(நியூயோர்க், ஒக்டோபர் 26, 2010) - 17 வயதாக இருக்கும் பொழுது ஒரு குழந்தையைக் கொன்றதாக குற்றத் தீர்ப்பளிக்கப்பட்ட இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணொருவரின் மரண தண்டனை நிறைவேற்றத்தை மன்னர் அப்துல்லா மற்றும் உட்துறை அமைச்சர் இளவரசர் நய்ப் அவர்களும் தடுத்து நிறுத்துதல் வேண்டுமென, மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று தெரிவித்தது. சிறுவர்களாக இருக்கும் பொழுது புரியப்பட்ட குற்றங்களுக்காக கடந்த இரண்டு வருடங்களில் சிறுவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியதாக அறியப்படும் மூன்று தனியான நாடுகளில் சவுதி அரேபியாவும் ஒன்றாகும்.
ரிஸானா நபீக், மே 2005 இல் சவுதி அரேபியாவுக்கு வந்து இரு வாரங்களேயான நிலையில், அவர் ‘உட்டய்பி குடும்பத்திற்காக வேலை செய்யும் பொழுது, நபீக்கின் பராமரிப்பில் அவர்களது 4 மாதக் குழந்தை இருந்த வேளையில் இறந்தது. இலங்கையிலுள்ள ஒரு ஆட்சேர்ப்பு முகவர் நிறுவனம் ரிஸானா நபீக் வேலைக்காக புலம்பெயர முடியுமென்பதைக் காண்பிப்பதற்காக அவரது கடவுச்சீட்டில் அவரது பிறந்த திகதியை மாற்றஞ் செய்தது. ஆனாலும் அவரது பிறப்புச் சான்றிதழ், சம்பவம் நிகழ்ந்த வேளையில் நபீக் 17 வயதே நிரம்பியிருந்தாரென பின்னர் உறுதி செய்தது.
"நபீக் சிறுமியாக இருக்கும் பொழுதே சம்பவங்கள் நிகழ்ந்தன என்பதில் எந்த சர்ச்சையும் இல்லை", என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தில் பெண்கள் உரிமைகள் தொடர்பான சிரேஷ்ட ஆய்வாளர் நிஷா வரியா தெரிவித்தார்". சவுதி அரசாங்கம் ஒரு துன்பியல் நிகழ்வை மற்றொரு துன்பியல் நிகழ்வின் மூலம் தீர்த்து வைத்தல் கூடாது. சிறுவர்களாக உள்ள போது குற்றஞ் செய்தமைக்காக ஆட்களுக்கு இன்னமும் மரண தண்டனை நிறைவேற்றும் ஒரு சில நாடுகளுள் சவுதி அரேபியாவும் ஒன்று எனும் அதன் வெளிப்படையான அந்தஸ்தை ஒழிப்பதற்கான தருணம் இதுவேயாகும்".
இலங்கைத் தூதரகத்தைச் சேர்ந்தவொரு அதிகாரி மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு தெரிவிக்கையில், சவுதி அரேபிய உயர் நீதிமன்றம் ரிஸானா நபீக்கின் குற்றத் தீர்ப்பையும், தண்டனையையும் உறுதி செய்துள்ளமை பற்றி கடந்த வாரமே அறிந்து கொண்டதாகக் கூறினார். உயர் நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்பு பற்றி நபீக்காவிற்கு இன்னமும் தெரியாதென்பதுடன் அவர் வீட்டுக்கு திரும்பிச் செல்வதற்கு ஆர்வமாக உள்ளார் என்றும் ஒக்டோபர் 24, 2010 அன்று, சிறையில் நபீக்காவிடம் விஜயம் செய்த ஒரு சமூகப் பணியாளர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு கூறினார்.
தூதரக அதிகாரிகளுடன் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் கடந்த கால நேர்காணல்கள் மற்றும் ‘அரப் நியூஸ்' செய்திகளிலிருந்து தெரிவிக்கப் படுபவையென்பன நபீக்காவின் குறுக்கு விசாரணைகள் மற்றும் நீதிமன்ற விளக்கம் என்பவற்றின் போது சட்டத்தரணிகள் மற்றும் தகுதி வாய்ந்த மொழிபெயர்ப்பாளர்களைப் பெற்றுக் கொள்வதில் நபீக்காவிற்கு காணப்பட்ட வழிவகைகள் பற்றி கரிசனைகளை எழுப்பின. நபீக்கா 2005 இல் கைது செய்யப்பட்ட போதும், 2007 இல் டாவட்மி (Dawadmi) இலுள்ள நீதிமன்றம் மரண தண்டனை அளித்து தீர்ப்பு வழங்கும் வரை ஒரு சட்ட ஆலோசகருக்கான வழிமுறைகளை அவர் கொண்டிருக்கவில்லை. நபீக்காவும் மாற்றப்பட்ட குற்ற ஒப்புதலொன்றை அளித்திருந்தார், இது வலுக்கட்டாயத்தின் பேரில் செய்யப்பட்டதாகக் கூறிய அவர், குழந்தை புட்டியிலிருந்து பாலைக் குடிக்கும் பொழுது தற்செயலாக மூச்சுத் திணறி இறந்ததாகக் கூறுகிறார்.
