ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2018 ஒக்டோபர் 26 அன்று பிரதம மந்திரியை திடீரெனப் பதவி நீக்கி விட்டு அவருக்குப் பதிலாக, 2015 யனவரியில் இடம் பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தன்னால் தோற்கடிக்கப்பட்ட, பரந்தளவில் துஷ்பிரயோகங்களுடன் தொடர்புபட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை நியமித்த பின்னர் இலங்கை ஒரு அரசியலமைப்பு ரீதியான நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது. எதிர்ப்புக்களின் பின்னர் அரசியற் கட்சிகளால் பாராளுமன்றத்தில் ஒரு நம்பிக்கை வாக்கெடுப்புக் கோரிக்கை விடுக்கப்பட்டதும், ஜனாதிபதி பாராளுமன்றத்தைக் கலைத்து 2019 ஜனவரி 5 ஆம் திகதி புதிய தேர்தலை நடத்த அழைப்பு விடுத்தார். இந்நடவடிக்கைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் சவால் விடுக்கப்பட்டது; இது எழுதப்படும் தருவாயில் நீதிமன்றத்தின்தீர்ப்பு வெளியாகவில்லை.
இவ் அரசியல் நெருக்கடி தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) அரசாங்கப் படைகளுக்குமிடையே 27 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டு ப் போரின் போது நிகழ்ந்த படுமோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான உண்மையையும் நியாயத்தையும் உறுதிப்படுத்துவதை இன்னும் தாமதப்படுத்துகிறது.
செப்டெம்பர் மாதத்தில், புதிதாக அமைக்கப்பட்ட காணாமற் போனோர் தொடர்பான அலுவலகம் (OMP) பாதிப்புக்குள்ளானோருக்கும் சாட்சிகளுக்கும் ஓர் இடைக்காலப் பரிகாரத்தைப் பரிந்துரைத்தது. ஆயினும் அண்மைய அரசியல் மாற்றங்கள் அவற்றை நடத்துவதை உறுதியற்றதாக்குகின்றன.
பாதுகாப்புத் துறை மறுசீரமைப்பு பற்றிய வாக்குறுதியிலிருந்து நழுவிக் கொள்வது காணப்படுகிறது. சில நேர்மையான மறுசீரமைப்புக்கள் இருந்த போதிலும், அரசாங்கம் உள் நாட்டுக் குழுக்களும் சர்வதேச சமூகமும் அளவுக்கதிகம் பரந்துபட்டதாக விமர்சித்த பல்வேறு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவுகளை முன் வைத்தது.
சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் குறைந்த பட்சம் இரு மரணங்களுக்கு வழி வகுத்தன.
2018 மாச் 1 ஆம் திகதி 2008 ஆம் ஆண்டின் கொத்துக் குண்டு சமவாயத்தினை (Convention on Cluster Munitions) இலங்கை அங்கீகரித்ததால் கண்மூடித்தனமாக பயன்படுத்த கூடிய ஆயுதங்களை தடை செய்த முதலாவது தெற்காசிய நாடானது. 1997 ஆம் ஆண்டின் கண்ணிவெடித் தடை ஒப்பந்தத்தில் 2017 திசெம்பர் 13 ஆம் திகதி அங்கீகரித்ததைத் தொடர்ந்து இது நிகழ்ந்தது.
நிலைமாறுகால நீதி
மகிந்த ராஜபக்ஷவை பிரதம மந்திரியாக்குவது என்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் திடீர் முடிவு நாட்டில் ஏற்பட்ட துஷ்பிரயோகமான நடவடிவக்கைகள மீளும் என்ற அச்சத்தையும் ஏற்படுத்தி நிலைமாறுகால நீதியிலும் இன்னும் தாமதம் ஏற்படும். என்ற அச்சத்தையும் ஏற்படுத்தியது.
