(நியூ யோர்க்) –இலங்கை யில் உள்நாட்டுப் போரினால் ஏற்பட்ட துஷ்பிரயோகங்களுக்காக உண்மையையும் நீதியையும் வழங்குவதை நோக்காகக் கொண்ட செயன்முறைகளுக்கு இலங்கையில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள் தடங்கல்களை ஏற்படுத்தியுள்ளது என ஹியுமன் றைட்ஸ் வொட்ச் இன்று அதன் 2019 இன் உலக அறிக்கையை வெளியிடுகையில் கூறியது. ஜனாதிபதியினால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டமை அரசியலமைப்புக்கு முரணானது என்று டிசெம்பர் 13 ஆம் திகதி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தமை, பிரதமராக அறிவிக்கப்பட்டிருந்த மகிந்த ராஜபக் க்ஷ பதவி விலகியமை ஆகியவற்றின் பின்னர் நெருக்கடி தளர்ந்தது
“இலங்கையின் மூன்று தசாப்த கால உள்நாட்டுப் போரினாற் பாதிக்கப்பட்ட பலர் ஜனாதிபதியின் அரசியல் ரீதியான செயற் பா ட் டினால் தமது எதிர்பார்ப்புக்கள் இல்லாமலாகிக் கொண்டு சென்றதைக் கண்டு கொண்டனர்,” என்றார் ஹியுமன் றைட்ஸ் வொட்சின் தெற்காசியப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி. “இத்துன்பியல் நிகழ்வு மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் பொறுப்புக் கூறல் தொடர்பாக விரைவான, அர்த்தமுள்ள படிமுறைகளை மேற்கொள்ளத் தவறியமையைச் சுட்டிக் காட்டுகிறது.”
ஹியுமன் றைட்ஸ் வொட்ச் தனது 29 ஆம் பதிப்பான 2019 உலக அறிக்கையின் 674 ஆம் பக்கத்தில் 100 இற்கு மேற்பட்ட நாடுகளின் மனித உரிமை நடைமுறைகளை மீளாய்வு செய்தது. நிறைவேற்றுப் பணிப்பாளர் கென்னத் றொத் தனது அறிமுக உரையில், பல நாடுகளில் துவேஷத்தையும் சகிப்பின்மையையும் பரப்பும் பிரபலம் பெற விரும்புவோர் ஒரு எதிர்ப்பைப் பரப்புகின்றனர். உரிமைகளை மதிக்கும் அரசாங்கங்களின் புதிய கூட்டணிகள், பெரும்பாலும் குடிமக்கள் குழுக்களுடனும் பொதுமக்களுடனும் மீண்டும் மீண்டும் ஒன்று சேர்ந்து, ஏகாதிபத்திய அத்துமீறல் களின் விளைவுகளை பற்றி விழிப்பேற்படுத்துகின்றனர். இவ்விடயத்தில் அடைந்த வெற்றிகள், மனித உரிமைகளை பாதுகாக்க கூடிய சாத்தியம் உண்டு என்பது மாத்திரமன்றி இருள் சூழ்ந்த நாட்களில் கூட அவ்வாறு செய்யும் பொறுப்பும் அவர்களுக்கு உண்டு என்பதையும் காட்டுகிறது.
2009 இல் இலங்கையின் கொடூரமான உள்நாட்டுப் போரின் இறுதி மாதங்களில் நிகழ்ந்த படு மோசமான மனித உரிமை மீறல்களுக்கும் ஊடக, கருத்து வெளிப்பாட்டு, ஒன்று கூடும் , சுதந்திரங்களை அடக்கியாள்வதிலும் ராஜபக்க்ஷ அரசாங்கம் தொடர்பு பட்டது எனக் கருதப்பட்டது . மைத்திரிபால சிறிசேன 2015 இல் தேர்தலில் வென்ற பின்னர், அரசாங்கம் சிவில் சமூகத்துக்கான சூழலை மேம்படுத்தியதுடன், சில அடக்கியாளும் நடவடிக்கைகளை இல்லாதொழித்தது, உண்மைக்கும் பொறுப்புக் கூறலுக்குமான நான்கு இடைக்கால நீதிப் பொறிமுறைகளை ஊக்குவித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் ஒரு தீர்மானத்துக்கு ஆதரவளித்தது.
இந்த நான்கிலும், காணாமற் போனோருக்கான அலுவலகம் மாத்திரமே அமைக்கப்பட்டுள்ளதாயினும், அது இன்னமும் முழுமையாக இயங்க வேண்டியுள்ளது. வடக்கு கிழக்கிலுள்ள குடும்பங்கள் இராணுவ ஆக்கிரமிப்பிலிருந்து தமது காணிகளை விடுவிக்கக் கோரவும் காணாமற் போன குடும்ப உறுப்பினர்களைப் பற்றிய உண்மையைத் தேடவும் போராட்டங்களையும் கவனயீர்ப்புக்களையும் நடத்தியுள்ளன. நாட்டின் தலைமைத்துவம் தொடர்பான அரசியல் நெருக்கடியும் ராஜபக்க்ஷ வின் நிர்வாகம் மீண்டும் ஏற்படும் சாத்தியமும் நீதி தொடர்பில் மேலும் தாமதங்களை ஏற்படுத்துவது மாத்திரமன்றி, அரசாங்க நடவடிக்கைக்கு அழுத்தம் கொடுப்போருக்கு எதிராகப் பழிவாங்கப்படும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தின. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பும் ராஜக்பக்ஷவின் விட்டுக் கொடுப்பும் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வந்தன.
நீண்ட காலமாக வாக்குறுதியளிக்கப்பட்ட பாதுகாப்புத் துறை மறுசீரமைப்புக்களும் நின்று போயுள்ளன. அரசாங்கம் கொடூரமானதும் நெடுங்காலம் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதுமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை இல்லாதொழிக்க ஒரு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை முன்மொழிந்த போதிலும், இதற்கான வரைவு சர்வதேச மனித உரிமைகள் நியமங்களின் எதிர்பார்ப்புகளுக்கு அமைவாக இருக்கவில்லை..
உள்நாட்டுப் போரின் போது 11 தமிழர்களைக் கடத்திக் கொலை செய்ததாகக் குற்றஞ் சாட்டப்பட்ட ஒரு கடற்படை அலுவலரைப் பாதுகாத்தமைக்காக நவம்பர் மாதம் பாதுகாப்பு ஊழியர் தலைவர் அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்தினவை எதிரியாக் கி குற்றப்பத்திரம் தாக்கல் செய்தமை நீதித்துறையின் ஒரு முக்கிய மேம்பாடாகும்.
“போரினாற் பாதிக்கப்பட்டோருக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவும் மறுசீரமைப்புக்களைத் தொடங்கவுமான இலங்கையின் கடந்த கால உறுதிமொழிகள் அரசியல் நெருக்கடியினால் பின் தள்ளப்பட்டுள்ளன,” என்றார் கங்குலி. “நெடுங்காலம் அல்லலுற்ற மக்களுக்கான அதன் கடப்பாடுகளை நிறைவேற்றுவதற்காக இலங்கையின் நண்பர்கள் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.”