கறிஞர்கள் அல்லது உரிமைக் காப்பாளர்களின் துணைகொண்டு குடும்பத்தினர் நீதித்துறையிடம் தீர்வு நாடினார்கள், இதனால் மருத்துவப் பதிவுருக்களும் உரிய பிற ஆவணங்களும் பொதுவெளியில் கிடைக்கும் நிலையில் இருந்தன. பல வழக்குகள் இன்னும் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. சிலவற்றில் நீதிமன்ற ஆணைப்படி நடந்துள்ள தற்சார்புப் புலனாய்வுகளில் உடல்வகையில் மோசமாக  நடத்தியதற்குத் தெளிவான சான்று கிடைத்திருப்பதோடு கடுமையான வழிமுறை-மீறல்களும் வெளிப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, மும்பையில் காவலில் இருந்தவர் இறந்த பின் நடந்த விசாரணையில், “குற்றஞ்சாட்டப்பட்ட எதிரி கடுங்குற்றவாளி என்பதால் எந்தத் தகவலும் தர மறுத்து விட்டதே” நிகழ்வுக்குக் காரணம் என்றார் ஒரு காவலர்.

இந்தியாவில் காவல்துறை சந்தேகக் குற்றவாளிகளை அடித்துக் குற்றத்தை ஒப்புக்கொள்ளச் செய்வது ஏற்புடைத்தன்று என்பதை சித்திரவதைக் குற்றத்துக்காக அதிகாரிகள் மீது வழக்குத் தொடர்ந்த பிறகுதான் கற்றுக் கொள்வார்கள்.



முதலில் 1997இல் டி.கே. பாசு –எதிர்- மேற்கு வங்காளம் என்ற வழக்கில் உச்ச நீதிமன்றம் காவல்-முறைகேட்டைத் தடுப்பதற்கென்று வகுத்தளித்த விதிகளை இந்தியக் காவல்துறை கடைப்பிடிக்கவில்லை. பிறகு இந்த விதிகள் திருத்தப்பட்ட குற்ற நடைமுறைச் சட்டத்தில் சேர்க்கப்பட்டு விட்டன. இவற்றின் படி காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்யும் போது தங்களைத் தெளிவாக அடையாளங்காட்டிக் கொள்ள வேண்டும்; கைது நடைபெறும் நாள், நேரம் குறிப்பிட்டுத் தற்சார்பான சாட்சி ஒருவரின் ஒப்பத்துடனும் கைது செய்யப்படுகிறவரின் மேலொப்பத்துடனும் கைதுக் குறிப்பாணை தயாரிக்க வேண்டும்; கைதுச் செய்தியையும் சிறைவைத்துள்ள இடத்தையும் நெருங்கிய உறவினருக்குத் தெரிவிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

விதிகளின் படி, கைது செய்யப்படுகிறவர்களைக் காவலில் எடுத்தபின் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும். அப்போதே உடலில் காயங்கள் இருப்பின் மருத்துவர் அவற்றைப் பட்டியலிட வேண்டும் – புதிய காயங்கள் ஏற்பட்டால் காவலில் இருக்கையில் காவல்துறை முறைகேடு நிகழ்ந்ததைக் காட்டுவதாக இருக்கும். கைது செய்யப்படும் ஒவ்வொருவரையும் 24 மணி நேரத்துக்குள் ஒரு நடுவரிடம் முன்னிலைப்படுத்த வேண்டும் என்பது சட்டம்.

இந்த நடைமுறைகளைத் தவிர்ப்பது காவல் முறைகேடுகளுக்கு வசதிசெய்து கொடுப்பதாகும் என்கிறது மனித உரிமைக் கண்காணிப்பகம். அரசாங்கத் தரவுகளின்படி, 2015இல் நடைபெற்ற 97 காவல்-சாவுகளில் 67இல் காவல்துறை சந்தேகக் குற்றவாளிகளைக் கைது செய்து 24 மணி நேரத்துக்குள் நடுவரிடம் முன்னிலையாக்கத் தவறியது, அல்லது அவர்கள் கைது செய்யப்பட்டு 24 மணி நேரத்துக்குள் இறந்து விட்டனர். தமிழ்நாடு மாநிலத்தில் ஒரு நடுவர் மனித உரிமைக் கண்காணிப்பகத்திடம் சொன்னார், “காவல் துறையினர் தமக்கென்று ஒரு காவல் நடைமுறைச் சட்டம் வைத்துள்ளார்கள். அவர்கள் குற்ற நடைமுறைச் சட்டத்தைக் கடைப்பிடிப்பதில்லை.

