பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்திக் கொள்வதற்கும், பொதுச் சேவைகளை அணுகுவதில் நிலவி வரும் ஏற்றத்தாழ்வை கவனத்தில் எடுப்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் ஒரு சில முயற்சிகளை எடுத்திருந்தது. ஆனால், மனித உரிமைகள் தொடர்பான கடப்பாடுகளை அமுல் செய்யும் விடயத்தில் அது சிறிதளவு முன்னேற்றத்தை மட்டுமே சாதித்துக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் இலங்கை தொடர்பான அதன் ஆண்டறிக்கை யில் தன்னிச்சையான தடுத்து வைப்பு, சித்திரவதை மற்றும் தடுப்புக் காவல் மரணங்கள் தொடர்பான சம்பவங்களை பதிவு செய்துள்ளது. ''கடந்த கால அத்துமீறல்களுக்கு வழிகோலிய கட்டமைப்பு நிலைமைகள் இன்னமும் அவ்வாறே இருந்து வருகின்றன" என அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. குறிப்பாக, வடக்கு கிழக்கு பிரதேசத்தில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மனித உரிமைகள் பாதுகாவலர்கள் ஆகியோர் பாதுகாப்பு முகவரகங்களிடமிருந்து தொடர்ந்து அச்சுறுத்தல்களையும், துன்புறுத்தல்களையும் எதிர்கொண்டு வருகின்றார்கள். மேலும், அப்பிரதேசத்தில் அரச அதிகாரிகள் காணியுரிமைகள் மற்றும் சமய உரிமைகள் என்பவற்றை மீறும் செயல்களிலும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள்.
1983-2009 ஆயுத மோதல் காலப் பிரிவின் போது நிகழ்த்தப்பட்ட பரவலான போர் குற்றச் செயல்களுக்கு பொறுப்புக் கூறல் நிலையை மேம்படுத்தும் விடயத்தில் அதிகாரிகள் தோல்வி கண்டிருக்கின்றார்கள். "தேசிய நல்லிணக்கம்" என்ற சொற்பிரயோகத்துக்கு மத்தியிலும் கூட, திஸாநாயக்க அரசாங்கம் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களுடன் நம்பிக்கையை கட்டியெழுப்பும் விடயத்தில் பெரிதாக எதனையும் செய்திருக்கவில்லை. மோதலின் போது இடம்பெற்ற வலிந்து காணாமலாக்கப்படும் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டிருப்பதாக நம்பப்படும் இரு பாரிய மனிதப் புதைகுழி அமைவிடங்களை தோண்டுமாறு நீதிமன்றங்கள் கட்டளையிட்டிருந்தன.
சுயாதீனமான வழக்குத் தொடுனர் அலுவலகமொன்றை ஸ்தாபித்தல், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல் மற்றும் நிகர்நிலை காப்புச் சட்டத்தை திருத்துதல் என்பவற்றையும் உள்ளடக்கிய விதத்தில் வாக்குறுதியளிக்கப்பட்ட சட்ட சீர்த்திருத்தங்களை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது. இலங்கையின் தண்டனைச் சட்டக்கோவை ஒரே பாலினத்தவர்களுக்கு இடையிலான உறவை குற்றச் செயலாக்குகின்றது.
ஐ நா மனித உரிமைகள் பேரவை கருத்தொற்றுமையின் மூலம் அக்டோபர் மாதத்தில் ஐ நா - இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தின் பணிப்பாணையை புதுப்பித்தது. மோதலுடன் சம்பந்தப்பட்ட அத்துமீறல்கள் தொடர்பான சான்றுகளை சேகரிப்பதற்கென மேலும் இரண்டு வருடங்களுக்கு அது புதுப்பிக்கப்பட்டது.
