Skip to main content

இலங்கை

2024ஆம் ஆண்டிற்குரிய நிகழ்வுகள்

ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனுரகுமார திஸ்ஸநாயக்கவின் படத்தினை அச்சிட்டு வெளியிட்டுள்ள செய்தித்தாள்களின் முதல்பக்கங்கள், கொழும்பு, இலங்கை, 23 செப்ரெம்பர், 2024

© 2024 AP Photo/Eranga Jayawardena

செப்ரெம்பர் மாதத்தில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க தோற்கடிக்கப்பட்டு தேசிய மக்கள் சக்தி எனும் இடதுசாரி கூட்டணியினைச் சேர்ந்த அனுர குமார திஸ்ஸநாயக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கை அரசியலில் புதியதோர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. திஸ்ஸநாயக்க சமத்துவமான பொருளாதாரக் கொள்கைகளை ஏற்படுத்துவதாகவும், ஊழலுக்கெதிரான போராட்டம் மற்றும் மோசமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினை ஒழித்தல் போன்றவற்றின் மூலமும் நீண்டகாலமாக காணப்பட்டுவந்த சில மனிதஉரிமை மீறல்களையும் எதிர்கொள்ளவிருப்பதாக வாக்குறுதி அளித்திருந்தார்.

ஆயினும் முன்னரிருந்த ஜனாதிபதிகளைப்போல அவரும் 1983 – 2009ம் ஆண்டுவரை இலங்கை அரசாங்கத்திற்கும் பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில்(LTTE) நடந்த உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற மீறல்களுக்கான பரந்தளவிலான பொறுப்புக்கூறலுக்கு ஆதரவளிக்கவில்லை.

நவம்பர் 14 இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலில் திஸ்ஸநாயக்கவின் தேசிய மக்கள் சக்தியானது பாராளுமன்றத்தில் பெரும்பான்மையினைப் பெற்று வெற்றி பெற்றிருந்தது.

அரசாங்கம் தனது வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த தவறியதன் பின்னர் உலக வங்கியின் தினமொன்றுக்கு 2.15 அமெரிக்க டொலர் என்ற தீவிர வறுமைக் கோட்டுக்கு கீழே வாழும் மக்களின் அளவு ஏறக்குறைய சனத்தொகையின் 26%ஆக இருமடங்காகியதைத் தொடர்ந்து 2022ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார நெருக்கடியானது தீவிரமடைந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் கண்டுபிடிப்புக்கள் வளர்ச்சிக் குறைபாடுகளினால் பாதிக்கப்படும் சிறுவர்களின் விகிதாசாரம் அதிகரித்திருப்பதாக குறிப்பிடுகின்றன. பல குடும்பங்கள் தமது கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான உரிமையுடன் தொடர்புபட்ட முன்னர் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பொருட்களையும் சேவைகளையும் அணுகுவதில் சவால்களை எதிர்கொள்கின்றன.

ஒக்ரோபர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையானது இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கும் அறிக்கையிடுவதற்கும், எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச விசாரணைகளுக்கு ஆதரவளிக்கும்விதத்தில் நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின்போது இழைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படும் குற்றங்களுக்கெதிரான ஆதாரங்களைச் சேகரிக்கும்விதத்திலும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகரின் கால எல்லையினை ஒரு வருடத்தினால் அதிகரித்திருந்தது.

பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள்

பொருளாதார அவசரநிலையின் காரணமாக போராட்டங்கள் வெடித்து இரண்டு வருடங்களின் பின் சில பெரும்பாகப் பொருளியல் சுட்டிகள் நிலையானதன்மையினை எட்டியிருந்தாலும், மில்லியன் கணக்கான மக்கள் தமது பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள்மீது இழைக்கப்பட்ட தீங்குகளினால் தொடர்ந்தும் பாதிக்கப்படுகின்றனர். உயர் நீதிமன்றத் தீர்;ப்பொன்றின்படி இந்த நெருக்கடியானது அரசியல் தலைவர்களினால் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற நிதிமுகாமைத்துவத்தினால் தூண்டப்பட்டதாகும். சர்வதேச நாணய நிதியமானது தனது 3 பில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை ஆட்சி மறுசீரமைப்பு, அரச வருமானத்தினை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் அரச செலவினைக் கட்டுப்படுத்தல் போன்றவற்றுக்காக ஒதுக்கீடுசெய்துள்ளது.