காவல்-முறைகேடுகளுக்குப் பொறுப்புக்கூறலை உறுதி செய்திடும் பொருட்டு, இந்தியச் சட்டப்படி ஒவ்வொரு காவல்-சாவு குறித்தும் நீதித்துறை நடுவர் விசாரணை நடத்த வேண்டும். காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் என்பது எதிர்பார்ப்பு. சாவு குறித்து அதில் தொடர்புற்றிராத ஒரு காவல் நிலையம் அல்லது வேறு முகமை புலனாய்வு செய்ய வேண்டும். மேலும், ஒவ்வொரு காவல்-சாவு வழக்கும் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அறிக்கையிடப்பட வேண்டும். நடுவர் விசாரணை முடிவுகளைத் தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு அறிக்கையிடுவதோடு, பிணக் கூறாய்வு அறிக்கையை அனுப்பி வைப்பதும் காவல்துறையின் கடமையாகும். தேசிய மனித உரிமை ஆணைய விதிகளின் படி பிணக் கூறாய்வைப் படம்பிடிக்கவும், பிணக் கூறாய்வு அறிக்கையை மாதிரிப் படிவத்துக்கிணங்க அணியப்படுத்தவும் வேண்டும்.



இந்த நடவடிக்கைகள் பலநேரம் அசட்டை செய்யப்படுவதை மனித உரிமைக் கண்காணிப்பக ஆய்வும், நீதிமன்ற முடிவுகளும், ஊடகச் செய்திகளும் காட்டும். அடாச் செயலை ஆய்வதற்காகத் துறைக்குள் நடைபெறும் அக விசாரணைகள் காவல் துறையினரைக் குற்றவாளியாகக் காண்பது அரிதே. காவல்துறையும் தொடர்புற்ற காவல் அதிகாரிகளுக்கு எதிராக முறையீடுகள் தாக்கல் செய்ய விடாமல் காலந்தாழ்த்தலாம் அல்லது மறித்து நிற்கலாம். 2015ஆம் ஆண்டு காவல் துறையினர் 97 காவல்-சாவுகளில் 33 தொடர்பாக மட்டுமே வழக்குகள் பதிந்தனர். 2014 வரை தேசிய மனித உரிமை ஆணைய உறுப்பினராயிருந்த சத்தியபிராத்த பால் சொன்னார்: “காவல்துறை அகப் புலனாய்வின் நோக்கமெல்லாம் உண்மையை மறைத்து வெள்ளையடிப்பதுதான்.”



தேசிய மனித உரிமை ஆணையமும் மாநில மனித உரிமை ஆணையங்ககளும் விசாரணை நடத்தவும் இழப்பீடு தரவும் பரிந்துரைக்கின்றனவே தவிர, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவோ வழக்குத் தொடுக்கவோ பரிந்துரைத்தல் அரிதிலும் அரிது.    இறந்தோர் குடும்பத்தினர், குறிப்பாகப் பொருளியல் வகையிலோ சமூக வகையிலோ ஒதுக்கப்பட்டவர்கள் நீதிதேடுவாராயின், காவல்துறையின்  உருட்டல் மிரட்டலுக்கும் அச்சுறுத்தலுக்கும் முகங்கொடுக்க நேரிடக் கூடும் என்கிறது மனித உரிமைக் கண்காணிப்பகம்.

காவல்துறையினர் சித்திரவதை மற்றும் பிறவகைக் கெடுநடத்தைமுறையைப் பயன்படுத்துவதும், முறைகேட்டால் பாதிப்புற்றவர்களுக்கு நீதி வழங்கத் தவறுவதும் பன்னாட்டு மனித உரிமைச் சட்டத்தின்படி இந்தியாவுக்குள்ள கடப்பாடுகளை மீறுவதாகும். இந்தியா, குடியியல் அரசியல் உரிமைகள் பற்றிய பன்னாட்டு ஒப்பந்தத்துக்கு ஏற்பிசைவு தந்திருப்பதோடு, சித்திரவதை, பிறவகைக் கொடிய, மனிதத்தன்மையற்ற அல்லது இழிவான நடத்துமுறை அல்லது தண்டனைமுறைக்கு எதிரான ஒப்பந்தத்திலும் ஒப்பமிட்டுள்ளது. காவலில் இருப்பவர்களுக்கு எதிரான சித்திரவதையையும் பிறவகை மோசமான முறைகேடுகளையும் தடுக்க முயலும் கட்டாயக் காணமற்போகச் செய்தலுக்கு எதிரான பன்னாட்டு ஒப்பந்தத்திலும் இந்தியா ஒப்பமிட்டுள்ள போதிலும் இன்னும் அதற்கு ஏற்பிசைவு வழங்கவில்லை.