உள்நாட்டுப் போர் காலப் பிரிவின் போது நிகழ்த்தப்பட்ட குற்றச் செயல்கள் தொடர்பாக ஐக்கிய அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளையும் உள்ளிட்ட நாடுகள் இராணுவ தலைவர்கள் மீது இலக்குடன் கூடிய தடைகளை விதித்திருந்தன. ஐக்கிய இராச்சியமும் இதில் இணைந்து கொண்டது. மனித உரிமைகளுக்கான ஐ நா உயர் ஆணயாளர் வோல்டர் டர்க் , ஜூன் மாதத்தில் இலங்கைக்கு விஜயம் செய்ததுடன், சீர்த்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.
பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகள்
இலங்கை அதன் வெளிநாட்டுக் கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் 2022 ஆம் ஆண்டில் ஒரு பொருளாதார நெருக்கடியை சந்தித்த பின்னர், முன்னைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 3 பில்லியன் அமெரிக்க டொலர் மீட்பு உதவியைப் பெற்றுக் கொள்வதற்கான ஒப்பந்தத்தை செய்து கொண்டது. இந்த அரசாங்கம் அந்த ஒப்பந்தத்தின் நியதிகளுக்கு இணங்கியொழுகியுள்ளது. பெருமளவுக்கு செல்வந்தர்களான நபர்களுக்கு பயனளித்த வரிக் கொள்கைகளின் விளைவாக தோன்றிய குறைவான அரச வருவாய்கள் காரணமாக ஓரளவுக்கு இந்த நெருக்கடி தோன்றியிருந்தது.
இதனை எழுதும் போது கிடைக்கக் கூடியதாக இருந்த மிகச் சமீபத்திய 2023 ஆம் ஆண்டிற்கான உலக வங்கி தரவுகளின் பிரகாரம், குடித்தொகையில் நான்கில் ஒரு பங்குக்கு மேற்பட்டவர்கள் வங்கியின் வறுமைக் கோடான நாளொன்றுக்கு 3.65 அமெரிக்க டொலர் என்ற அளவிலும் பார்க்க குறைந்த வருமானத்தையே பெற்று வந்தார்கள். உலக உணவு நிகழ்ச்சித்திட்டத்தின் பிரகாரம் பிள்ளைகளில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டிருந்தனர். பல குடும்பங்கள் தமது கல்வி மற்றும் சுகாதார உரிமைகளை அனுபவிப்பதற்கு அத்தியாவசியமான பண்டங்கள் மற்றும் சேவைகள் என்பவற்றை பெற்றுக் கொள்வதற்கு போராடி வருகின்றன. திஸாநாயக்க அரசாங்கத்தின் கீழ் சமூக நலன்புரிச் செலவினங்கள் குறைந்த மட்டங்களில் இருந்து வந்துள்ளதுடன், பல்வேறு உரிமைகளுக்கும் அது ஊறு விளைவித்து வருகின்றது. சர்வதேச நாணய நிதியத்தின் சட்டகத்தின் கீழ் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட கொள்கைகள், அரசிறை மீட்சியை எடுத்து வரும் சுமையை அவற்றை எந்த விதத்திலும் சமாளிக்க முடியாதவர்கள் மீது உயர் விகிதத்தில் சுமத்தியுள்ளன.
ஊழலை எதிர்த்துப் போராடும் விடயத்தில் ஓரளவுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. திஸாநாயக்கவுக்கு முன்னர் ஜனாதிபதியாக பதவி வகித்த, ரணில் விக்கிரமசிங்க அரச நிதிகளை துஷ்பிரயோகம் செய்த குற்றச் சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டதுடன், பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் - வலுவூ;ட்டப்பட்ட இலஞ்சம் அல்லது ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுக்களை புலன் விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட ஊழல் விசாரணைகளின் போது சுமார் ஒரு டசன் அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன், அவர்களில் ரணில் விக்கிரமசிங்கவும் ஒருவராவார்.
