Skip to main content

இலங்கை: தமிழ் கைதிகள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாதல்

சிறையில், அரசியல் நோக்குடனான பாலியல் துன்புறுத்தல்கள் போர்க் காலம் முதல் தொடர்கின்றன.

 

[இலண்டன் (London)] – தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்ரீரீஈ) என சந்தேகிக்கப்பட்ட உறுப்பினர்களையும் அதன் ஆதரவாளர்களையும் துன்புறுத்துவதற்கு இலங்கையின் ஆயுதப் படைகள் பாலியல் வல்லுறவையும் ஏனைய பாலியல் வன்முறைகளையும் பிரயோகித்து வந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு (Human Rights Watch)இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு மே மாதம் முடிவடைந்த ஆயுதப் போராட்டத்தின் போது சிறையில் பரந்தளவில் பாலியல் வல்லுறவுகள்  நிகழ்ந்து வந்தன எனவும், அதே வேளையில் அரசியல் நோக்குடனான பாலியல் வன்முறைகள் இராணுவத்தினாலும் போலீஸ் படையினாலும் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது எனவும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கண்டறிந்தது.

“‘நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்’: இலங்கை ஆயுதப் படைகளின் மூலம் தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியியல் வன்முறை’” என்ற 144 பக்க அறிக்கையானது இலங்கை முழுவதிலுமுள்ள உத்தியோகபூர்வமான மற்றும் இரகசியமான தடுப்பு முகாம்களில் 2006-2012 ஆம் ஆண்டு வரை நிகழ்ந்த பாலியல் வல்லுறவுகள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் ஆகியவற்றுக்கு எதிரான 75 பேர்களின் குற்றச்சாட்டுக்கள் பற்றிய விரிவான விபரங்களை தருகின்றது. மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு ஆவணப்படுத்திய விடயங்களில், பல நாட்களாக அடிக்கடி பல நபர்களினாலும், இராணுவத்தினாலும், போலீஸ் படையினாலும், மற்றும் அடிக்கடி பங்குகொள்ளுகின்ற அரசாங்க சார்பு துணை இராணுவக் குழுக்களினாலும் தமிழ் ஆண்களும் பெண்களும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப் பட்டிருப்பதாகப் பதிவாகியிருக்கின்றது.

“இலங்கையின் பாதுகாப்புப் படைகள் கூறவியலாத எண்ணிக்கை அளவுக்கு சிறையில் தமிழ் ஆண்களையும் பெண்களையும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளனர்” என மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் ப்ராட் அடம்ஸ் (Brad Adams) கூறினார். “இவை சாதாரண யுத்தகால அட்டூழியங்கள் அல்ல, தற்பொழுதும் அந்த அட்டூழியச் செயல்கள் தொடர்ந்தும் நிகழ்ந்து வருவதோடு, எல்ரீரீஈ தரப்புடன் தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்படும் ஒவ்வொரு தமிழ் ஆணையும் பெண்ணையும் இது கடும் ஆபத்தில் தள்ளிவிடுவதாக அமைகின்றது”.

பாலியல் வல்லுறவுக்கு ஆளான அனேகமானோர் இலங்கைக்கு வெளியால் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவுடன் தொடர்புகொண்டு, தமக்குச் செய்யப்பட்ட அட்டூழியங்களை மருத்துவ மற்றும் சட்டமுறை அறிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தினார்கள். இவர்கள் அனைவரும் பாலியியல் வன்முறைக்கு அப்பால் துன்புறுத்தப்பட்டும்  கொடுமைப்படுத்தப்பட்டும் உள்ளனர். மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவுக்கு இலங்கையில் வெளிப்படையான ஒரு ஆய்வை நடாத்தவோ அல்லது இன்னும் சிறையிலிருக்கின்ற மக்களை நேர்காணவோ முடியாமல் போனதால், இத்தகைய சம்பவங்கள் அநேகமாக அரசியல் நிகழ்வுகளாக, சிறை நிகழும் பாலியல் வல்லுறவுகளின்  மிகச்சிறிய ஒரு பகுதியை மாத்திரமே பிரதிபலிப்பதாக அமைகின்றன.