2009 இல் LTTE தோற்கடிக்கப்பட்ட பின்னர், இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களைக் கவனத்திற் கொள்வதற்குப் பதிலாக, ராஜபக்ஷ அரசாங்கம் ஊடகங்களை அடக்கியாண்டது, மனித உரிமைச் செயற்பாட்டாளர்களை இலக்கு வைத்தது, எதிர்ப்பாளர்களென கருதப்ப பட்டவர்களைத் தன்னிச்சையாகத் தடுத்து வைப்பதும், சித்திரவதை செய்வதும் தொடர்ந்தது. 2015 இல் தேர்தலில் ராஜபக்ஷவின் தோல்வியின் பின்னர் பதவிக்கு வந்த புதிய அரசாங்கம் போருடன் தொடர்பான துஷ்பிரயோகங்களுக்காக பொறுப்புக் கூறவைப்பதை உறுதி செய்வதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் உறுதியளித்தது.
ஆயினும், 2018 அளவில், இலங்கை மனித உரிமைகள் தொடர்பான சில நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கும் அதே வேளை, அது நிலைமாறுகால நீதி தொடர்பாக போதிய முன்னேற்றத்தை அடையத் தவறியது. மனித உரிமைகள் சபையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட காணாமற் போனோர் தொடர்பான ஓர் அலுவலகம்; உண்மையறிதலும் நல்லிணக்கமும் தொடர்பான ஓர் ஆணைக்குழு; பாதிப்புகளுக்கு ஈடுசெய்தல் ; மீண்டும் மீண்டும் நிகழாமையும்; சட்ட நடவடிக்கைகளின் மூலம் பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதற்கான ஒரு விசேட நீதிமன்றம், ஆகிய நான்கு பொறிமுறைகளுள் முதலாவது பொறிமுறை மாத்திரமே மூன்று ஆண்டுகளின் பின்னர் நிறுவப்பட்டுள்ளது.
OMP தனது இடைக்கால அறிக்கையை செப்டம்பர் மாதத்தில் வெளியிட்டது. அதில் காணாமல் போனோரின் குடும்பங்களது முறைப்பாடுகள் தொடர்பாக புலனாய்வுகள் நடத்தப்படும் வரை அவர்கள் காத்துகொண்டு இருக்கும் அதே வேளை அவர்களுக்கான இடைக்கால நிவாரணத்தை அரசு வழங்கவேண்டும் என வலியுறுத் தப்பட்டுள்ளது . அத்துடன் இடைக்கால அறிக்கையில் குறித்த முறைப்பாட்டுக்காரர் OMP யை நம்புவது கடினம் என்பதை முக்கியமாக ஏற்று கொண்டு கடந்தகாலத்தின் ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் தோல்வியடைந்ததை காரணமாக கூறி OMP யின் அதிகாரத்தை வலுப்படுத்தவேண்டும் என்றும், அரசின் தலையீடு இன்றி அது சுயாதீனமாக செயற்பட விடப்பட வேண்டும் என்றும் குறிப்பிடபட்டுள்ளது. OMP ஆனது நாடெங்கிலும் 12 பிராந்திய அலுவலகங்களை அமைக்க உறுதி பூண்டதுடன் முன்மொழியப்படும் பாதிப்புகளுக்கு ஈடுசெய்தலுக்கான ஒரு அலுவலகத்தினூடாக காணாமற் போனோரின் குடும்பங்களின் குறை தீர்க்கும் அவசியத்தையும் வலியுறுத்தியது.
மனித உரிமைகள் சபையின் தீர்மான நிபந்தனைகளின் கீழ் பாதிப்புகளுக்கு ஈடுசெய்தல் பற்றிய ஒரு சட்ட வரைபை அரசாங்கம் மேற்கொண்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும், தற்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அரசியல் உறுதிப்பாடின்மையைக் கருதுகையில், நிலைமாறுகால நீதிப் பொறிமுறை தொடர்பில் எத்தகைய எதிர்காலம் இருக்கும் என்பது தெளிவற்றிருக்கிறது.