பொறுப்புக் கூறல் மற்றும் நீதி
இலங்கை அரசாங்கத்துக்கும், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகள் (எல்ரிரிஈ) இயக்கத்துக்குமிடையில் 26 வருட காலம் இடம்பெற்ற உள்நாட்டு போரில் 100,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டார்கள். போரின் இறுதி மாதங்களில் மட்டும் கொல்லப்பட்டதாக மதிப்பிடப்பட்டிருக்கும் 40,000 பேரும் இதில் அடங்குகின்றனர். சித்திரவதை மற்றும் உரிய சட்ட நடைமுறைக்கு வெளியிலான கொலைகள், வன்புணர்வு மற்றும் ஏனைய பாலியல் வன்முறைகள், வலிந்து காணாமலாக்கப்படுதல் மற்றும் சிவிலியன்கள் மீது தான்தோன்றித்தனமாக நடத்தப்படும் தாக்குதல்கள் என்பவற்றையும் உள்ளடக்கிய விதத்தில் அரச படைகளினால் துஷ்பிரயோகங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தற்கொலை தாக்குதல்கள் மற்றும் சிவிலியன்களை தான்தோன்றித்தனமாக கொலை செய்தல், முறையான வழக்கு விசாரணை இல்லாமல் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் மற்றும் சிறுவர் சிப்பாய்களை பயன்படுத்துதல் என்பவற்றையும் உள்ளடக்கிய கொடூரங்களை நிகழ்த்தியுள்ளது.
1980 களில் இராணுவம் மக்கள் விடுதலை முன்னணி (JVP) கிளர்ச்சியை எதிர்கொண்ட பொழுது தீவின் தென் பகுதியில், ஆயிரக்கணக்கானவர்கள் வலிந்து காணாமலாக்கப்பட்டார்கள். முன்னைய தீவிர இடதுசாரி கட்சியான ஜேவிபி இப்பொழுது திஸாநாயக்க அரசாங்கத்தின் மிகப் பெரிய கூட்டணிக் கட்சியாக இருந்து வருகிறது.
நம்பகமான உள்நாட்டு நீதி முயற்சிகள் இல்லாதிருத்தல், அதே போல பாதிக்கப்பட்ட பல சமூகங்கள் மீது தொடர்ந்தும் இடம்பெற்று வரும் அத்துமீறல்கள் என்பன காரணமாக ஐ நா - இலங்கை பொறுப்புக் கூறல் கருத்திட்டத்துக்கூடாக (OSLAP) பொறுப்புக் கூறலை மேம்படுத்துவதற்கான சர்வதேச முயற்சிகளை மேலும் இரண்டு வருட காலப் பிரிவுக்கு முன்னெடுப்பதற்கு ஐ நா மனித உரிமைகள் பேரவை தீர்மானித்துள்ளது. இதனை பல செயற்பாட்டாளர்கள் வரவேற்றுள்ளார்கள். பாதுகாப்பு முகவரங்களினால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் பழிவாங்கல் அபாயத்துக்கு மத்தியிலும் கூட, பாதிக்கப்பட்டவர்கள் ஐ நா - இலங்கை பொறுப்புக் கூறல் கருத்திட்டத்தில் பங்கேற்றார்கள். இக்கருத்திட்டத்துடன் திருகோணமலையில் விரிவான விதத்தில் தகவல்களை பகிரந்து கொண்ட ஒரு பெண்மணி ஜூன் மாதத்தில் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் தனது வீட்டில் வைத்து தன்னிடம் மூன்று மணி நேரம் விசாரணை செய்ததாக சொன்னார். "கண்காணிப்பு இப்பொழுது மிகவும் இறுக்கமானதாக இருந்து வருகிறது" என்றார் அவர். "சில சந்தர்ப்பங்களில் எம்மைப் பற்றிய தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் (பொலிஸார்) எமது பிள்ளைகளைக் கூட அணுகுகின்றனர்."
ஒரு புதிய உள்நாட்டுப் பொறிமுறைக்கூடாக இக்குற்றச் செயல்களை கவனத்தில் எடுக்கப் போவதாக அரசாங்கம் வாக்குறுதியளித்திருந்தது. ஆனால், அது தொடர்பான எந்த விபரங்களையும் அரசாங்கம் அறிவிக்கவில்லை. அதே வேளையில், பாதிக்கப்பட்டவர்களும், அவர்களது குடும்பத்தினரும் உள்நாட்டுச் செயன்முறைகள் தொடர்பாக குறைந்த அளவிலேயே நம்பிக்கை தெரிவித்திருந்தார்கள். முன்னைய அரசாங்கங்கள் 1990 கள் தொடக்கம் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் என்பவற்றை பரிசீலனை செய்வதற்காக குறைந்தது 10 வெவ்வேறு ஆணைக்குழுக்களை நியமனம் செய்திருந்தன. ஆனால், அவற்றில் எவையும் பொறுப்புக் கூறலை எடுத்து வரவில்லை; வலிந்து காணாமலாக்கப்பட்ட சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதனையும் வெளியிடவில்லை.
2019 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களில் அரசின் உடந்தையை மூடி மறைக்கும் ஒரு முயற்சி இருந்து வருவதாக முறைகேடுகள் குறித்து முன்னரேயே எடுத்துக் கூறுபவர்கள் (Whistleblowers ) மற்றும் கத்தோலிக்க தேவாலயம் ஆகிய தரப்புக்கள் தெரிவித்திருந்த கூற்றுக்களுக்கு ஜனாதிபதி திஸாநாயக்க ஆதரவளித்திருந்த போதிலும், 250 க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பாக அதிகாரிகள் இது வரையில் நம்பகமான விசாரணைகளை நடத்தியிருக்கவில்லை.
தொடர்ச்சியாக நிலவி வரும் தண்டனை விலக்குரிமை இடையறாத துஷ்பிரயோகங்களுக்கு வழிகோலியுள்ளது. ஐ நா மனித உரிமைகள் அலுவலகத்தின் அறிக்கை "சித்திரவதை மற்றும் ஏனைய வடிவங்களிலான துன்புறுத்தல்கள் வழமையாக இடம்பெற்று வந்திருப்பதனையும்" பொலிஸ் தடுப்புக் காவலில் பெருந்தொகையான மரணங்கள் நிகழ்ந்திருப்பது குறித்தும் விளக்குகிறது. "அத்தகைய சம்பவங்கள் தொடர்பாக வினைத்திறன்மிக்க விதத்தில் விசாரணைகள் நடத்தப்படவில்லை." இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறைந்தது 736 சித்திரவதை தொடர்பான முறைப்பாடுகளை மீளாய்வு செய்துள்ளது.
போதைப் பொருள் மற்றும் ஆயுதங்களை கைப்பற்றுதல் என்பவற்றையும் உள்ளடக்கிய விதத்தில் திட்டமிடப்பட்ட விதத்தில் மேற்கொள்ளப்படும் குற்றச் செயல்களை தடுத்து நிறுத்தும் முயற்சிகளை அரசாங்கம் முன்னெடுத்தது. மேலும், அது உயர் மட்ட சந்தேக நபர்களை நாட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால். சட்டத்தை அமுல் செய்யும் விடயத்தில் இராணுவம் பயன்படுத்தப்பட்டு வருவது தொடர்பான கரிசனைகள் தெரிவிக்கப்பட்டிருப்பதுடன், போதைப் பொருட்களை வைத்திருக்கும் ஆட்களை கைது செய்யும் விடயத்தில் உரிய செயன்முறை பின்பற்றப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. ஜனவரி - ஆகஸ்ட் மாதங்களுக்கிடையில் 120,000 க்கு மேற்பட்ட நபர்கள் அவ்விதம் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
பாரிய மனிதப் புதைகுழிகள்
கடந்த பல வருடங்களின் போது இலங்கை எங்கிலும் குறைந்தது 20 பாரிய மனிதப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவை பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கட்டுமான வேலைகள் இடம்பெற்ற போது தற்செயலாக கண்டு பிடிக்கப்பட்டவையாகும். யாழ்ப்பாணத்துக்கு அருகில் செம்மணி பாரிய மனிதப் புதைகுழி தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒரு புதிய புலன் விசாரணையின் போது பிள்ளைகளையும் உள்ளடக்கிய விதத்தில் 200 க்கும் மேற்பட்ட ஆட்களின் உடல் எச்சங்கள் கண்டு பிடிக்கப்பட்டன; அவை 1990 களில் இலங்கை இராணுவத்தினால் நிகழ்த்தப்பட்ட சட்ட நடைமுறைக்கு புறம்பான கொலைச் சம்பவங்களினால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் எச்சங்கள் என நம்பப்படுகின்றன. மட்டக்களப்பு மாவட்டத்தில் குருக்கள்மடத்திலிருக்கும் மற்றொரு பாரிய மனிதப் புதைகுழி தொடர்பான தோண்டுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு நீதிமன்றம் கட்டளையிட்டது.
