அண்மையில் வெளிவந்த தகவல் (ஒக்டோபர் 21, 2026):
சவுதி உச்ச நீதிமன்றமானது, “அனோஜன் சிவராசாவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனைத் தீர்ப்பை ரத்துச் செய்துள்ளது" என இலங்கையின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, ஒக்டோபர் 14, 2026 அன்று அறிவித்தார்.
(பெய்ரூட்) – சவுதி அரேபியாவில் மத நிந்தனை எனக் கருதப்பட்ட முகநூல் கருத்திற்காக இலங்கையைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி ஒருவருக்கு சவுதி நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human Rights Watch) இன்று தெரிவித்துள்ளது. சவுதி அதிகாரிகள் இந்தத் தீர்ப்பை மாற்றி அமைத்து அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
கிழக்கு பிராந்தியத்தில் உள்ள சவுதி மேன்முறையீட்டு நீதிமன்றமானது, அனோஜன் சிவராசா (24) எனும் இலங்கையைச் சேர்ந்த நபருக்கு, இரண்டு முறை நடைபெற்ற நீதிமன்ற அமர்வுகளுக்குப் பிறகு, செப்டம்பர் 17, 2026 அன்று மரண தண்டனையை விதித்தது. ஆரம்பத்தில் அவருக்கு ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
“பொதுமன்னிப்புக் கோரி பகிரங்கமாக வருத்தம் தெரிவித்த ஒரு முகநூல் கருத்திற்காக, புலம்பெயர் தொழிலாளி ஒருவருக்கு மரண தண்டனை விதிப்பது என்பது சவுதி அதிகார மையங்களின் கடுமையான வரம்பு மீறிய செயலாகும். அதுவும் தற்பொழுது மரண தண்டனைகள் அதிகரித்து வரும் சூழலில் இது கவலை அளிக்கின்றது" என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் சவுதி அரேபிய மூத்த ஆய்வாளர் ஜோயி ஷே (Joey Shea) தெரிவித்தார். “மதம் தொடர்பான கருத்துக்காக யாரும் மரண தண்டனையை எதிர்கொள்ளக் கூடாது."
ஜூன் 28 அன்று, முகநூலில் பரவிய காணொளி ஒன்றுக்கு அனோஜன் சிவராசா தமிழில் ஒரு கருத்தினைத் தெரிவித்தார், அது சில பார்வையாளர்களுக்கு முஹம்மது நபியினை அவமதிப்பதாகத் தோன்றியது. அந்தக் கருத்து விரைவாகப் பலரது கவனத்தினையும் பெற்றது. மேலும், அதன் நிகழ்நிலைப் படத்தின் பிரதி சவுதி அதிகாரிகளுக்கும், அனோஜன் சிவராசாவின் தொழில் வழங்குநருக்கும் அனுப்பப்பட்டதாக அனோஜன் சிவராசாவின் குடும்ப உறுப்பினர் ஒருவர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திடம் தெரிவித்தார். அனோஜன் சிவராசா அந்தக் கருத்தை நீக்கியதுடன், தனது முகநூல் கணக்கில் மன்னிப்புக்கோரி காணொளி ஒன்றையும் பதிவேற்றினார். அனோஜன் சிவராசாவின் தொழில் வழங்குநர் அவரை குறைந்தபட்சம் 24 மணி நேரம்வரை தனது அலுவலகத்தில் தடுத்து வைத்திருந்து, பின்னர் ‘தம்மாம்’ காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவர் ஜூலை 1 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக அவரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
அனோஜன் சிவராசா கட்டுமானத் துறையில் பணியாற்றி வந்ததுடன், அவர் சவுதி அரேபியாவுக்கு வந்து வெறுமனே 10 மாதங்களே கடந்திருந்தன. அவர் இலங்கையில் உள்ள தனது குடும்பத்தின் வருமானத்திற்கான ஒரே ஆதாரமாக இருக்கின்றார் என அவரின் குடும்ப உறுப்பினர் தெரிவித்தார்.
அல்-அசா பொது வழக்குத் தொடுநர் அலுவலகம், அனோஜன் சிவராசா மீது “எமது முஹம்மது நபியினை வாய்மொழியாகத் திட்டி அவமதித்தார்" எனவும், “சமூக வலைத்தளத்தில் மத விழுமியங்கள் மற்றும் பொது நல்லொழுக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கும் சொற்களைக் கொண்ட கருத்தை வெளியிட்டதன் மூலம், தகவல் தொடர்பு வலையமைப்பு வழியாக மத விழுமியங்களுக்கும், பொது நல்லொழுக்கத்திற்கும் தீங்கான கருத்துக்களை உருவாக்கிப் பரப்பினார்" எனவும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்திருந்தது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தால் பெறப்பட்ட நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.
ஜூலை 27 அன்று, அல்-அசா குற்றவியல் நீதிமன்றம், இணையக் குற்றத் தடுப்புச் சட்டத்தின் (Anti-Cyber Crime Law) 6வது பிரிவின் கீழ் அனோஜன் சிவராசாவைக் குற்றவாளியாகத் தீர்ப்பளித்து, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 3 மில்லியன் சவுதி ரியால்கள் (சுமார் 800,000 அமெரிக்க டொலர்கள்) அபராதமும் விதித்துத் தீர்ப்பளித்தது என நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன. மேலும் அவரது மின்னணு சாதனத்தைப் பறிமுதல் செய்யவும், முகநூல் கணக்கினை முடக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆரம்பத் தீர்ப்பை எதிர்த்து அல்-அசா பொது வழக்குத் தொடுநர் அலுவலகம் மேல்முறையீடு செய்தது. அனோஜன் சிவராசாவின் வழக்கறிஞரும் ஆரம்பத் தீர்ப்பையும் தண்டனையையும் எதிர்த்து மேல்முறையீடு செய்தார்.
செப்டம்பர் 17 அன்று, தனக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அனோஜன் சிவராசா தனது குடும்பத்தினரிடம் தெரிவித்தார் என அவரது குடும்ப உறுப்பினர் கூறினார். கிழக்கு பிராந்திய மேல்முறையீட்டு நீதிமன்றம், சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் முஹம்மது நபியினை வாய்மொழியாக அவமதித்த குற்றத்திற்காக அனோஜன் சிவராசாவைக் குற்றவாளியாகக் கண்டறிந்து மரண தண்டனை விதித்ததாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் ஆய்வு செய்த நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன.
“நாங்கள் இந்தச் சூழலை ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை" என அவரது குடும்ப உறுப்பினர் தெரிவித்தார்.” இது ஒரு மரண வீடு போல இருக்கின்றது. எமது குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருக்கின்றனர், இன்னும் அந்த அதிர்ச்சியிலிருந்து மீளவில்லை."
ஒக்டோபர் 5 அன்று, காவலில் இருந்த கைதி ஒருவர் சிறிய ஆயுதத்தால் அனோஜன் சிவராசாவைத் தாக்கியதில் அவரது தலையிலும் முகத்திலும் காயம் ஏற்பட்டதாக அக்குடும்ப உறுப்பினர் தெரிவித்தார். மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் சிறைச்சாலையில் வேறு அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சவுதி அரேபியா கடந்த பத்தாண்டுகளில் 2000க்கும் மேற்பட்டோருக்கு மரண தண்டனையினை நிறைவேற்றியுள்ளது. பல வழக்குகளில் இது சவுதி மற்றும் சர்வதேச சட்டங்களை மீறுவதாக அமைகின்றது. கண்காணிப்பு ஆரம்பித்ததிலிருந்து ஒரு ஆண்டில் அதிக எண்ணிக்கையிலான மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட ஆண்டாக 2025 அமைந்துள்ளது. அந்த ஆண்டில் சவுதி அதிகாரிகள் குறைந்தது 356 பேருக்கு மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளனர்.
சவுதி அரேபியாவினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரபு மனித உரிமைகள் சாசனம் உட்பட சர்வதேச மனித உரிமைகள் சட்டமானது, மரண தண்டனையைப் பயன்படுத்தும் நாடுகள் அதனை “மிகவும் தீவிரமான குற்றங்களுக்கு" மட்டும் மற்றும் விதிவிலக்கான சூழ்நிலைகளில் மட்டும் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றது. மனித உரிமைகள் கண்காணிப்பகமானது மரண தண்டனையில் உள்ளார்ந்தமாக இருக்கும் கொடூரத்தின் காரணமாக எந்தச் சூழ்நிலையிலும் மரண தண்டனையினை எதிர்க்கின்றது.
“சவுதி அரேபியா உடனடியாக இந்தத் தீர்ப்பை இரத்துச் செய்து அனோஜன் சிவராசாவை விடுதலை செய்ய வேண்டும்" என ஷே தெரிவித்தார். “குறிப்பாக, ஏற்கனவே குறைந்த பாதுகாப்புக்களுடன் எளிதில் பாதிக்கப்படக்கூடிய நிலையில் இருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களுக்கு எதிராக, பேச்சுரிமை சார்ந்த குற்றங்களுக்கு அசாதாரண தண்டனைகளை வழங்குவதற்காகத் தவறான மற்றும் கடுமையான சட்டங்களைப் பயன்படுத்துவதனை சவுதி அதிகாரிகள் கைவிட வேண்டும்."