ஒரு தனியாள்  இனம் தெரியாத நபர்களினால் வீட்டிலிருந்து  கடத்தப்பட்டு, ஒரு தடுப்பு முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டு, எல்ரீரீஈ செயற்பாடுகள் பற்றி தகாத முறையில் விசாரிக்கப்படுதல் என்கின்ற விதத்திலேயே அதிகமான சம்பவங்கள் தொடர்ந்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது. வெளிநாட்டிலிருந்து அண்மையில் நாடு திரும்பியிருந்த 23 வயதுடைய ஒரு நபர், தான் எந்த விதமான குற்றப் பத்திரிகையும் தாக்கல் செய்யப்படாத நிலையில் கடத்தப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் ஒரு ஒப்புதல் வாக்குமூலத்தில் தான் கையொப்பமிடும் வரை மூன்று நாட்கள் தொடர்ச்சியாகக் கொடுமைப்படுத்தப்பட்டதாகவும் கூறினார். 32 வயதுடைய ஒரு பெண், சிவில் உடையில் வந்த இரண்டு ஆண்களினால் தான் கைதுசெய்யப்பட்டு, தனது ஆடைகள் களையப்பட்ட நிலையில் நிர்வானமாக தன்னை புகைப்படம் எடுத்ததாகக் கூறினார். “அனைத்தையும் பற்றி ஒப்புதல் வாக்குமூலம் அளிக்குமாறு அந்த நபர்கள் என்னிடம் கூறினார்கள்” என அந்தப் பெண் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் முறையிட்டார். “அவர்கள் என்னைக் கொலைசெய்து விடுவார்கள் என்று நினைத்ததால் நான் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்க மறுத்தேன். நான் தொடர்ச்சியாக அடிக்கப்பட்டுத் துன்புறுத்தப்பட்டேன். இரண்டாவது நாள் ஒரு நபர் எனது அறைக்கு வந்து என்னை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார். ஆகக்குறைந்தது மூன்று நாட்களாக நான் பலராலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டேன். எத்தனை தடவைகள் என்பது எனக்கு நினைவில்லை”.

பாலியியல் துஷ்பிரயோகமானது, சந்தேகிக்கப்பட்ட எல்ரீரீஈ உறுப்பினர்களையும் அதன் ஆதரவாளர்களையும் துன்புறுத்துவதற்கும் கொடுமைப்படுத்துவதற்கும் பரந்தளவில் பயன்படும் முக்கிய ஒரு அங்கமாக விளங்கியுள்ளது என்பது எதைச் சுட்டிக்காட்டுகின்றது எனில், ஆயுதப் போராட்டத்தின் போதும் அதே நேரம் எப்பொழுதும் ஆயுதப் படைகளினால் கைதுசெய்யப்படும் ஆண்களும் பெண்களும் பாலியல் வல்லுறவுக்கும்  ஏனைய பாலியியல் வன்முறைக்கும் பலியாகுகின்றனர் என மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது. எல்ரீரீஈ செயற்பாடுகளில் ஈடுபாடு,மற்றும்  துணைவர்களும் உறவினர்களும் அடங்கலாக ஏனையவர்கள் தொடர்பான தகவல்கள் பற்றியும்  ‘ஒப்புதல் வாக்குமூலங்களை’ பெறுவதற்கும் அதே நேரம் எல்ரீரீஈ தரப்புடன் தொடர்புவைப்பதை அதைரியப்படுத்தும் வகையில் பரந்தளவில் தமிழ் மக்கள் மத்தியில் அச்சத்தைத் திணிப்பதற்கும் என்றே இந்தச் சித்திரவதைகள்  நிகழ்த்தப்பட்டதாக கருதப்படுகின்றது.