பொதுவாக பல்வேறு சமூகங்களின் எதிர்ப்புக்களுக்குப் பின், பாதுகாப்புப் படைகளால் அல்லது ஏனைய அரச நிறுவனங்களால் கைப்பற்றப்பட்ட காணிகளை விடுவிப்பதில் அரசாங்கம் முன்னேற்றம் காட்டியுள்ளது. அதே வேளை, மிக விசாலமான பகுதிகள் இன்னமும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. சில காணிகள் போரின் போது கைப்பற்றப்பட்ட அதே வேளை, புதிய காணிகள் போர் முடிவடைந்த பின்னர் கைப்பற்றப்பட்டுள்ளன. இராணுவத்தினராற் கைப்பற்றப்பட்ட பகுதிகளை தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக வைத்திருப்பது அவசியமென அரசாங்கம் கூறுகின்ற போதிலும், அதற்கு மாறாகச் சில இடங்களில் விவசாயம், வணிகம், அல்லது சுற்றுலா என்பவற்றினூடாக வணிக இலாபங்களைப் பெறுவதற்காகப் பயன்படுத்தப்படுவதாக செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
போரின் போது நிகழ்ந்தது போன்று, இராணுவ நோக்கங்களுக்காக பாடசாலைகளைப் பயன்படுத்துவதிலிருந்து தவிர்த்து கொள்ளுமாறு ஆயுதப் படையினரைத் தூண்டும் பாதுகாப்பான பாடசாலைகள் தொடர்பிலான சர்வதேச பிரகடனத்தில் இலங்கை கைச்சாத்திடவில்லை.
பாதுகாப்புத் துறை மறுசீரமைப்பு
உறுதிமொழிகள் அளிக்கப்பட்டிருந்த போதிலும், பயங்கரவாதத் தடுப்புச்சட்டத்தை மீளப்பெறவோ மாற்றி அமைக்கவோ அரசாங்கம் தவறியுள்ளது. இச்சட்டம் கொடூரமானதொன்று என பரவலாக கண்டிக்கப்பட்ட ஒன்று ஆகும். அதில் பயங்கரவாதத்தைப் பற்றி அளவுக்கதிகம் விரிவான ஒரு வரைவிலக்கணத்தையும், குற்ற ஏற்புக்களைப் பெறுவதற்காக சித்திரவதை செய்வது உட்பட, வேறு நடைமுறை மீறல்களுக்கு வழி செய்து , நெடுங்கால நிருவாகரீதியாக தடுத்துவைப்பு ஏற்பாடுகளையும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை (PTA) நீக்கவோ மறுசீரமைக்க வோ தவறி உள்ளது. .
இலங்கையின் மனித உரிமைகள் ஆணைக்குழு நபர்கள் தடுத்து வைக்கப்படும் இடங்களுக்கு தடங்கலின்றி அணுக கூடியதாக இருந்தமை பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளோருக்கு எதிரான துஷ்பிரயோக மட்டங்களைக் குறைக்க உதவியுள்ளது.
யூலை மாதம், பயங்கரவாதத்தை எதிர்க்கையில் மனித உரிமைகளையும் அடிப்படைச் சுதந்திரங்களையும் ஊக்குவிப்பதும் பாதுகாப்பதும் தொடர்பான ஐ.நா வின் முன்னை நாள் விசேட அறிக்கையாளர் பென் எமர்சன் இலங்கையைப் பற்றிய வெளியிட்ட ஓர் அறிக்கையில் PTA ஐ மீளச் சரிபார்க்கும் செயற்பாடு "முற்றாக ஸ்தம்பித்துள்ளது" என குறிப்பிடுகிறார்.
சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள்
மாச் மாதம், உள்ளூர் வாய்த் தகராறுகள் முஸ்லிம்களுக்கு எதிரான கலகங்களாக வெடித்து, குறைந்த பட்சம் இருவரின் மரணத்துக்கு வழி வகுத்தன. இந்நிகழ்வுகளைத் தொடர்ந்து, அரசாங்கம் ஒரு 10 நாள் தேசிய அளவிலான அவசர நிலையைப் பிரகடனப்படுத்தியது.