“காவல்துறையினர் சித்திரவதையையும் மோசமாக நடத்துவதையும் தடுப்பதற்கான விதிகளைக் கடைப்பிடித்தால் காவல்-சாவுகளைத் தடுக்க முடியும்” என்கிறார் கங்குலி: “சட்டத்தைச் செயலாக்கும் கடமை ஒப்படைக்கப்பெற்றவர்கள் பொறுப்புக்கூறும்படி செய்யப்பட்டால்தான் இந்தியா சட்டத்தின் ஆட்சி குறித்துப் பெருமை பேச முடியும்.”

காவல்துறைக் காவலில் நடந்த சாவுகள் குறித்துக் குடும்பத்தினர் – அறிக்கையிலிருந்து

அக்னேலோ வல்தரிஸ் – மகாராட்டிரம்
அக்னேலோ வல்தரிஸ் (வயது 25) என்பவரையும் மேலும் மூவரையும் திருட்டுக் குற்றம் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்த காவலர்கள் அவர்களை சட்டவிரோதமாகக் காவலில் வைத்து, அடித்துப் பாலியல் முறைகேடு செய்ததாக சொல்லப்படுகிறது. இரண்டு நாள் காவலுக்குப் பின், சட்டப்படிக் கட்டாயம் செய்ய வேண்டிய மருத்துவப் பரிசோதனையின் போது சித்திரவதை குறித்துச் சொல்லக் கூடாது என்று காவல்துறையினர் அவர்களை எச்சரித்தனர். வல்தரிஸ் மறுத்து விட்டார். காவல் துறை கைதுசெய்து மூன்று நாள் கழித்து 2014 ஏப்ரல் 18ஆம் நாள் காலை -- ஒரு நடுவரிடம் முன்னிறுத்தப்படுவதற்கு முன்பே -- வல்தரிஸ் இறந்து போனார். காவலிலிருந்து தப்ப முயன்ற போது அவர் ரயிலில் அடிபட்டு இறந்து போனதாக வதாலா இரயில்வே காவல் நிலைய அதிகாரிகள் கூறினர். ஆனால், அவர் குடும்பத்தினரும், வல்தரிசுடன் காவலில் இருந்த சாட்சிகளும் அவர் காவல்துறையினர் செய்த சித்திரவதையால் இறந்ததாகச் சொல்கின்றனர்.

வல்தரிஸ் இறந்த பின் அவர் தந்தை லியோனார்டு வல்தரிஸ் காவல்துறையிடம் ஒரு முறையீடு தாக்கல் செய்தார். காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்காத போது அவர் மும்பை பம்பாய் உயர் நீதிமன்றத்தை அணுகினார். உயர் நீதிமன்றம் உள்ளூர்க் காவல்துறை நடத்திய “புலனாய்வு வெளிப்படையானதா, நியாயமானதா” என்பது குறித்து சந்தேகங்கள் இருப்பதாகக் கூறி, நடுவண் புலனாய்வுக் கழகம் (சிபிஐ) புதிதாகப் புலாய்வு செய்ய ஆணையிட்டது. காவல் துறையினர் சந்தேகக் குற்றவாளிகள் நால்வரையும் சட்டவிரோதமாகச் சிறைப்படுத்தி, பிறகு பொய்ப் பதிவுருக்களைத் தயாரித்தனர் என்று சிபிஐ கண்டறிந்தது. இம்முறைகேட்டுக்குப் பொறுப்பான காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குத் தொடுக்கப்படவில்லை. லியோனார்டு வல்தரிஸ் மருத்துவமனையில் கடைசி முறையாகத் தன் மகனைக் கண்டது இப்போதும் நினைவில் இருப்பதாகச் சொல்கிறார்:

என் மகன் கையில் கட்டுப் போட்டிருந்தது. இரவு முழுக்கத் தன்னைக் காவல்துறையினர் அடித்ததாக அவன் கூறினான். “அப்பா, அவங்க என்னைக் கொன்னுடுவாங்க” என்று என்னிடம் சொன்னான்... நான் காவல்துறையினரை நம்பி அவர்களுக்கு முழுமையாக ஒத்துழைப்புக் கொடுத்தேன். இப்போது நான் எந்நேரமும் குற்றநெஞ்சோடு வாழ்கிறேன். நான் என் மகனைக் காவல்துறையிடம் ஒப்படைக்காமல் இருந்திருந்தால், அவன் உயிரோடு இருந்திருப்பான்.