ஆயினும், சர்வதேச நாணய நிதிய திட்டத்தின்கீழ் விக்ரமசிங்கவின் நிர்வாகத்தினால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகள் மானியங்களை நீக்குதல் மற்றும் கடுமையான விற்பனை வரிவிதிப்பு போன்றவற்றின்மூலம் பொருளாதார மீட்பின் சுமையினை பெரும்பாலும் குறைந்த வருமானத்தினைப் பெறுகின்ற மக்கள்மீது சுமத்தியது. அதிகரித்த பணவீக்கம் மற்றும் குறைந்துவந்த வருமானத்தின் மத்தியில் அநேகமான மக்கள் தமக்கான வாழ்வாதாரத்தினையும் ஏனைய உரிமைகளையும் பெற்றுக்கொள்வதற்குச் சிரமப்பட்டனர். அரச பொதுச் சேவைகளுக்கான செலவுகளைக் குறைத்தமை மற்றும் குறைவான அரச வருவாய் போன்றவற்றின் காரணமாக - இலங்கையில் வரலாற்றுரீதியாக வலுவாக இருந்துவந்த - கல்வி மற்றும் சுகாதார சேவைகளை அணுகுவதிலும் அவற்றை கட்டுப்படியானவிதத்தில் பெற்றுக்கொள்வதிலும் அவர்கள் சிரமங்களை எதிர்கொண்டனர்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டமானது உள்நாட்டு மொத்த தேசிய உற்பத்தியின் 0.6 வீதத்தினை சமூக பாதுகாப்புத் திட்டங்களில் செலவுசெய்ய அனுமதிக்கின்ற ‘சமூக செலவினங்; களுக்கான வரையறையினை” உள்ளடக்கியிருக்கின்றது, ஆனால் இது அபிவிருத்தியடைந்துவருகின்ற நாடுகளின் சராசரி பெறுமதியான 1.6 வீதத்தினைவிடக் குறைந்ததாக இருக்கின்றது.

பொறுப்புக்கூறல் மற்றும் நீதி

ஒக்ரோபர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையானது இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கும் அறிக்கையிடுவதற்கும், எதிர்காலத்தில் தேசிய மற்றும் சர்வதேச விசாரணைகளுக்கு ஆதரவளிக்கும்விதத்தில் நாட்டில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின்போது இழைக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் குற்றங்களுக்கெதிரான ஆதாரங்களைச் சேகரிக்கும்விதத்திலும் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஸ்தானிகரின் கால எல்லையினை ஒரு வருடத்தினால் அதிகரித்திருந்தது. இது திஸ்ஸநாயக்கவின் கட்சியான, மக்கள் விடுதலை முன்னணியினால் முன்னெடுக்கப்பட்டு 1980ம் ஆண்டுகளின் இறுதியில் பல்லாயிரக்கணக்கானோர் காணாமலாக்கப்பட்டதுடன் பாதுகாப்பு படையினரினால் சட்டத்திற்குப் புறம்பாக கொல்லப்பட்டதுடன் முடிவடைந்த வன்முறையான கிளர்ச்சியுடன் தொடர்புபட்ட துஷ்பிரயோகங்களையும் உள்ளடக்குகின்றது.

1983 – 2009 வரை இடம்பெற்ற உள்நாட்டுப் போரானது இலங்கை அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட கடுமையான மீறல்களை உள்ளடக்கியுள்ளது, ஆனால் அதன்பின்வந்த அரசாங்கங்கள் இழைக்கப்பட்ட குற்றங்களின் தீவிரத்தினை ஏற்றுக்கொள்ள மறுத்ததுடன், பாதுகாப்புப் படையிலிருக்கும் குற்றஞ்சாட்டப்பட்ட படையினரையும் பொறுப்புக்கூறலிலிருந்து பாதுகாத்தன. மே மாதத்தில் ஜக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகமானது தொடரும் மனிதஉரிமை மீறல்களை விமர்சித்து சர்வதேச விசாரணையினை மேற்கொண்டு வழக்குத்தொடரக் கோருவதுடன், இன்னும் தீர்க்கப்படாத வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான வழக்குகள் உட்பட போர்கால துஷ்பிரயோகங்களைக் கையாள்வதற்கான ஏனைய பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான அழைப்புவிடுத்து ஒரு அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