நீதிமன்றங்கள் தங்களது தீர்ப்புகளில் இஸ்லாமியச் சட்டத்தை தவறாக அர்த்தம் கொண்டுள்ளன அல்லது புதிய சாட்சியங்கள் வெளிப்பட்டுள்ளன எனக் காண்பிக்கப்பட்டாலன்றி, உயர் நீதிமன்றத்தின் அண்மைய தீர்ப்போடு, நீதிமுறையான நிவாரண வழிமுறைகள் முழுவதிலுமாக உபயோகிக்கப் பட்டுவிட்டன. எவ்வாறாயினும், மன்னரும் உட்துறை அமைச்சரும் மரண தண்டனை நிறைவேற்றுதல் கட்டளைகளில் கையொப்பமிடல் வேண்டும் என்பதோடு, அத்தகைய அனுமதியின்றி ஒருவருக்கேனும் மரண தண்டனை நிறைவேற்றப்படல் கூடாது. இலங்கைத் தூதரகம் உட்துறை அமைச்சருடன் ஒரு சந்திப்புக்கு கோரியுள்ளதாக அதன் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் மனித உரிமைகள் கண்காணிப்பகத்திற்கு தெரிவித்தார்.
சவுதி அரேபியாவில் கொலை வழக்குகளைக் கட்டுப்படுத்தும் பழிதீர்த்தல் (qisas) எண்ணக்கருவின் கீழ், நபீக்காவிற்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கு அரசை வேண்டிக் கொள்வதை தெரிவு செய்வதற்குப் பதிலாக இழப்பீடாக பணத்தைப் பெற்றுக்கொள்ளலாம் அல்லது ஒரு மன்னிப்பை வழங்கலாம்.
"இந்த மரண தண்டனயை மாற்றும் முயற்சிகளில், எந்தவொரு தரப்புமே விடுபட்டு போய் விடாதிருக்கும் வகையில் சவுதி அரசாங்கம், உட்டய்பி குடும்பம், இலங்கை அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரையும் சந்தித்தல் வேண்டும்", என்று வரியா தெரிவித்தார்.
குற்றஞ் சாட்டப்பட்டவர் 18 வயதை அடைவதற்கு முன்னர் வாய்மொழி ஒப்புதலின்றி மரண தண்டனை அல்லது ஆயுட் தண்டனை என்பவற்றை வெளிப்படையாகத் தடை செய்யும் சிறுவர் உரிமைகள் மீதான சமவாயத்திற்கு சவுதி அரேபியா ஒரு நாட்டுத் தரப்பாகவுள்ளது. இருந்தபோதிலும், சவுதிச் சட்டங்கள், குற்றவியல் வழக்குகளில் சிறுவர்களை வயது வந்தவர்களாக கருதுவதற்கு நீதிபதிகளுக்கு பரந்துபட்ட தற்றுணிபு அதிகாரத்தை அளிப்பதோடு, நீதிமன்றங்கள் 13 வயதான இளஞ் சிறுவர்கள் மீதும் மரண தண்டனைகளை விதித்துள்ளன.
மரண தண்டனையின் உள்ளார்ந்த கொடூரம் மற்றும் அதன் இறுதிநிலை காரணமாக, மனித உரிமைகள் கண்காணிப்பகம் எல்லா சந்தர்ப்பங்களிலும் அதனை எதிர்க்கிறது. 2009 இல், சிறுவர்களாக இருக்கையில் புரிந்ததாக சாட்டப்பட்ட குற்றங்களுக்காக குறைந்தது மூவர் உட்பட 53 இற்கும் அதிகமானவர்களுக்கு சவுதி அரேபியா மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.
பாலியத் தவறாளிகள் அல்லது புலம்பெயர் வீட்டுப் பணியாளர்களுக்கான மரண தண்டனை தொடர்பில் சவுதி அரேபியா மீதான மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் மேலதிக அறிக்கைகளுக்கு கீழ்வரும் இணையதளத்திற்கு விஜயம் செய்யவும்: