Skip to main content

World Report 2015: இலங்கை

Events of 2014

 

போர்க்கால விதிமீறல்களுக்கான பொறுப்பேற்றுக்கொள்வதில் இலங்கை அரசு சிறிய முன்னேற்றத்தையே கண்டுள்ளது. மார்ச் 2013 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தை அரசு கடைப்பிடிக்கத் தவறியதால், 2014-ஆம் ஆண்டு புதிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்தத் தீர்மானம் 2009ஆம் ஆண்டு முடிவடைந்த இலங்கை குடிமைப் போரின்போது இரண்டு தரப்பிலும் இடம்பெற்றசர்வதேச மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமானச் சட்டங்களின் மீறல்கள், மற்றும் அவை தொடர்பான குற்றங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக ஐ.நா மனித உரிமைகள் உயர் ஆணையரை (யு.என்.சி.எச்.ஆர். (OHCHR)) நியமித்துள்ளது.

விமர்சிப்பவர்கள் மேல் அரசாங்கம் அதன் அடக்குமுறைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்துள்ளது. மார்ச் 2014-இல், இரு தமிழ் இன செயற்பாட்டாளர்களின் கைது பற்றி ஆய்வு செய்துகொண்டிருந்த இரண்டு புகழ்பெற்ற மனித உரிமை ஆர்வளர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இந்த இருவரும் உடனடியாக விடுவிக்கப்பட்ட போதும் அரசாங்கம் ஏனைய பல தமிழர்களை பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்தது. மேலும் அது 16 வெளிநாட்டுத் தமிழ் அமைப்புகளை, அவற்றின் சட்டவிரோத நடவடிக்கைக்கான எந்த ஆதாரத்தையும் தெரிவிக்காமல், பயங்கவாதத்துக்கு அவை உதவி செய்வதாக குற்றஞ்சாட்டியது.

யூன் மாதத்தில் தீவிர இனவாத நிறுவனமாகிய புத்த போதுபாலசேனா (BBS) நடத்திய திட்டமிட்ட ஒரு ஊர்வலம் வன்முறையில் வெடித்தது, அதில் நான்கு முஸ்லிம்கள் மரணமடைந்தனர், குறைந்தபட்சம் 80 பேர் காயமடைந்தனர் மற்றும் அநேக முஸ்லிம் வீடுகளும் வணிகங்களும் அழிக்கப்பட்டன.

வெளிநாடுகளில் புகலிடம் மறுக்கப்பட்ட பிறகு இலங்கைக்கு வலுக்கட்டாயமாகத் திரும்பி வந்த தமிழர்களை அரசாங்கம் நடத்திய விதம் தொடர்ந்து குறிப்பிடத்தக்க அளவு கவலையளிப்பதாக உள்ளது. 2014-இல், இலங்கைக்கு புகலிடம் கேட்டு வந்த அயல்நாட்டவர்களை அரசாங்கம் வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பத் தொடங்கியது, அவர்களில் பலர் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானில் அபாயத்தில் உள்ள சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாவர்.

அரசாங்கம் போரால் பாதிக்கப்பட்ட வடக்குப் பகுதிகளில் புனர்வாழ்வு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றது. 2014-இல், நீண்டகால உறுதியளிக்கப்பட்ட பாதிக்கப்பட்டோர் மற்றும் சாட்சி மசோதா சட்டமாக்கப்பட்டது.

பொறுப்புடைமை மற்றும் சர்வதேச விசாரணைகள்

2012 மற்றும் 2013-ஆம் வருடத்தில் மனித உரிமைகள் குழுத் தீர்மானங்களால் பரிந்துரைக்கப்பட்டவாறு அரசுப் படைகளாலும் மற்றும் தமிழ் ஈழ விடுதலைப் புலிகளாலும் (எல்.ரி.ரி.இ (LTTE)) மேற்கொள்ளப்பட்ட யுத்தக் குற்றங்களை விசாரித்து வழக்குத் தொடுப்பதற்கான அர்த்தமுள்ள நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை மஹிந்தா ராஜபக்சே அரசு ஏற்க மறுத்தது. அதற்குப் பதிலாக, சந்தேகத்துக்குரிய எல்.ரி.ரி.இ (LTTE) உறுப்பினர்கள் மற்றும் காவலில் உள்ள புலிப்படை ஆதரவாளர்கள் ஆகியோருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறை உள்ளிட்ட சித்தரவதை பற்றிய நம்பகமான குற்றச்சாட்டுகளை விசாரிக்காமை அல்லது வழக்குத் தொடராமை ஆகிய தனது நீண்டகால நடவடிக்கைகளை அரசாங்கம் தொடர்ந்து மேற்கொண்டது.

அதன் விளைவாக, மனித உரிமைகள் குழு மார்ச் 2014-இல் ஒரு உறுதியான தீர்மானத்துக்கு அனுமதியளித்தது, அதன் மூலம் “மனித உரிமை மீறல்கள், மற்றும் அவை தொடர்பான குற்றங்களின் கடுமையான மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்த முழுமையான விசாரணைகளை” மேற்கொள்வதற்கு யு.என்.சி.எச்.ஆர். (OHCHR)–க்கு ஆணையிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை மார்ச் 2015-இல் சமர்ப்பிக்கப்படும்.

மேலும், இந்தத் தீர்மானம் செயற்பாட்டாளர்களைக் குறிவைத்தல் மற்றும் முஸ்லிம்கள் மீதான நடவடிக்கைகள் உட்பட, அரசாங்கத்தால் தற்போது மேற்கொள்ளப்படும் விதிமீறல்கள் குறித்து விசாரணை செய்வதற்காகவும் யு.என்.சி.எச்.ஆர். (OHCHR) நியமிக்கப்பட்டுள்ளது. அது யு.என்.சி.எச்.ஆர். (OHCHR) விசாரணையுடன் இணைந்து நீதி மற்றும் பொறுப்புடைமையை நிலைநாட்டுவதற்கு அரசாங்கத்தின் மீதான கடந்தகால அழைப்புகளை மீண்டும் வலியுறுத்தியது.

பதிலாக, சர்வதேச விசாரணைக்கு ஒத்துழைக்கப் போவதில்லை எனவும், விசாரணைக் குழு உறுப்பினர்கள் நாட்டுக்குள் நுழைவதற்காகக் கோரும் விசா மறுக்கப்படும் எனவும் இலங்கை அரசு வெளிப்படையாக அறிவித்துள்ளது. ஐ.நா விசாரணைக்குத் தகவலளிக்கும் இலங்கைப் பிரஜைகளும் தேசத் துரோகிகளாகக் கருதப்படுவார்கள் எனவும் அரசாங்க உறுப்பினர்கள் எச்சரித்துள்ளனர். அரசாங்கம் “சாட்சியளிப்பபோர் கொடுக்கும் சான்றின் அடிப்படையில் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும்” என ஒரு அமைச்சரவை உறுப்பினர் அச்சுறுத்தியுள்ளார்.

யூலை மாதத்தில், தமது “காணாமல் போனவர்கள்” குறித்த ஆணையத்துக்கு உதவுவதற்காக சர்வதேச வல்லுநர்கள் குழு நியமிக்கப்படும் என அரசாங்கம் அறிவித்தது, மேலும் போர்ச்சட்ட மீறல்கள் மற்றும் அச்சுறுத்தலின் பேரில் காணாமற் போனவர்கள் ஆகிய குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக அந்தக் குழுவுக்கு அங்கீகாரம் வழங்கியது.

சிவில் சமூகம் மற்றும் குற்றஞ் சாட்டுபவர்கள் மீதான கடும் நடவடிக்கை

பொறுப்புக் கூறல் தொடர்பாக நியாய ஆதரவு தேட முற்பட்ட இலங்கை செயற்பாட்டாளர்களின் எதேச்சையான கைது 2014 இலும் தொடர்ந்தது. மேலும், அரசாங்கமானது தனது அதிரடி நடவடிக்கையை சுதந்திரமான ஊடகங்கள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் மீதும் விரிவுபடுத்தியது.

மார்ச் மாதத்தில், பிரபல மனித உரிமை செயற்பாட்டாளர்களாகிய கொழும்பில் செயற்பட்டு வரும் இன்போம் நிறுவனத்தைச் சேர்ந்த ருகி பெர்னாண்டோ, மற்றும் கத்தோலிக்கப் பாதிரியார் பிதா பிரவீன் மகேசன் ஆகிய இருவரும் மூன்று நாட்கள் தடுப்புற் காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். வலுக்கட்டாயமாக காணாமல் போனவர்களின் சார்பாகச் செயற்பட்டு வரும் பாலேந்திரன் ஜெயாகுமாரி என்பவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இடைநிலை பராமரிப்புக்கு உத்தரவிடப்பட்டிருந்த அவருடைய 13 வயது மகள் பாலேந்திரன் விதுஷைனியின் நலவாழ்வை உறுதிப்படுத்துமாறு அவர்கள் கேட்டுக்கொண்டனர். மனித உரிமை வழக்கறிஞர்களாகிய நாமல் ராஜபக்‌ஷே, மஞ்சுளா பதிராஜா மற்றும் லக்‌ஷன் டயஸ் ஆகியோர் அடையாளம் தெரியாத நபர்களால் அச்சுறுத்தப்பட்டனர்.

குறிப்பாக தமிழர்கள் அதிகமாக வசிக்கும் வடக்குப் பகுதியில் உள்ள ஊடகங்கள், அறிக்கை வெளியிடுதலில் தொடர்ந்து கட்டுப்பாடுகளைச் சந்தித்து வருகின்றன. 2014 இல், வடக்குப் பகுதியைச் சேர்ந்த பத்திரிக்கையாளர்களுக்குப் பயிற்சியளிப்பதற்காக தெற்குப் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பணிமனையை பாதுகாப்புப் படைகள் வலுக்கட்டாயமாக மூடியது, அதில் பங்கேற்றிருந்தவர்களை வீட்டுக்குச் செல்லுமாறு ஆணையிட்டது.

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் உள்ள முந்தைய போர் பிரதேசங்களில் பல்வேறு அபிவிருத்தி, மீள்குடியமர்த்தல் மற்றும் புனரமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வரும் அதே சமயம், தமிழ் இன மக்களின் முக்கய விடயமான உரிமைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அரசாங்கத்தின் உறுதிமொழி பெரும்பாலும் நிறைவேறாமலேயே உள்ளது. இறந்து போனவர்களுக்கான நினைவு கூறல் சேவைகளை நடத்துதல் அல்லது தேசிய கீதத்தை தமிழில் பாடுதல் ஆகியவற்றுக்கு தமிழ்ச் சமுதாயங்களுக்கு அனுமதி அளித்தல் என்பன போன்ற சாதாரணமான நடவடிக்கைகளுக்கும் அரசாங்கம் தடை விதித்துள்ளது.

எல்.ரி.ரி.இ (LTTE) முதல் உலகம் முழுவதும் இயங்கும் வன்முறையற்ற தமிழ் அமைப்புகள் வரையிலான அனைத்து நிறுவனங்களின் சொத்துக்கள் மற்றும் நிதி ஆதாரங்களை முடக்குவதற்கு அரசாங்கம் கட்டளை பிறப்பித்தது. இந்த கட்டளைக்காக உண்மையான குற்றச்சாட்டு ஆதாரம் எதையும் அரசாங்கம் வழங்கவில்லை. இலங்கைக்கு வருகை புரியும் உள்நாட்டு ஆர்வளர்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்ட குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதேச்சாதிகார தடுப்புக் காவலுக்கான சாத்தியமான ஆபத்தை ஏற்படுத்தும் வகையயில், பட்டியலிடப்பட்ட குழுக்களுடன் தொடர்பு கொண்டுள்ளவர்களுக்கு எதிராகவும், எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை இராணுவ ஊடகப்பேச்சாளர் கூறினார்.

மதச் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள்

கொழும்புவிலிருந்து 60 கிலோமீட்டர் தெற்கே உள்ள அலுத்கமையில் முன்னதாக நிகழ்ந்த வாக்குவாதங்கள் உச்சகட்டமாக யூன் மாதத்தில் வன்முறையில் முடிந்தது. முஸ்லிம் இளைஞர்களுக்கும் புத்தத் துறவிகளை ஏற்றி வந்த வேன் ஓட்டுநருக்கும் இடையே ஏற்பட்ட ஒரு சிறிய போக்குவரத்துச் சம்பந்தமான சிறு பிரச்சினையை மையமாக வைத்து இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. அந்தப் பகுதியில் பௌத்தர்களுக்கு உள்ள பாதுகாப்பு குறித்த கவலையை வெளிப்படுத்தும் விதமாக, அடுத்த நாள் கலகோடஅத்தி ஞானசரதேர என்ற மத வெறிபிடித்த தலைவரின் தலைமையில் ஒரு கண்டனப் பேரணியை நடத்தியது. அதை தொடர்ந்து, தடிகளையும் மற்ற வாள்களையும் வைத்திருந்த ஒரு கும்பல் முஸ்லிம்களைத் தாக்கியது அரசாங்கம் ஊரடங்குச் சட்டத்தைப் பிறப்பித்த பிறகும் கூட, அருகிலுள்ள முஸ்லிம் வீடுகளும் உடைமைகளும் தாக்கப்பட்டன. அதில் குறைந்தபட்சம் நான்கு முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர், 80 பேர் காயமடைந்தனர், மேலும் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் உள்ள அனேகமான வீடுகளும் வணிகங்களும் அழிக்கப்பட்டன. 

சனாதிபதி ராஜபக்‌ஷே உள்ளிட்ட மூத்த அரசு அதிகாரிகள் வன்முறையைக் கண்டித்து பொது அறிக்கைகளை வெளியிட்டனர். சிலர் கைது செய்யப்பட்டதாக அரசாங்கம் அறிவித்தது, ஆனால் இந்தக் கட்டுரை வெளியாகும் வரை சந்தேகத்துக்குரியவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

அகதிகள்

வெளிநாட்டில் புகலிடம் கேட்டு வலுக்கட்டாயமாக நாடு திரும்பியுள்ள இலங்கைப் பிரஜைகள் பற்றிய தீவிரப் பிரச்சினைகள் இன்னும் தொடர்கின்றன. மார்ச் 2014 முதல் அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய பிறகு தான் பலர் வலுக்கட்டாயமாகத் நாடு திரும்பல்கள் இடம்பெற்றுள்ளன, இதில் பலர் கைது செய்யப்பட்டதோடு, கடலி பிரதேசத்தில் நிலவிய ஆபத்தான சூழ்நிலையில் பலர் இறந்தும் விட்டனர். ஐக்கிய இராச்சியம் மற்றும் இதர நாடுகளிலிருந்து புகலிடம் கிடைக்காமல் திரும்பி வந்தவர்களும் உள்ளடங்கலாக, எல்.ரி.ரி.இ (LTTE) இயக்கத்துடன் தொடர்பு கொண்டிருப்பதாக சந்தேகிக்கப்படுபவர்களை அதிகாரிகள் சித்தரவதைப்படுத்துவதை மனித உரிமைக் கண்காணிப்பாளர்களும் மற்றவர்களும் பதிவு செய்துள்ளனர்.

சமீபத்திய வருடங்களில், குறிப்பாக 2014-இன் தொடக்கத்திலிருந்து, மற்ற நாடுகளிலிருந்து புகலிடம் கோரி இலங்கைக்கு வந்தவர்களை அரசாங்கம் வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பத் தொடங்கியது, இதில் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர் ஆணையரிடம் (UNHCR) பதிவு செய்துள்ள சிலரும் அடங்குவர். அத்தகைய வலுக்கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்பட்டவர்களில் பலர் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானிலிருந்து கொடுமைப்படுத்தப்பட்டு தாய்நாட்டுக்கு அனுப்பப்பட்ட சிறுபான்மை மதத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். நாடு கடத்தப்படுவதற்கு முன்னர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட புகலிடம் கோருவோரை பார்ப்பதற்கு UNHCR அனுமதிக்கப்படவில்லை, இவர்களில் சிலர் முன்னதாகவே அகதிகளாக அங்கீகரிக்கப்பட்டிருந்தனர்.

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்

ஒரு மில்லியனுக்கு மேற்பட்ட இலங்கைப் பிரஜைகள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருகின்றனர், அவர்களில் பலர் பணியில் சேர்ந்து அங்கு சென்றதிலிருந்து வேலை வாய்ப்பு, நாடு திரும்புதல் மற்றும் மறு ஒருங்கிணைப்பு வரையிலான புலப்பெயர்வு சுழற்சியின் ஒவ்வொரு கட்டத்திலும் துஷ்பிரயோகத்துக்கு உட்படக்கூடிய ஆபத்து உள்ளது. தேர்வாளர்களும் முறைப்படுத்தப்படாத துணை முகவர்களும் அளவுக்கு அதிகமான கட்டணங்களை வசூலிக்கின்றனர், அதனால் வெளிநாட்டில் வேலை கிடைக்கும் என உறுதியளிக்கப்பட்ட தவறான தகவலால் புலம்பெயர்வோர் கடன்படுகிறார்கள் மற்றும் பாதிக்கப்படுகின்றனர்.

இலங்கையிலிருந்து வெளியேறியவர்களில் 90 சதவிகிதத்துக்கும் மேற்பட்டவர்கள் தற்போது மத்தியக் கிழக்குப் பகுதியில் வேலை செய்கின்றனர், அங்கு அவர்கள் தங்களுடைய விசாவை தங்களுக்கு வேலையளிப்பவருடன் இணைக்கும் கஃபாலா (Kafala) முறைக்குக் கட்டுப்படுத்தப்படுகின்றனர். இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்தவர்களில் மூன்றில் ஒரு பங்குக்கும் மேற்பட்டவர்கள் வீட்டு வேலை செய்பவர்கள் ஆவர், அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். வெளிநாடுகளில் அவர்களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் சில முயற்சிகளை எடுத்துள்ளது, ஆனாலும் பலர் குறைந்த ஓய்வுடன் கூடிய நீண்ட நேர வேலை, தாமதமாக கிடைக்கும் அல்லது கிடைக்காத சம்பளம், பணிபுரியுமிடத்திலேயே அடைத்து வைத்தல், மற்றும் ஏச்சுப் பேச்சுக்கள், உடல்ரீதியாக துன்புறுத்தல் மற்றும் பாலியல் தொல்லைகள் போன்ற பிரச்சினைகளை அனுபவித்து வருகின்றனர்.

முக்கிய சர்வதேச செயற்பாட்டாளர்கள்

ஐ.நா. மனித உரிமைகள் குழு (HRC) இலங்கையின் சிவில் போரின்போது போர்க் குற்றங்கள் மற்றும் இதர தீவிர சட்ட மீறல்கள் தொடர்பான சுதந்திரமான சர்வதேச விசாரணையை மேற்கொள்வதற்கு ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் நவிபிள்ளை அவர்களின் பரிந்துரைகளைச் செயற்படுத்தியது.

போர்க் குற்றங்களுக்காக இலங்கையின் பொறுப்பேற்பினை உறுதி செய்யுமாறு அமெரிக்காவும் இங்கிலாந்தும் இலங்கைக்கு கட்டளையிட்டுள்ளனர்.

ஒரு முக்கியமான பிராந்தியக் பங்காளியான இந்தியா, தமிழர்களின் நல்லிணக்கம் மற்றும் பாதுகாப்புக்காக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகின்றது, ஆனால் அது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. ஒரு முக்கிய நன்கொடையாளராகிய யப்பானும் வாக்களிப்பைத் தவிர்த்து விட்டது, மேலும் இதர பொது அறிக்கைகளில் போர்க்காலத்துக்குப் பிந்தைய முன்னேற்றங்கள் குறித்து இலங்கையைப் பாராட்டியுள்ளார். எந்த ஒரு மனித உரிமைப் பிரச்சினைகளையும் கூறாமல் நிதி மற்றும் அரசியல் ஆதரவு பற்றிய தொடர் நிகழ்ச்சி ஒன்றுக்காக சீனப் பிரதமர் இலங்கைக்கு வருகை தந்தார்..

இலங்கையை விட்டு வெளியேறும் புகலிடம் கோருவோர் திரும்பி வருவதையோ அல்லது அவுஸ்திரேலியப் பகுதிக்குள் அனுமதிக்கப்படாமல் இருப்பதையோ உறுதி செய்வதற்கு அவுஸ்திரேலியாவும் இலங்கையும் இணங்கியுள்ளன. கடலில் சுருக்கமான நேர்காணலை மேற்கொண்ட பிறகு புகலிடம் கோருவோர்கள் பலரை அவுஸ்திரேலியா இலங்கைக்குத் திருப்பி அனுப்பியுள்ளது; நியாயமான கோரிக்கை இருப்பதாக கண்டறியப்பட்டவர்கள் மற்ற நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர். புலம்பெயர்வோரையும் புகலிடம் கோருவோரையும் நிறுத்துவதில் இலங்கையின் உதவியைப் பெறுவதற்கான ஒரு வெளிப்படையான முயற்சியில், மனித உரிமைகளை சிறப்பாக பாதுகாக்கக் கோருவதற்கும், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாதிடுவதற்கும் அவுஸ்திரேலியா தவறிவிட்டது.