காசி நசிருதீன், மேற்கு வங்காளம்
காசி நசிருதீன் (வயது 35) மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் கட்சியாகிய திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் உள்ளூர்த் தலைவர். ஹூக்ளி மாவட்டத்தில் 2013 ஜனவரி 18ஆம் நாள் சிறைப்படுத்தப்பட்டார். தனியக்காளிக் காவல் நிலையத்தில் கழிப்பறையில் விழுந்து, அதனால் ஏற்பட்ட காயங்களால் நசிருதீன் இறந்து போனதாகக் காவல்துறை சொல்ல, அவர் மனைவி மனசா பீபி தன் கணவரை அங்கே அடித்துக் கொன்று விட்டனர் என்கிறார்.

தற்சார்பான புலனாய்வு கோரி மனசா பீபி ஆளுநருக்கு எழுத, வழக்கு மேற்கு வங்காள மாநிலக் குற்றப் புலனாய்வுத் துறையிடம் (சிஐடி) கையளிக்கப்பட்டது. ஆனால், மாநிலக் காவல்துறையின் ஒரு பகுதியே ஆன சிஐடி அதிகாரிகள் நசிருதீன் சாவைச் சரிவரப் புலனாய்வு செய்யத் தவறி விட்டார்கள். 2013 மே மாதம், நசிருதீன் வழக்கை நடுவண் புலனாய்வுக் கழகத்துக்கு மாற்றுவதற்கான விண்ணப்பத்தின் மீது தீர்ப்புச் சொல்லிய போது கல்கத்தா உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் காவல்துறை கைதுகள் குறித்தான நடைமுறைகளை மீறி விட்டதோடு, சரியான விசாரணை நடத்தவும் தவறி விட்டதாக அறுதியிட்டுச் சொன்னது. தீர்ப்பு கூறியதாவது: “மாநிலப் புலனாய்வு முகமை நடத்திய புலனாய்வு முழுவதும் சேதக் கட்டுப்பாட்டுக்கான கையறு முயற்சியாகவே தோன்றுகிறது.”

சியாமு சிங், உத்தரப் பிரதேசம்
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் மாவட்டத்தில் குவார்சி காவல் நிலையத்தில் காவல்துறைக் காவலில் 2012 ஏப்ரல் 15ஆம் நாள் சியாமு சிங் இறந்த பிறகு, அவர் தற்கொலை செய்து கொண்டார் என்றது காவல்துறை. ஆனால் அவரோடு கூட கைது செய்யப்பட்ட அவர் சகோதரர் ராமு சிங், தாங்களிருவரும் கைது செய்யப்பட பின் உள்ளாடை வரை அம்மணமாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாகச் சொன்னார்:

“அவர்கள் (காவலர்கள்) எங்களைத் தரையில் கிடத்தினர். நான்கு பேர் என்னை அழுத்திப் பிடித்துக் கொண்டனர். ஒருவர் தொடர்ந்து என் மூக்கினுள் தண்ணீர் ஊற்றினார். எனக்கு மூச்சு முட்டியது. என்னிடம் முடிந்ததும் சியாமுவிடம் தொடங்கினர். சியாமு உணர்விழந்து விட்டார். அவர்கள் கவலைப்படலாயினர், அவர் சாகப் போகிறார் என்று தமக்குள் பேசிக் கொண்டனர். ஒருவர் சிறு பொட்டலம் கொண்டுவந்து சியாமுவின் வாயில் பிரித்துக் கொட்டினார்.”

சித்திரவதையால் ஏற்பட்ட சாவென்று காவல்துறையிடம் குடும்பத்தினர் ஏழு காவல்துறை அதிகாரிகள் மீது முறையீடு தாக்கல் செய்தனர். அன்று தொடக்கம் காவல்துறையினர் பொறுப்புக்கூறலை உறுதி செய்யும் முயற்சிகளைத் திரும்பத் திரும்பத் தேக்கி வருகின்றனர். ராமு தன் சகோதரரின் வழக்கில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் காவல்துறையினரின் அச்சுறுத்தலுக்கும் தொல்லைக்கும் முகங்கொடுக்க வேண்டியிருப்பதாக மனித உரிமைக் கண்காணிப்பகத்திடம் கூறினார்:

அவர்களுக்கு நான் புரையோடிய புண்ணாகி விட்டதாகவும் என்னை அறுத்தெறிய வேண்டும் என்றும் என்னிடம் காவல்துறையினர் சொல்லிக் கொண்டிருந்தனர்: “நீ எங்களுக்கு அப்படித்தான் ஆகி விட்டாய். எச்சரிக்கையாக இரு, இல்லா விட்டால் சியாமுக்கு நடந்ததே உனக்கும் நடக்கும்.”              

Your tax deductible gift can help stop human rights violations and save lives around the world.

Region / Country