இலங்கையின் வரிக் கொள்கைகள், 2022 ஆம் ஆண்டின் நாட்டின் அழிவுகரமான பொருளாதார நெருக்கடியின் போது அதனை உந்தித் தள்ளும் ஒரு வகிபங்கினை வகித்ததுடன், கல்வி மற்றும் ஏனைய பொதுச் சேவைகள் என்பவற்றுக்கு தொடர்ந்தும் குறைந்த அளவில் நிதிகள் ஒதுக்கப்படும் நிலைமைக்குப் பங்களிப்புச் செய்து வருகின்றன.
கம்பெனித் துறை வரி விலக்குகள் உயரளவிலான செலவுகளைக் கொண்டிருப்பதுடன், அவற்றின் வினைத்திறன் கேள்விக்குரியதாக இருந்து வருகின்றது. மேலும், அவற்றை இலகுவில் தவறான விதத்தில் பயன்படுத்தக் கூடிய நிலையும் காணப்படுகின்றது. எனவே, இந்த வரி விலக்குகளை ஒழிக்கும் விடயத்தை அரசாங்கம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனைய முற்போக்கு இயல்பிலான வழிமுறைகளை அது பின்பற்ற வேண்டும்,
இலங்கையின் நிலை தற்போதைய சர்வதேச வரி முறையின் கீழ் பல அரசாங்கங்கள் எதிர்கொண்டு வரும் சவால்களை பிரதிபலிக்கின்றது. மனித உரிமைகளை வலுவூட்டும் பொருட்டு சர்வதேச விதிமுறைகளை கட்டி எழுப்புவதற்கான ஐ நா வரி ஒப்பந்தம் ஒன்று தொடர்பாக தற்பொழுது இடம்பெற்று வரும் பேச்சு வார்த்தைகளின் முக்கியத்துவத்தையும் அது எடுத்துக் காட்டுகின்றது.
(கொழும்பு, அக்டோபர் 15, 2025) - இலங்கையின் வரிக் கொள்கைகள் நாட்டின் 2022 அழிவுகரமான பொருளாதார நெருக்கடியின் போது அதனை உந்தித் தள்ளும் ஒரு முக்கியமான வகிபாகத்தை வகித்தன; கல்வி மற்றும் ஏனைய பொதுச் சேவைகளுக்கான நிதி ஒதுக்குகள் தொடர்ந்தும் குறைந்த மட்டத்தில் நிலவி வருவதற்கும் அவை பங்களிப்புச் செய்திருந்ததாக இன்று வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்காவின் அரசாங்கம்; மனித உரிமைகள் தொடர்பான அதன் கடப்பாடுகளை நிறைவேற்றி வைப்பதற்கு உடனடியாக வழிமுறைகளை பின்பற்ற வேண்டியிருப்பதுடன், தற்பொழுது போதிய அளவிலான வருவாய்களை பெற்றுத் தர முடியாத நிலையில் இருந்து வரும் அதே வேளையில், கம்பெனிகளுக்கும், செல்வந்தர்களுக்கும் சாதகமாக இருந்து வரும் வரி முறையை மாற்றியமைக்கும் பொருட்டு சீர்திருத்தங்களை எடுத்து வருதல் வேண்டும்.