‘காணாமலாக்கப்பட்டோரைக்’ கண்டுபிடிப்பதற்காக 2017இல் அரசாங்கத்தினால் உருவாக்கப்பட்ட காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகத்தின் செயற்பாடுகளில் எவ்வித முன்னேற்றமும் இல்லை. ஏப்ரல் மாதத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் குழுவின் அறிக்கையானது ‘கடந்த காலத்தில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட’ நபர்களை இந்த அலுவலகத்திலுள்ள பதவிகளுக்கு நியமித்தமை மற்றும் ‘அத்தகைய வழங்குகளில் தலையீடுசெய்தமை’ போன்றவை தொடர்பில் விமர்சித்திருந்தது.

போர்க்கால மீறல்களை விசாரணை செய்வதற்காக மற்றுமொரு அமைப்பினை ஸ்தாபிக்கவேண்டுமென விக்கிரமசிங்க நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட முன்மொழிவான – உண்மை, ஐக்கியம் மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவானது – முன்னர் தோல்வியுற்ற முயற்சிகளை மீளப்பிரதிசெய்திருந்ததுடன், பாதிக்கப்பட்டவர்களின் தேவைகளையும் கருத்தில் கொள்ளவில்லை, அத்துடன் இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளைப் பூர்த்திசெய்வதிலும் பாரிய குறைபாடுகளைக் கொண்டிருக்கின்றது. அது கொடூரமான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறுதல் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சர்வதேச அழுத்தத்தினை திசைதிருப்புவதற்காக உருவாக்கப்பட்டதாகும், இது பரவலாகவே பாதிக்கப்பட்டவர்களின் குழுக்களால் நிராகரிக்கப்பட்டது. அதில் முன்வைக்கப்பட்ட செயற்பாட்டு எல்லையானது ஜேவிபி எழுச்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட பரவலான துஷ்பிரயோகங்களை உள்ளடக்கவில்லை.

விக்ரமசிங்க அரசாங்கமானது தொடர்ந்தும் உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் பிரச்சாரங்களைச் செய்பவர்களையும், உள்நாட்டுப்போரில் இறந்த தமது உறவினர்களை அல்லது காணாமலாக்கப்பட்டோரை நினைவுகூரும் தமிழர்களையும் இலக்குவைத்து வந்தது. போரின் இறுதிக்காலத்தில் மனிதர்கள் எதிர்கொண்ட துயரங்களை நினைவுகூரும்வகையில் ஒரு நிகழ்வினை ஏற்பாடுசெய்த நால்வர் மே மாதத்தில் ஏழு நாட்களாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பங்களும் கண்காணிப்பு, அச்சுறுத்தல், போலியான குற்றச்சாட்டுக்கள், வன்முறை மற்றும் எழுந்தமானமான கைதுகள் போன்றவற்றிற்கு உட்படுத்தப்பட்டனர்.

வெளிப்படுத்தல் மற்றும் ஒன்றுகூடுவதற்கான சுதந்திரங்கள்

விக்கிரமசிங்க அரசாங்கத்தில் அடக்குமுறையான சட்டங்களினாலும் எழுந்தமானமான செயற்பாடுகளின்மூலமும் பொலிசார் மற்றும் பாதுகாப்புப் படையினரினால் சிவில் சமூக வெளியானது மட்டுப்படுத்தப்பட்டது, குறிப்பாக வடகிழக்கில் தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் பிரதேசங்களில் இந்தநிலை காணப்பட்டது.

அரசாங்கமானது சிவில் சமூக அமைப்புக்களை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் பகுதியாக இருக்கும் அரசுசாரா அமைப்புக்களின் செயலகத்தில் பதிவுசெய்யக்கோருவதுடன், அவற்றின்மீது அளவுக்குமீறிய கட்டுப்பாடுகளையும் ஏற்படுத்தியது, குறிப்பாக வடகிழக்கிலுள்ள மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புக்களின் உறுப்பினர்கள் தாம் நெருக்கமாகக் கண்காணிக்கப்படுவதாகவும், தொல்லை, அச்சுறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாகவும், அவர்களது நிதிமூலங்கள் தொடர்பில் தலையீடுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் கூறினர்.

ஜனவரி மாதத்தில் உள்வாங்கப்பட்ட இணையப் பாதுகாப்புச் சட்டமானது, இணையவழியிலான தொல்லை, துஷ்பிரயோகம், ஏமாற்றுவேலைகள் போன்றவற்றிற்கெதிராக பாதுகாப்பு வழங்குவதாக கூறப்பட்டாலும், பரந்தளவிலான, வரையறுக்கப்படாத பேச்சுடன் தொடர்புடைய குற்றங்களைக்கூட ஐந்து வருடங்கள் வரையான சிறைத்தண்டனைக்குரிய குற்றங்களாக்குகின்றது. இச் சட்டமானது எந்த இணையவழியான பேச்சு ‘போலியானது’ அல்லது ‘தீங்கானது’ என்பதைத் தீர்மானிக்கவும், பதிவுகளை நீக்குதல், இணையத்திற்கான அணுகுதலை மட்டுப்படுத்துதல் அல்லது தடைசெய்தல் போன்ற தீர்மானங்களை மேற்கொள்வதற்கும், தனிநபர்கள் மற்றும் அமைப்புக்களுக்கெதிராக வழக்குகளைத் தொடர்வதனைத் தீர்மானிக்கவும் ஜனாதிபதியினால் நியமிக்கப்படும் ‘இணையப் பாதுகாப்பு ஆணைக்குழுவினை’ உருவாக்குகின்றது.

இந்த இணையப் பாதுகாப்புச் சட்டமானது “ஏறக்குறைய அனைத்துவிதமான நியாயமான வெளிப்பாடுகளையும் குற்றமானதாக்க முடியுமென்பதுடன், வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தின்மீது தீவிரமான தாக்கத்தினை ஏற்படுத்தும் ஒரு சூழலை உருவாக்கமுடியும்” என ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அலுவலகம் குறிப்பிடுகின்றது.

கூகிள், அப்பிள், மெட்டா ஆகியவை இச்சட்டவரைவினை “எதிர்க்கருத்துக்களை ஒடுக்குவதற்கான கடுமையான சட்டக்கட்டமைப்பு” எனக்கூறி, “அது இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்தின் வளர்ச்சியினை வலுவிழக்கச்செய்யும்” என எச்சரித்தது. ஜனாதிபதி திஸ்ஸநாயக்க அச்சட்டத்தினைத் திருத்துவதாக வாக்குறுதியளித்திருந்தார்.

விக்கிரமசிங்கவின் நிர்வாகத்தினால் முன்மொழியப்பட்ட ஏனைய ஒடுக்குமுறையான சட்டங்கள் ஒரு புதிய ஒலிபரப்புச் சட்டத்தினையும் உள்ளடக்கியிருந்தது, இது “எதிர்க்குரல்களை ஒடுக்குவதற்கு” பயன்படுத்தப்படலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர், மற்றையது பயங்கரவாதத்திற்கெதிரான சட்டம், ஐக்கிய நாடுகள் சபையினைப் பொறுத்தவரை, இது “போதியளவிற்கு நீதித்துறையின் மேற்பார்வையின்றி, நிறுத்தவும், கேள்விகேட்கவும், தேடுதல் மேற்கொள்ளவும், மக்களைக் கைதுசெய்து தடுத்துவைப்பதற்குமான – பரந்தளவிலான அதிகாரத்தினை பொலிசார் மற்றும் இராணுவத்திற்கு வழங்குகின்றது”, அரசுசாரா அமைப்புக்களை மேற்பார்வைசெய்தல் மற்றும் பதிவுசெய்தல் சட்டமூலம், இது மேலும் சிவில் சமூக வெளியினை மட்டுப்படுத்துகின்றது. ஆயினும், இச்சட்டமூலங்கள் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கு முன்னர் சட்டமாக்கப்படவில்லை.