அண்மைய ஆண்டுகளில், அதி தேசியவாதச் சிங்களப் பௌத்தக் குழுக்கள் தொடர்புபட்டு முஸ்லிம்களுக்கு எதிரான ஏராளமான வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டமையை இலங்கை கண்டுள்ளது. தற்போதைய சம்பவங்கள் பெப்புருவரி மாதம் கிழக்கு மாவட்டமான அம்பாறையில் தொடங்கி, கண்டியில் ஏற்பட்ட மோதல்கள் வரை தொடர்ந்துள்ளன. இரு பள்ளிவாயில்களும் ஏராளமான வீ டுகளும் சிறு வணிகங்களும் வாகனங்களும் அழிக்கப்பட்டதாக அவதானிப்பாளர்கள் அறிவித்தனர். அதிகாரிகள் தாக்குதல்களுடன் தொடர்பான பல சந்தேகநபர்களைக் கைது செய்த போதிலும், வன்முறையின் போது பொலிசார் பாராமுகமாக இருந்தமையைப் பற்றிய கவலைகள் இருக்கத்தான் செய்தன.
பெண்களினதும் சிறுமிகளினதும் உரிமைகள்
அரசாங்கம் பெண்களுக்கு எதிரான பாரபட்சத்தை இல்லாதொழித்தல் (CEDAW) தொடர்பான ஐ.நா. கமிட்டியின் முன் 2017 இல் நிகழ்ந்த கருத்து ப் பரிமாறலின் பின் செய்யப்பட்ட பரிந்துரைகள் பலவற்றிற்கு பதிலளிக்கத் தவறியது. நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகளின் அல்லது நீதிமன்றங்களின் முன் தோன்றக்கூடிய பாதிப்புக்குள்ளானோருக்கும் சாட்சிகளுக்குமான பாதுகாப்புப் பிரச்சினைகளையும், அரசியலமைப்பும், நிலைமாறுகால நீதிப் பொறிமுறைகள தொடர்பான பல்வேறு ஆலோசனைகளுக்கு, பெண்கள் தோன்றுவது குறைவாயிருப்பது தொடர்பான கவலைகள் இவற்றில் உள்ளடங்கின.
அத்துடன் CEDAW இனாற் சுட்டிக் காட்டப்பட்டவாறு, பாலியல் அல்லது வீட்டு வன்முறைச் சம்பவங்கள் உட்பட பெண்களும் சிறுமிகளும் நீதியை அணுக இயலுமாவதை உறுதிப்படுத்த உதவுமுகமாக நிறுவனம் சார் தடைகளையும் சட்ட அமுலாக்கல் தப்பெண்ணங்களையும் களைவதற்கான படிமுறைகளை அரசாங்கம் இன்னமும் மேற்கொள்ள வேண்டியுள்ளது.
முஸ்லிம் பெண்களைப் பாதிக்கும் திருமணமும் விவாகரத்தும் தொடர்பான சமத்துவமின்மைப் பிரச்சினைகள் தொடர்பான சட்டங்களை மறுசீரமைப்பது தொடர்பில் கவனிக்கக்கூடிய முன்னேற்றம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை.