வரி விலக்குகள், வளப் பற்றாக்குறைகளை எதிர்கொண்டு வரும் பாடசாலைகள்: குறைந்த வரிகள் இலங்கையின் பொருளாதார நெருக்கடியைத் தூண்டி, முன்னணி ஸ்தானத்தில் இருந்து வந்த அதன் கல்வித் துறையை எவ்வாறு சீர்குலைத்தது என்ற தலைப்பிலான இந்த 101 பக்க அறிக்கை, ஒன்றன்பின் ஒன்றாக வந்த இலங்கையின் அரசாங்கங்கள் குறைந்த அளவிலான வருவாய்களுக்கு வழிகோலிய வரிக் கொள்கைகளை எவ்வாறு பின்பற்றி வந்தன என்பதனையும், அது இலங்கை அதன் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலைமைக்கு பங்களிப்புச் செய்தது மட்டுமன்றி, மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதம் என்ற முறையில் பொதுக் கல்விக்கான செலவொதுக்குகளில் பல தசாப்த கால வீழ்ச்சியை எவ்வாறு எடுத்து வந்தது என்பதனையும் குறிப்பிடுகின்றது. கல்விக்கான இலங்கையின் தற்போதைய வரவு செலவுத் திட்ட ஒதுக்கு உலகிலேயே ஆகக் குறைந்த விகிதமாக இருந்து வருகிறது. மேலும், அந்த அறிக்கை குறைந்த அளவிலான நிதி ஒதுக்குகள் பிள்ளைகளின் கல்வி உரிமைகள் மீது எடுத்து வந்திருக்கும் தாக்கங்களையும் ஆவணப்படுத்துகின்றது. கம்பெனித் துறை வரி மற்றும் தனியார் வருமான வரி என்பவற்றிலிருந்து கிடைக்கும் வருவாய்கள் குறைவாக இருந்து வரும் காரணத்தினால் வரிகளில் 80 சதவீதம் சராசரியாக பண்டங்கள் மற்றும் சேவைகள் வரியிலிருந்து கிடைக்கும் ஒரு நிலைமை தோன்றியுள்ளது. இந்த வரிகள் மிக வறிய மக்களின் வருமானத்தில் ஆகக்கூடிய பங்கினை கோரும் காரணத்தினால் அவை பொதுவாக பிற்போக்கு இயல்பைக் கொண்டவையாக இருந்து வருகின்றன.
"இலங்கை தசாப்தங்களாக அதன் அரசாங்கத்தின் வருவாய்களை இல்லாமல் செய்யும் பொருளாதாரக் கொள்கைகளின் பணயக் கைதியாக இருந்து வந்துள்ளது. அது மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி என்ற விடயம் தொடர்பாக ஒரு குறுகிய கண்ணோட்டத்துடன் செயற்பட்டு வருவதனை இது பிரதிபலிக்கின்றது" என்கிறார் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சிரேஷ்ட பொருளாதார நீதி ஆய்வாளரான சாரா சாதூன். "கல்விக்கான செலவினம் வளர்ச்சிப் போக்குடன் ஒப்பிடும் பொழுது மிகவும் குறைந்த மட்டத்தில் வீழ்ச்சி கண்டுள்ளது என்பதும், நாடு பொதுக் கல்வியில் உலகளாவிய ரீதியில் முன்னணி ஸ்தானத்திலிருந்து இப்பொழுது கடுமையாக பின்தங்கியுள்ளது என்பதுமே நடைமுறையில் இதன் பொருளாகும்".
மனித உரிமைகள் கண்காணிப்பகம் எழுபது பேருக்கு மேற்பட்ட ஆட்களுடன் நேர்காணல்களை நடத்தியது. பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டவர்கள், பொதுக் கல்வி முறைமையுடன் பரிச்சயம் கொண்டவர்கள் மற்றும் இலங்கையின் முதன்மையான பொருளாதார நிபுணர்களின் பரந்த தரப்பினர் ஆகியோர் இதில் அடங்கியிருந்தனர். மேலும், அந்த நிறுவனம் இலங்கையின் வரிக் கொள்கைகள் மற்றும் கல்விச் செலவினம் என்பன சம்பந்தமான ஆராய்ச்சிகள் மற்றும் தரவுகள் என்பன தொடர்பான விரிவான ஒரு பகுப்பாய்வையும் நடத்தியது.