பயங்கரவாதத்திற்கெதிரான சட்டங்கள்

விக்கிரமசிங்க அரசாங்கமானது எதிராளிகளாக கருதப்படுபவர்களை இலக்குவைப்பதற்கு, குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களை அச்சுறுத்துவதற்கும் எழுந்தமானமுறையில் தடுத்துவைப்பதற்கும் தொடர்ந்தும் கடுமையான, துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கக்கூடிய பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தினைப் பயன்படுத்தியது. இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் ஐக்கிய நாடுகுள் சபைக்கு வழங்கப்பட்ட தரவுகளின்படி, ஏறக்குறைய இதே காலப்பகுதியில் ஒன்பது சம்பவங்களை மட்டுமே அரசாங்கம் ஏற்றுக்கொண்டிருக்கின்றபோதும் ஜனவரி 2023 மற்றும் ஏப்ரல் 2024இற்கிடைப்பட்ட காலத்தில் பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தின்கீழ் 46 கைதுகள் மற்றும் தடுப்புக்காவல் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

பயங்கரவாதத்தடுப்புச் சட்டமானது 1979ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்தே நீண்டகாலமாகத் தடுத்துவைத்தல், குறைந்தளவிலான நீதித்துறையின் மேற்பார்வை, பொலிசாரிடம் ஒப்புதலளிக்கப்பட்டதனடிப்படையிலான தண்டனைகள் போன்றவற்றினை அனுமதிக்கும் சட்டஏற்பாடுகளின் காரணமாக எழுந்தமானமுறையில் தடுத்துவைத்தல் மற்றும் சித்திரவதை போன்ற துஷ்பிரயோகங்களை சாத்தியமானதாக்கியிருக்கின்றது. முன்னரிருந்த ஜனாதிபதிகளைப்போல திஸ்ஸநாயக்கவும் பயங்கரவாதத்தடுப்புச் சட்டத்தினை ஒழிப்பதாக வாக்குறுதியளித்திருந்தார்.

மதசுதந்திரம்

அரசாங்க நிறுவகங்கள் தொடர்ந்தும் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் வசிக்கும் இந்து மற்றும் முஸ்லிம் மதஸ்தலங்களையும் நிலங்களையும் பல்வேறு காரணங்களுக்காகவும், சில சந்தர்ப்பங்களில் அவற்றை பௌத்த விகாரைகளாக மாற்றுவதற்காகவும் கையகப்படுத்திவருகின்றது. குறிப்பாக, அரசாங்கத்தின் தொல்பொருள் ஆராய்ச்சித் திணைக்களமானது நீண்டகாலமாக காணப்படும் இந்துக்கோவில்களை புராதன பௌத்த தலங்களாக அடையாளப்படுத்தியிருக்கின்றது, இந்துபக்தர்கள் அவற்றை அணுகுவதற்குத் தடைவிதிக்கும் அதேவேளை இராணுவமானது இந்துக்கோவில்களில் பௌத்த சின்னங்களை நிறுவியிருக்கின்றது. மார்ச் மாதத்தில் விழாச்சடங்குகளில் ஈடுபட்ட இந்து பக்கர்கள் 8 பேர் கைதுசெய்யப்பட்டு 10 நாட்களுக்கு மேல் தடுத்துவைக்கப்பட்டனர், இதன்போது அவர்கள் துஷ்பிரயோகப்படுத்தப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.

போதைப்பொருள் தொடர்பான கொள்கை

“போதைப்பொருள் அபாயத்தினை” எதிர்கொள்வதற்கு அரசாங்கமானது டிசம்பர் 2023இல் “யுக்திய” எனும் நடவடிக்கையினை அறிமுகப்படுத்தியது. பல சந்தர்ப்பங்களில் எந்தவித தெளிவான ஆதாரங்களுமின்றி மே 2024 வரை 100,000 பேர் கைதுசெய்யப்பட்டிருக்கின்றனர். ஐக்கிய நாடுகள் சபையானது சித்திரவதை மற்றும் கொடுமைப்படுத்தல் தொடர்பான பல குற்றச்சாட்டுக்களை அறிக்கையிட்டிருப்பதுடன், துஷ்பிரயோகங்கள் மேற்கொள்ளப்படுவதாக நீண்டகாலமாக குற்றஞ்சாட்டப்பட்டுவரும் இராணுவத்தினரால் நடாத்தப்படும் ‘புனர்வாழ்வு’ மையங்களில் நூற்றுக்கணக்கானோர் விசாரணைகளின்றி தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகவும் குறிப்பிடுகின்றது.