பாலியல் நாட்டமும் பாலின அடையாளமும்
கருத்தொருமித்த ஒருபாற் பாலியல் நடத்தையைக் குற்றவியல் செயலாக்கும் , தண்டனைக் கோவையின் 365, 365A ஆகிய பிரிவுகளை இலங்கை மீளப்பெறவில்லை. பெண் தற்பாலியலர், ஆண் தற்பாலியலர், இருபாற் சேர்க்கையினர், பால்மாறியோர் (LGBT) ஆகிய சிலர்—குறிப்பாக தெளிவாகத் தெரியும் வண்ணம் பாலினத்தை உறுதிப்படுத்தாதோர்—ஒருதலைப்பட்சமான கைது, பொலிசாரினால் தவறாக நடத்தப்படுகின்றமை, சுகாதாரப் பராமரிப்பு, தொழில், வீட்டு வசதி என்பவற்றைப் பெறுவதில் பாரபட்சம் காட்டப்படுதல் என்பவற்றுக்கு முகங் கொடுக்கின்றனர். சுகாதார அமைச்சு 2016 இல் ஒரு பாலின அடையாளங் காணற் சான்றிதழை (Gender recognition Certificate) ஏற்படுத்தியதுடன், அது ஆட்களுக்கு அவர்களின் சட்டப்படியான பாலினத்தை மாற்ற அனுமதிக்கின்ற போதிலும் முதலில் ஓர் உளநல மதிப்பீட்டைத் தேவைப்படுத்துகிறது. அரசாங்கம் 2017 இல் அதன் ஒட்டுமொத்த உலகலாவிய கால மீளாய்வின் (Universal Periodic Review) போது ஒருபாற் பாலியல் நடத்தையைக் குற்றமற்றதாக்குவதற்கான பரிந்துரைகளை மறுத்த போதிலும், LGBT ஆட்களை பாரபட்சம் காட்டப்படுவதிலிருந்து பாதுகாப்பதற்கான பரிந்துரைகளை ஏற்றுக் கொண்டது.
முக்கிய சர்வதேசச் செயற்பாட்டாளர்கள்
நவம்பர் மாத அரசியல் நெருக்கடிகளைத் தொடர்ந்து, அதன் அரசியலமைப்புக்கு ஏற்ப நடந்து கொள்ளுமாறு பல அரசாங்கங்கள் இலங்கை அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டன.
செப்டெம்பரில், அதன் உறுதிமொழிகளை வேகமாகவும் இன்னும் பொருள் பொதிந்தவாறும் நடைமுறைப்படுத்துமாறு மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர்
ஆணையாளர் இலங்கையிடம் கேட்டுக் கொண்டதுடன், 2015 ஒற்றோபர் தீர்மானத்தில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு உறுதிமொழிகளின் மீதான முன்னேற்றமின்மையைப் பற்றிய கவலையை வெளிப்படுத்தினார்.
இலங்கையின் மீதான மனித உரிமைகள் சபையின் உயர் ஆணை 2019 மார்ச்சில் காலாவதியாகிறது, அதன் பின்னர் அது நீடிக்கப்பட்டாலேயொழிய பொறுப்புக் கூறற் பிரச்சினைகளைக் கண்காணிப்பதை ஐ.நா. நிறுத்திக் கொள்ளும்.
மனித உரிமைகள் சபையிலிருந்து வெளியேறிய போதிலும் அது மனித உரிமைப் பொறுப்புக் கூறல் தொடர்பில் கவனம் செலுத்தப்பட வேண்டிய விடயத்தில் தொடர்ந்தும் ஈடுபாடு கொள்ளுமென ஐக்கிய அமெரிக்கா கூறுகிறது. ஐ.நா. அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கு உறுப்பினர்களை அனுப்பும் முயற்சியின் ஒரு பகுதியாக ஐக்கிய அமெரிக்கா இலங்கை இராணுவத்துடன் இணைந்த செயற்பாடுகளையும் பயிற்சிகளையும் நடத்தியது.
சீனாவினால் கட்டப்பட்ட ஒரு துறைமுகத்தின் கட்டுப்பாடு உட்பட இதை இயலுமாக்குவதற்காக இது இலங்கை அரசாங்கம் அரசியல் விட்டுக் கொடுப்புக்களைச் செய்யுமெனும் கவலைகள் இருக்கின்ற போதிலும், நாடெங்கிலும் குறிப்பிடத் தக்க உட்கட்டமைப்பு அபிவிருத்திகளை ஏற்படுத்தும் “ஒரு வளையம், ஒரு பாதை” என்னும் தொடக்க முயற்சியினூடாக சீனா இலங்கையுடன் ஈடுபாடு கொண்டிருக்கிறது.