இந்தத் தவறான கொள்கைகள் பிள்ளைகளின் கல்வி உரிமையை மீறியிருக்கும் விடயத்தை மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டறிந்துள்ளது. கல்வித் துறை மீதான இலங்கையின் செலவொதுக்குகளைப் பொறுத்தவரையில், சுதந்திரத்தையடுத்து வந்த இரண்டு தசாப்த காலத்தின் போது காலனித்துவத்துக்குப் பிற்பட்ட நாடுகளில் கல்வித் துறையில் சாதனைகளை நிகழ்த்தி வரும் ஒரு நாடாக இலங்கை இருந்து வந்தது. அப்பொழுது கல்விக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 தொடக்கம் 5 சதவீதம் வரையில் இருந்து வந்தது. ஆனால், அது 2022 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 1.5% ஆக வீழ்ச்சியடைந்திருந்தது. இது உலகிலேயே மிகக் குறைந்த சதவீதமாகும்.
2022 ஏப்ரல் மாதம் இலங்கை அதன் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத ஒரு நிலைமை தோன்றியது. வரி வருவாய்கள் மிக குறைந்த அளவில் இருந்து வந்தமையே அதற்காக காரணமாகும். அது பொருளாதார நெருக்கடியொன்றை துரிதப்படுத்தியது; வாழ்க்கைச் செலவில் ஏற்பட்ட செங்குத்தான அதிகரிப்புடன் இணைந்த விதத்தில் பரவலாக தொழில் மற்றும் வருமான இழப்புக்கள் ஏற்பட்டன. அந்நிலைமை மனித உரிமைகள் மீது மிக மோசமான தாக்கங்களை எடுத்து வந்தது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2019 ஆம் ஆண்டில் தீவிரமான வரி வெட்டுக்களை அறிமுகம் செய்து வைத்ததுடன், அது அரசாங்கத்தின் வருமானங்களின் மீது கடுமையான ஒரு தாக்கத்தை எடுத்து வந்தது. 1970 களின் பிற்பகுதியில் இலங்கை சமூக நலன்புரிச் செலவுகளைக் குறைத்து, வர்த்தகத்தை தாராளமயமாக்கிய சந்தர்ப்பத்தில் பொருளாதாரத்தில் ஒரு நகர்வு ஏற்பட்டது. அச்சந்தர்ப்பத்திலேயே இந்தப் பிரச்சினைகள் தோற்றம் பெற்றதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டறிந்துள்ளது. அதன் விளைவாக, வியாபார வரிகளிலும், ஏனயை வரிகளிலும் ஒரு செங்குத்தான வீழ்ச்சி ஏற்பட்டது. அப்பொழுது இடம்பெற்ற வளர்ச்சியிலிருந்து பொருத்தமான விதத்தில் பயனடைந்து கொள்ளக்கூடிய முற்போக்கு இயல்பிலான ஒரு வரி முறைமை எடுத்து வரப்படவுமில்லை.
குறிப்பாக, பெருமளவுக்கு தவறான விதத்தில் பயன்படுத்தக் கூடிய தெளிவற்ற ஒரு முறைமைக்கு ஊடாக அரசாங்கம் தொடர்ந்தும் கம்பெனிகளுக்கு பரவலான விதத்தில் வரி விலக்குகளை வழங்கி வந்தது. 2022 இல் இந்த வரி விலக்குகளின் மதிப்பு வருவாய்களில் 56% க்கு இணையானதாக அல்லது கல்விக்கான வரவு செலவுத் திட்ட செலவினத்திலும் பார்க்க சுமார் மூன்று மடங்கு அதிகமானதாக இருந்து வந்தது. மேலும், அரசாங்கம் தனியார் வருமானம் மற்றும் சொத்துக்கள் என்பவற்றிலிருந்து மிகச் சிறிய அளவிலான வரிகளை மட்டுமே சேகரித்து வருகின்றது. வரிச் சட்டங்களை அமுல் செய்வதற்குத் தேவையான ஆற்றல் மற்றும் பொறுப்புக் கூறல் என்பவற்றை வரி அறவீட்டுக்குப் பொறுப்பான நிறுவனங்கள் கொண்டிருக்கவில்லை.