தாம் அடிக்கப்பட்டதாகவும், தனது கைகளைக் கட்டித் தொங்கவிடப்பட்டதாகவும், பகுதியளவில் மூச்சுத்திணற வைக்கப்பட்டதாகவும், எரியும் சிகரெட்டுக்களினால் சூடுவைக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் மேலும் விவரித்தனர். மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவுடன் கதைத்தவர்களில் எவருமே தடுத்துவைக்கப்பட்ட நேரத்தில் சட்ட ஆலோசனையையோ, குடும்ப அங்கத்தவர்களையோ அல்லது மருத்துவர்களையோ நாடுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. துஷ்பிரயோகம் முற்றுப்பெறும் என எண்ணி ஒப்புதல் வாக்குமூலத்தில் கையொப்பமிட்டாலும் பாலியல் வல்லுறவு அடங்கலாக சித்திரவதைகள் அடிக்கடி தொடர்ந்ததாகவே அநேகமானோர் கூறினர். நேர்காணப்பட்ட தனி நபர்கள் எவரும் முறையாக விடுவிக்கப்படவில்லை, ஆனால் மாறாக உறவினர் ஒருவர் உயர் அதிகாரிகளுக்கு இலஞ்சத்தை வழங்கிய பின்னர் ‘தப்பியோடுவதற்கு’ அனுமதிக்கப்பட்டனர்.

“இரண்டு அதிகாரிகள் எனது கைகளை பின்னால் மடக்கிப்பிடித்து [அதே வேளையில்] ஒரு மூன்றாவது அதிகாரி எனது ஆண்குறியைப் பிடித்து அதனுள் ஒரு உலோகக் கம்பியைத் திணித்தார்” என 2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் அரசாங்கப் படைகளிடம் சரணடைந்த ஒருவர் கூறினார். “அவர்கள் எனது ஆண்குறியினுள் சிறிய உலோகக் குண்டுமணிகளைத் திணித்தனர். நாட்டை விட்டுத் தப்பி வந்த பின்னர் இந்தக் குண்டுமணிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியிருந்தது”. ஒரு மருத்துவ அறிக்கை இவரின் வாக்குமூலத்தை உறுதிசெய்கின்றது. 

அவர்கள் செய்த குற்றத்தை தாம் வெளிப்படுத்தினால் பொதுவாக குற்றம் புரிந்தவர்களிடமிருந்து பதிலடி கிடைக்கும் என்றும் சமூகத்தில் இகழப்படுவோம் என்னும் பய உணர்வுமே தம்மீது  நிகழ்த்தப்பட்ட துஷ்பிரயோகம் பற்றி தங்களை அமைதியாகவிருக்கச் செய்ததாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கதைத்த பலவந்த பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்ட ஆண்களும் பெண்களும் கூறினார்கள். பாலியல் வல்லுறவு சம்பவங்கள் பற்றி பயனுள்ள விதத்தில் அறிக்கையிடுவதையும் விசாரணை செய்வதையும் தடுக்கும் வகையில் இலங்கை அரசாங்கத்தினால் திணிக்கப்பட்ட நிறுவனசார் தடைகளும் பாலியல் துஷ்பிரயோகத்தைப் பற்றி அறிக்கையிடும் தயக்கத்திற்கு மூலகாரணமாக அமைந்தன.

“பாலியல் வல்லுறவு பலியானவர்களுக்கான மருத்துவ மற்றும் உளவியல் சிகிச்சைகளையும் அரசாங்கம் முடக்கியது” என அடம்ஸ் கூறினார். “வடக்கில் அதிகளவில் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் பாலியல் வன்முறைக்கு ஆளாகித் தப்பிப்பிழைத்தவர்களுக்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச நிறுவனங்கள் வழங்குகின்ற சேவைகளையும் இராணுவம் சூட்சுமமான முறையில் தடைசெய்துள்ளது”.

போராட்டத்தின் இறுதி ஆண்டுகளில் அல்லது போர் முடிவுக்குப் பின்னர் சிறையில் நிகழ்ந்த பாலியல் வல்லுறவுகள்  தொடர்பில் ஆயுதப் படைகளில் எவருக்கும் எதிராக வழக்குத் தொடரப்படவில்லை என்பதுடன் குற்றம் செய்தவர்கள் குற்றத்திற்கு தண்டனையின்றி சுதந்திரமாகவிருக்கின்றனர் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது.

தாங்கள் அரச பாதுகாப்புப் படைகளின் உறுப்பினர்கள் என்பதை மறைப்பதற்கு இராணுவமும் போலீஸும் மிகக் குறைந்தளவு முயற்சியையே மேற்கொண்டனர் என நேர்காணப்பட்டவர்கள் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்கள். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (C.I.D.)பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவு (T.I.D.) போன்ற விசேட பிரிவுகள் உள்ளிட்ட இராணுவத்தினர், இராணுவத் துப்பறியும் பிரிவினர் மற்றும் போலீஸ் முதலிய தரப்புகள் இவர்களில் அடங்குகின்றனர். இந்த அரச திணைக்களங்களின் உறுப்பினர்கள் ஒன்றாக இணைந்தும் தகாத முறையில் விசாரணைகளை நடாத்தினர் என பாதிக்கப்பட்டவர்கள் தொடர்ந்தும் அறிக்கையிட்டனர். இவர்கள் துஷ்பிரயோகம் நிகழ்ந்த குறித்த முகாம்களையும் தடுப்பு ஸ்தலங்களையும் அடையாளம் காட்டினார்கள்.

பாலியல் வன்முறையைப் பிரயோகித்தல் என்பது ஒரு சாதாரண கீழ்மட்டத்து நிகழ்வாகவோ அல்லது அயோக்கியத்தனமான பாதுகாப்புப் படையினர் சிலரின் செயல்களாகவோ காணப்படவில்லை, ஆனால் மாறாக உயர் மட்ட அதிகாரிகளினால் அறிந்த அல்லது அறிந்துகொள்ளப்பட்டிருக்க வேண்டியதான  பரந்தளவில் நிகழ்ந்த வழக்கமான ஒரு செயலாக காணப்பட்டுள்ளதையே இந்தச் சம்பவங்கள் சுட்டிக்காட்டுவதாக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது. மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவுக்கு அறிக்கையிடப்பட்ட சம்பவங்கள் இலங்கையின் வட பிராந்திய யுத்தகளப் பகுதிகளில் மாத்திரமன்றி தலைநகரமான கொழும்பிலுள்ள இராணுவ முகாம்களிலும், போலீஸ் நிலையங்களிலும் அதே நேரம் யுத்த பிரதேசங்களுக்கு தூரத்திலுள்ள தெற்கு மற்றும் கிழக்குப் பகுதிகளின் ஏனைய இடங்களிலும் நிகழ்ந்தன. கொழும்பிலுள்ள C.I.D  தலைமை அலுவலகத்தின் கெடுதிக்குப் பெயர்போன நான்காவது மாடியும் T.I.Dஆறாவது மாடியும் இவற்றில் அடங்கியிருந்தன.

ஆயுத மோதல்களின் ஒரு பாகமாகப் புரியப்பட்ட பாலியல் வல்லுறவு செயல்கள் மற்றும் ஏனைய பாலியல் வன்முறைகள் என்பன போர் குற்றங்களாகும். அத்தகைய வன்முறைகளைத் தடுப்பது மாத்திரமன்றி, துஷ்பிரயோகம் பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுக்களை விசாரித்து அந்தக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுப்பதும் இலங்கை அரசாங்கத்தின் ஒரு கடப்பாடாகும். அத்தகைய துஷ்பிரயோகங்களை அறிந்திருந்த அல்லது அறிந்திருக்க வேண்டிய  அதிகாரிகள்கூட நடவடிக்கையை எடுக்கத் தவறியிருந்தனர். இதனால், கட்டளையிடும் பொறுப்பு விடயம் என்ற ரீதியில் அவர்களும் குற்றம் புரிந்தவர்கள் ஆகுகின்றார்கள்.

யுத்தகாலத் துஷ்பிரயோகங்களுக்கான நியாயத்தையும் பொறுப்புக்கூறும் தன்மையையும் முன்வைப்பதற்கான 2012 மார்ச் மாதத் தீர்மானத்தில் குறிப்பிடப்பட்ட தனது பொறுப்புக்களை இலங்கை அரசாங்கம் போதியளவில் பின்பற்றி நிறைவேற்றியதா என்பது பற்றி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் சபை பெப்ரவரி மாதத்தில் விசாரணை செய்யும். ஒரு சுயாதீன சர்வதேச விசாரணையை நடாத்துமாறு மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்ஸ்தானிகரை இந்த சபை பணிக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு கூறியது.

“பாதுகாப்புப் படையினரால் நிகழ்த்தப்பட்ட பாலியல் வன்முறைக் குற்றச்சாட்டுக்கள் ‘பொய்’ அல்லது ‘எல்ரீரீஈ சார்பான பிரச்சாரம்’ என எண்ணி அரசாங்கம் தனது படையினரை விடுவித்துள்ளமையே அரசாங்கத்தின் பதிலாகவிருக்கின்றது” என அடம்ஸ் கூறினார். “இந்தக் கொடூரமான குற்றங்களைப் பற்றி அரசாங்கத் தரப்பில் எவர்கள் அறிந்திருப்பார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் தொடர்ந்து இடம்பெற்றுவரும் இந்தத் துஷ்பிரயோகங்களுக்கு எதிராக நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தவறியிருக்கின்றமையானது ஒரு சர்வதேச விசாரணை அவசியம் என்பதற்கு மேலும் சான்றாக அமைகின்றது”.

“நாங்கள் உங்களுக்கு ஒரு பாடம் புகட்டுவோம்”: இல் இருந்து பெறப்பட்டவை

தலைப்பெழுத்துக்கள் அனைத்தும் புனைப்பெயர்களாகவும் நபரின் உண்மையான பெயருக்கு எந்தவிதமான தொடர்பும் இல்லாததாகவும் இடப்பட்டுள்ளன.

ஜே எச் (JH) என்பவரின் சம்பவம்

ஜே எச் (JH) என்பவர் 23 வயதுடைய ஒரு தமிழர். இவர் ஐக்கிய இராச்சியத்தில் கல்வி கற்றுக்கொண்டிருந்த நேரம் 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் குடும்பம் சார்ந்த காரணங்களுக்காக கொழும்புக்குத் திரும்பினார். ஒரு மாதம் கழிந்த பின்னர், வேலை விட்டு வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில், ஒரு வெள்ளை வேனில் வந்த பலர் அதிலிருந்து குதித்தார்கள். ஒரு விசாரணைக்கு தான் தேவைப்படுவதாகக் கூறி, அவர்கள் தனது கண்களைக் கட்டி, ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் பயணித்து, தெரியாத ஒரு இடத்திற்கு தன்னை எடுத்துச்சென்றதாக அவர் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்:

கட்டியிருந்த எனது கண்களை அவர்கள் அவிழ்த்துவிட்ட [போது] நான் அங்கு ஏனைய நான்கு நபர்கள் இருந்த ஒரு அறையைக் கண்டேன். நான் ஒரு நாற்காலியில் கட்டப்பட்டு எல்ரீரீஈ தரப்புடன் எனக்கிருக்கும் தொடர்புகள் பற்றியும் அண்மையில் வெளிநாட்டிற்குசென்ற காரணம் பற்றியும் விசாரிக்கப்பட்டேன். அவர்கள் எனது ஆடைகளை உரிந்து என்னை அடிக்கத் தொடங்கினார்கள். நான் மின்சாரக் கம்பிகளினால் அடிக்கப்பட்டு, எரியும் சிகரட்டுக்களினால் சூடுவைக்கப்பட்டு, பெற்றோல் திணிக்கப்பட்ட ஒரு பொலித்தின் உறையைக் கொண்டு மூச்சுத்திணறடிக்கப்பட்டேன். பின்னர் அந்த இரவு, நான் ஒரு சிறிய அறையில் அடைக்கப்பட்டேன். தொடர்ச்சியாக மூன்று நாட்கள் நான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டேன். முதலாவது இரவு, ஒருவர் தனியாக வந்து என்னை குதவழியாகப் பாலியலுறவுக்கு உட்படுத்தினார். இரண்டாம் மற்றும் மூன்றாம் நாள் இரவுகளில், இரண்டு பேர் எனது அறைக்கு வந்தார்கள். அவர்கள் என்னை குதவழியாகப் பாலியலுறவுக்கு உட்படுத்திவிட்டு அவர்களுடன் வாய்வழிப் பாலியல் உறவுக்கும் என்னை வற்புறுத்தினார்கள். இந்தப் பாலியல் வல்லுறவுகளின் பின்னர் எல்ரீரீஈ தரப்புடன் எனக்கு தொடர்புகளிருப்பதாக ஒப்புக்கொண்டு ஒரு வாக்குமூலத்தில் நான் கையொப்பமிட்டேன்.

ரீ ஜே (TJ ) என்பவரின் சம்பவம்

ரீ ஜே (TJ ) என்பவர் 19 வயதுடைய ஒருவர். இவர் ஐக்கிய இராச்சியத்தில் தனது கற்கைகளைப் பூர்த்திசெய்து விட்டு இலங்கைக்குத் திரும்பியவர். 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு மாலை நேரத்தில், ரீ ஜே (TJ ) வவுனியாவில் (Vavuniya) ஒரு நண்பரைச் சந்தித்து விட்டு வீடு திரும்பிய நேரத்தில் அவருக்கு அருகில் ஒரு வெள்ளை வேனை நிறுத்தி சிவில் உடைகளை அணிந்திருந்த ஏறக்குறைய ஐந்து அல்லது ஆறு நபர்கள் அதிலிருந்து குதித்தார்கள். அவர்கள் ரீ ஜே (TJ ) ஐ பலவந்தமாக இழுத்து வேனினுள் தள்ளி, அவரின் கண்களைக் கட்டி, தெரியாத ஒரு இடத்திற்கு அவரை கொண்டுசென்றார்கள் என அவர் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்:

கட்டியிருந்த எனது கண்களை அவர்கள் அவிழ்த்துவிட்ட போது நான் ஒரு அறையில் இருப்பதைக் கண்டேன். அங்கு ஐந்து பேர் இருந்தனர். அவர்களில் ஒருவர் இராணுவ சீருடையில் காணப்பட்டார். ஐக்கிய இராச்சியத்தில் எல்ரீரீஈ தரப்புடன் எனக்குள்ள அலுவல் பற்றி அவர்கள் என்னிடம் விசாரிக்கத் தொடங்கினார்கள். வெளிநாட்டில் எல்ரீரீஈ தரப்புடன் எனக்கிருக்கின்ற தொடர்புகள் பற்றி அவர்கள் என்னிடம் வினவினார்கள். நான் பதிலளிக்கவில்லை. அவர்கள் என்னைத் துன்புறுத்தத் தொடங்கினார்கள். முதலில் அறையப்பட்டும் குத்தப்பட்டும் நான் தாக்கப்பட்டேன். அப்போது அவர்கள் என்னைக் கடுமையாகத் துன்புறுத்தத் தொடங்கினார்கள். எனக்கு தடிகளால் அடிக்கப்பட்டு, எரியும் சிக்கரெட்டுக்களால் சூடுவைக்கப்பட்டதுடன் எனது தலை ஒரு நீர் பீப்பாயினுள் அமிழ்த்தப்பட்டது. கேள்விகள் கேட்கப்பட்ட நேரத்தில் உடைகள் உரியப்பட்டு நிர்வாணமாக்கப்பட்டேன். 

அடிகளும் துன்புறுத்தல்களும் அடுத்த நாளும் தொடர்ந்தன. காலையில் எனக்கு கொஞ்சம் தண்ணீர் மாத்திரம் கொடுக்கப்பட்டது. அடுத்த இரவு, எனக்கு உடைகள் கொடுக்கப்பட்டு ஒரு சிறிய இருள் நிறைந்த அறையில் அடைக்கப்பட்டேன். அந்த இரவில் எனது அறைக்குள் ஒரு நபர் நுழைந்தார். அறை இருளாகவிருந்ததால், அவரை என்னால் பார்க்க முடியவில்லை. அவர் எனது தலையைப் பிடித்து சுவரில் பலமாக அடித்து, எனது முகத்தை சுவருக்கு எதிரே தள்ளி என்னைப் பலவந்தமாகக் பாலியல்  வல்லுறவுக்கு உள்ளாக்கி  சித்திரவதைப்படுத்தினார்.

ஜீ டி (GD) என்பவரின் சம்பவம்

ஜீ டி (GD) என்பவர் 31 வயதுடைய ஒரு தமிழ் பெண். இவர் கொழும்பின் ஒரு சுற்றுப்புறத்திலுள்ள தனது வீட்டிலிருந்த போது 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சிவில் உடைகளில் நான்கு பேர் வந்திறங்கினார்கள். அவர்கள் C.I.D.அதிகாரிகள் என அவர்களை அறிமுகப்படுத்தி தனது வீட்டிலிருந்த குடும்ப அங்கத்தவர்கள் அனைவரினதும் அடையாள அட்டைகளை சோதனையிட வேண்டும் என எங்களிடம் கேட்டார்கள் என ஜீ டி (GD) என்பவர் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார். வெளிநாட்டிலிருந்த தனது கணவனின் அடையாள அட்டையைப் பறித்துவிட்டு அவர்கள் தன்னை விசாரணைக்கு வருமாறு அழைத்ததாக அவர் கூறினார்:

கொழும்பிலுள்ள C.I.D. அலுவலகத்தின் நான்காவது மாடிக்கு நான் கொண்டுசெல்லப்பட்டு ஒரு அறையில் அடைத்து வைக்கப்பட்டேன். எந்தவிதமான உணவோ அல்லது தண்ணீரோ எனக்குக் கொடுக்கப்படவில்லை. அடுத்த நாள், சீருடை அணிந்து ஆயுதம் தாங்கிய ஒரு அதிகாரி அடங்கலாக அதிகாரிகள் என்னைப் புகைப்படம் எடுத்துவிட்டு, எனது விரல் அடையாளங்களையும் பெற்றுக்கொண்டு, ஒரு வெறும் தாளில் கையொப்பமிடுமாறு செய்தார்கள். எனது கணவரின் விபரங்கள் எல்லாம் அவர்களிடம் இருப்பதாகக் கூறி அவர் இருக்கின்ற இடத்தைச் சொல்லுமாறு என்னிடம் கேட்டவண்ணமிருந்தார்கள். எனது கணவன் வெளிநாட்டில் இருப்பதாக நான் அவர்களிடம் கூறிய போது, அவர் எல்ரீரீஈ தரப்பின் ஆதரவாளர் எனத் தொடர்ந்தும் அவரைக் குற்றஞ்சாட்டினார்கள். பல பொருள்களைக் கொண்டு நான் அடிக்கப்பட்டேன். விசாரிக்கப்பட்ட நேரத்தில் எனக்கு ஒரு எரியும் சிக்கரெட்டினால் சூடுவைக்கப்பட்டது. திரும்பத்திரும்ப நான் கன்னத்தில் அறையப்பட்டு, மணல் நிரப்பப்பட்ட ஒரு குழாயினால் அடிக்கப்பட்டேன். அடித்த போதெல்லாம் அவர்கள் எனது கணவரின் விபரங்களைக் கொடுக்குமாறு என்னிடம் கேட்டார்கள். ஒரு இரவு நான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டேன். சிவில் உடைகளில் எனது அறைக்கு இரண்டு பேர் வந்தார்கள். அவர்கள் இருவரும் எனது உடைகளைக் கிழித்து என்னைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார்கள். அவர்கள் சிங்களத்தில் கதைத்தார்கள், அதனால் எனக்கு எதுவும் புரியவில்லை. இருளாக இருந்ததால் அவர்களின் முகங்களை என்னால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.

டி எஸ் (DS) என்பவரின் சம்பவம்

டி எஸ் (DS) என்பவரின் தந்தைக்கு யாழ்ப்பாணத்தில் போட்டோ பிரதியெடுக்கும் (Photocopy) ஒரு கடை சொந்தமாகவிருந்தது. இவர் பிரச்சாரத் துண்டுப்பிரசுரங்களை அச்சிட்டு அவற்றை விநியோகிப்பதன் மூலம் எல்ரீரீஈ தரப்புக்கு உதவினார். 2005 ஆம் ஆண்டில், DS என்பவர் 13 வயதாகவிருந்த போது எல்ரீரீஈ தரப்பினால் பலவந்தமாகக் கொண்டுசெல்லப்பட்டு 10 நாட்களாக அவருக்கு கட்டாய இராணுவப் பயிற்சி வழங்கப்பட்டது. அவர் யாழ்ப்பாணத்திற்குத் திரும்பிய பின்னர், எல்ரீரீஈ தரப்பின் கலாச்சார விழாக்களில் பங்குபற்றியும் துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தும் எல்ரீரீஈ தரப்பினருக்காக உழைத்தார். 2009 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், இவர் 17 வயதாகவிருந்த போது, பாடசாலை விட்டுத் திரும்பிக்கொண்டிருந்த நேரத்தில் போலீஸும் இராணுவ அதிகாரிகளும் இணைந்த ஒரு குழுவினர் இவரைக் கைதுசெய்தனர். இவரின் கண்கள் கட்டப்பட்டு தெரியாத ஒரு தடுப்பு நிலையத்திற்குக் கொண்டுசெல்லப்பட்டார் என DS என்பவர் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவிடம் கூறினார்:

எல்ரீரீஈ தரப்புடன் எனக்கிருக்கின்ற செயற்பாடுகள் அனைத்தையும் பற்றி அவர்கள் என்னிடம் வினவினார்கள். அந்தத் தரப்புக்கான எனது உழைப்புப் பற்றி எல்லா விடயங்களையும் அவர்களிடம் கூறினால், தன்னை வெளியில்செல்ல அனுமதிப்பதாக அவர்கள் கூறினார்கள். நான் எதையும் ஏற்க மறுத்தேன். அப்போது அவர்கள் என்னை அடிக்கத் தொடங்கினார்கள். நான் சப்பாத்துக்களினால் மிதிக்கப்பட்டுக் குத்தப்பட்டேன். அப்போது எனது உடைகளை முழுமையாகக் கழற்றுமாறு அவர்கள் என்னை வற்புறுத்தினார்கள். என்னைத் தலைகீழாகத் தொங்கவிட்டு எரியும் சிக்கரெட்டுக்களினால் எனக்கு சூடுவைக்கப்பட்டது. நான் மணல் நிரப்பப்பட்ட குழாய்களையும் முள்ளுக்கம்பிகளைக் கொண்டு தாக்கப்பட்டேன். அதிகாரிகள் எனது பாதங்களை தனியாக வைத்து மிதித்தும் பெற்றோல் திணிக்கப்பட்ட ஒரு ப்ளாஸ்டிக் பையை எனது தலையில் பலமாக இட்டு என்னை மூச்சுத்திணறச் செய்யவும் முனைந்தனர்.

ஒரு அதிகாரி எனது முன்னிலையில் பாலியல் செயல்களைச் செய்தார். அப்போது என்னை அவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார். அங்கு எந்தவித மலசலகூடமும் இருக்கவில்லை. ஒரு ப்ளாஸ்டிக் பையை நான் பயன்படுத்த வேண்டியிருந்தது. என்னை விசாரித்த அதிகாரிகள் என்னை நித்திரைசெய்ய விடவில்லை. முதல் இரண்டு மூன்று நாட்களுக்கு அவர்கள் எனக்கு எந்தவிதமான உணவையும் தரவில்லை. அவர்கள் எனது கைவிரல் அடையாளத்தைப் பெற்றுக்கொண்டு என்னைப் புகைப்படமெடுத்தார்கள். நான் இறுதியாக சிங்கள மொழியிலிருந்த ஒரு வாக்குமூலத்தில் கையொப்பமிட்டு அவர்கள் கூறிய எல்லவாற்றையும் ஒப்புக்கொண்டேன்.

Your tax deductible gift can help stop human rights violations and save lives around the world.

Region / Country