சமூக நலன்புரிச் செலவினங்கள் குறித்த முன்னுரிமைகள் பரவலாக நீக்கப்பட்டிருக்கும் பின்னணியில் இந்த அறிக்கை குறிப்பாக கல்வி தொடர்பாக உயரளவில் கவனம் செலுத்கிறது. கல்வித் துறையைப் பொறுத்தவரையில் ஒரு காலத்தில் இலங்கை உலகளாவிய ரீதியில் தலைமைத்துவம் வகிக்கும் நாடாக கருதப்பட்டு வந்தது என்ற பின்னணியில் நோக்கும் பொழுது, தற்பொழுது கல்வி மேம்பாட்டுக்கான உள்ளார்ந்த ஆற்றல் பெருமளவுக்கு பயன்படுத்தப்படாதிருந்து வருவதனை காண முடிகிறது. அதிகளவிலான மக்களுக்கு இலவசமாக ஆரம்ப மற்றும் உயர் நிலைக் கல்வியை அறிமுகப்படுத்தி வைத்த உலகின் முதலாவது நாடுகளில் இலங்கையும் ஒன்றாக இருந்து வந்தது.
கல்விக்கான நிதி ஒதுக்குகள் குறைந்த மட்டத்தில் இருந்து வருவதன் காரணமாக அடிப்படை வளங்களுக்கான செலவினங்களை ஈடு செய்து கொள்ளும் பொருட்டு பாடசாலைகள் கட்டணங்களை அறவிடும் நிலைமை ஏற்பட்டுள்ளது என்ற விடயத்தை மனித உரிமைகள் கண்காணிப்பகம் கண்டறிந்துள்ளது. இத்தகைய கட்டணங்கள் பல குடும்பங்களை பொறுத்தவரையில் கணிசமான அளவிலான சிரமங்களை எடுத்து வருகின்றன. அரச நிதிகள் போதியளவில் இல்லாதிருக்கும் நிலை, மாணவர்களின் சமூக - பொருளாதார அந்தஸ்தின் அடிப்படையில் வளங்களில் பாரிய அளவிலான வேறுபாடுகள் நிலவி வருவதற்;கும் வழிகோலியுள்ளது. குறைந்த அளவிலான கம்பெனித் துறை மற்றும் தனியார் வருமான வரி வருவாய்கள், "மறைமுக வரிகள்" என அழைக்கப்படும் பண்டங்கள் மற்றும் சேவைகள் வரிகள், பெறுமதிசேர் வரி (VAT) போன்றவற்றில் பெருமளவுக்குத் தங்கியிருக்க வேண்டிய ஒரு நிலைமையை உருவாக்கியுள்ளன. இது வறிய மக்கள் மீது மிக மோசமான தாக்கங்களை எடுத்து வருகின்றது.
சுசிகலா ஹட்டன் பிரதேசத்தில் வசித்து வரும் வீட்டு வேலைத் தொழிலாளர் ஆவார். தான் வாரம் ஏழு நாட்கள் வேலை செய்வதன் மூலம் சுமார் 14000 இலங்கை ரூபா ($46) வருமானத்தைப் பெற்றுக் கொள்வதாகவும், பாடசாலையினால் அறவிடப்பட்டு வரும் பல்வேறு கட்டணங்களை செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் கூறுகிறார். அத்தகைய கட்டணங்கள் மாதம் ஒன்றுக்கு சுமார் 500 இலங்கை ரூபாவாக ($1.65) இருந்து வருவதாகவும், பாடசாலைக்கு வெளியில் டியூஷன் வகுப்புகளுக்கு தனது பிள்ளைகளை அனுப்பி வைப்பதற்கு மாதாந்தம் 5000 இலங்கை ரூபாவை ($16.50) செலவிட வேண்டியிருக்கின்றது என்றும் அவர் சொல்கிறார். "ஆசிரியர்கள் புத்தகங்கள் மற்றும் காகிதங்கள் என்பவற்றை வாங்கச் சொல்லும் பொழுது அவற்றை என்னால் வாங்க முடியாதுள்ளது" என்கிறார் அவர். "எனது குடும்பத்தின் பிள்ளைகளுக்கு போஷாக்குள்ள உணவுகளை வழங்குவதற்காக போராடி வருகிறேன்" என்றும் அவர் சொன்னார்.
பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீட்டெடுப்பதற்கென சர்வதேச நாணய நிதியம் 2023 மார்ச் மாதம் இலங்கைக்கு மூன்று பில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகையொன்றுக்கு ஒப்புதல் வழங்கியது. அதனையடுத்து, கடன் கொடுத்தவர்கள் இலங்கையின் கடன்களை மீளமைப்புச் செய்தார்கள். எனினும், இலங்கையின் கடன் திருப்பிச் செலுத்தும் கடப்பாடுகள் மிகவும் உயர் அளவில் இருந்து வருகின்றன. அரசாங்கம் 2024 இல் அதன் வருவாயில் 57 சதவீதத்தை கடன் கொடுத்தவர்களுக்குத் திருப்பிச் செலுத்துவதற்கு பயன்படுத்தியது. 2025 ஜனவரி மாதத்தில் திசாநாயக்கவின் தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. பிற்போக்கு இயல்பிலான வரிகளை குறைத்தல் மற்றும் கல்வியை விருத்தி செய்தல் என்பவற்றையும் உள்ளடக்கிய தீவிரமான பொருளாதார சீர்த்திருத்தங்கள் எடுத்து வரப்படும் என்ற வாக்குறுதியின் அடிப்படையிலேயே அது ஆட்சிக்கு வந்தது.
கம்பெனித் துறைக்கு வழங்கப்பட்டு வரும் வரி விலக்குகள் உயர் செலவுகளை கொண்டிருப்பதுடன், அவற்றின் வினைத்திறன் கேள்விக்குரியதாகவும் இருந்து வருகின்றது. மேலும், அவற்றை எளிதில் தவறாக பயன்படுத்தக் கூடிய நிலையும் காணப்படுகின்றது. அதன் காரணமாக, அத்தகைய வரி விலக்குகளை நீக்கும் விடயத்தை அரசாங்கம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. செல்வ வரி போன்று ஏனைய முற்போக்கு இயல்பிலான வரி வழிமுறைகளையும் அரசாங்கம் பின்பற்றுதல் வேண்டும்.
இலங்கையின் நிலை தற்போதைய சர்வதேச வரி முறையின் கீழ் பல அரசாங்கங்கள் எதிர்கொண்டு வரும் சவால்களை பிரதிபலிக்கின்றது. உதாரணமாக, வரிக் குறைப்புப் போட்டி, அரசாங்கங்கள் வரி ஊக்குவிப்புகளை வழங்க வேண்டிய அழுத்தங்களை எடுத்து வருகின்றது. அது தூண்டி விடும் மிக மோசமான ஓட்டப் பந்தயம் காரணமாக மனித உரிமைகளை நிறைவேற்றி வைப்பதற்குத் தேவையான வருவாயை பல அரசாங்கங்கள் இழந்து வருகின்றன. ஐ நா வரி ஒப்பந்தம் ஒன்றை எடுத்து வருவது தொடர்பாக தற்பொழுது நிகழ்ந்து வரும் பேச்சு வார்த்தைகளின் முக்கியத்துவத்தை இச்சவால்கள் எடுத்துக் காட்டுகின்றன. மனித உரிமைகளை வலுவூட்டும் சர்வதேச விதிமுறைகளை அறிமுகம் செய்து வைப்பதற்கும், இந்த எதிர்மறைப் போக்கை முடிவுக்கு கொண்டு வருவதற்கென அரசாங்கங்களுக்கு உயரளவில் ஒத்துழைப்பை வழங்குவதற்கும் இத்தகைய ஒரு வரி ஒப்பந்தம் அவசியமானதாகும்.
சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தின் கீழ் சுகாதாரம், கல்வி, சமூகப் பாதுகாப்பு, போதிய வாழ்க்கைத் தரம் என்பவற்றுக்கான உரிமைகளையும், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளையும் படிப்படியாக சாதித்துக் கொள்ளும் பொருட்டு "நாடுகள் தமக்குக் கிடைக்கும் வளங்களை உச்ச மட்டத்தில்" பயன்படுத்திக் கொள்வதற்குத் தேவையான வழிமுறைகளை முன்னெடுப்பதற்கான கடப்பாடுகளை அரசுகள் கொண்டுள்ளன. தனிப்பட்ட முறையில் செயல்படுவதற்கு மட்டுமின்றி, சர்வதேச உதவி மற்றும் ஒத்துழைப்பு என்பவற்றுக்கு ஊடாக இயங்குவதற்கான கடப்பாட்டையும் அரசுகள் கொண்டுள்ளன. இது அரசின் அரசிறை நடைமுறைகள் மற்றும் வரிக் கொள்கைகள் உள்நாட்டு ரீதியிலும், அதே போல சர்வதேச ரீதியிலும் தாக்கங்களை எடுத்து வரும் விடயத்தை சுட்டிக்காட்டுகின்றது.
கல்வி சம்பந்தப்பட்ட செலவுகளில் உதவுவதற்கென ஒரு சில குடும்பங்களுக்கு 6000 இலங்கை ரூபா ($20) உதவித் தொகையை வழங்குவது போன்ற ஒரு சில சிறந்த வழிமுறைகளை இலங்கையின் புதிய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. ஆனால், அது கல்விக்கான வரவு செல்வத் திட்ட ஒதுக்குகளை மிகச்சிறு அளவிலேயே அதிகரித்துள்ளது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4 தொடக்கம் 6 சதவீதம் வரையிலான தொகையை கல்விக்கு ஒதுக்குவது என்ற சர்வதேச ரீதியில் உடன்பட்டிருக்கும் தர அளவுகோலை எட்டும் குறிக்கோளுடன் கல்விக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்குகளை அது தொடர்ச்சியாக அதிகரித்து வர வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வின் அரசாங்கம் அதன் மனித உரிமைகள் கடப்பாடுகளை மேம்படுத்தும் பொருட்டு உடனடியாக வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டியிருப்பதுடன், தற்பொழுது போதிய வருவாய்களை எடுத்து வரத் தவறும் அதே வேளையில், கம்பெனிகளுக்கும், செல்வந்த நபர்களுக்கும் சாதகமான விதத்தில் செயல்பட்டு வரும் வரி முறைமையை மாற்றியமைப்பதற்கு சீர்திருத்தங்களையும் எடுத்து வருதல் வேண்டும்.
"இலங்கையின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டிருக்கும் சோதனை, மனித உரிமைகளை நிறைவேற்றி வைப்பதற்கு வளர்ச்சி மட்டும் போதியதாக இருந்து வர மாட்டாது என்ற விடயத்தை தெளிவாக எடுத்துக் காட்டுகிறது" என்கிறார் சாதூன். "அனைத்து இலங்கையர்களுக்கும் பயனளிக்கும் கல்வி மற்றும் ஏனைய பொதுச் சேவைகள் என்பவற்றுக்கு போதியளவில் நிதி ஒதுக்குகளை மேற்கொள்வதற்கென அரசாங்கம் முற்போக்கு இயல்பிலான ஒரு வரி முறையை ஸ்தாபித்து, அதன் நிதிகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்".