பாரிய மனிதப் புதைகுழி அமைவிடங்கள் தொடர்பாக மிக நுட்பமான விதத்தில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு தேவையான தொழில்நுட்ப ஆற்றலை இலங்கை அதிகாரிகள் கொண்டிருக்கவில்லை. மேலும், கடந்த காலத்தில் நிலவிய அரசியல் விருப்பின்மை நிலையும் புலன் விசாரணைகளை உதாசீனம் செய்தது. அதன் பொருள் எந்தவொரு பாதிக்கப்பட்ட நபரினதும் உடல் எச்சங்கள் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை அல்லது ஏனைய சான்றுகள் பொருத்தமான விதத்தில் பாதுகாக்கப்படவில்லை என்பதாகும்.
கருத்துச் சுதந்திரம் மற்றும் ஒன்றுகூடும் சுதந்திரம்
1983 - 2009 உள்நாட்டுப் போரினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட இலங்கையின் வடக்கு கிழக்கு பிரதேசங்களில் பொலிஸ் மற்றும் உளவுத் துறை முகவரகங்களினால் நீதிக்காக குரலெழுப்பி வரும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அதே போல மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள் ஆகியோர் தொடர்ந்து கண்காணிப்புக்கும், அச்சுறுத்தலுக்கும் உள்ளாகி வருகின்றனர். சிவில் சமூக அமைப்புக்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு பொறுப்பாக இருந்து வரும் அரசு சாரா அமைப்புக்கள் செயலகம் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் ஒரு பாகமாக இருந்து வருவதுடன், மனித உரிமைகள் பாதுகாவலர்கள் ஒரு அச்சுறுத்தலாக கருதப்படக் கூடிய அபாய ஏதுவை அது அதிகரிக்கிறது.
ஒரு முன்னணி தமிழ் ஊடகவியலாளரும், உரிமைகள் பாதுகாவலருமான கணபதிப்பிள்ளை குமணன் என்பவரை ஆகஸ்ட் மாதத்தில் விசாரணைக்கென பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸார் அழைத்திருந்தனர்.
இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் வருடாந்த மனித உரிமைகள் அறிக்கை "குறிப்பாக வடக்கிலும், கிழக்கிலும் செயற்பட்டு வரும் கண்காணிப்பு பொறிமுறை, மத்திய அரசாங்கத்தின் கண்காணிப்பு அல்லது நெறிப்படுத்தல் ஆகக் குறைந்த மட்டத்தில் நிலவி வரும் பின்'னணியில் தொடர்ந்தும் அதே விதத்தில் செயற்பட்டு வருவதை" கண்டறிந்துள்ளது, "இது அச்சுறுத்தல் மற்றும் துன்புறுத்தல்" என்பன குறித்த தொடர்ச்சியான போக்குகள் இடம்பெறுவதற்கு வழிகோலுகின்றது.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டங்கள்
ஜனாதிபதி திஸாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனம் "பயங்கரவாத தடைச் சட்டத்தையும் (PTA) உள்ளடக்கிய விதத்தில் அடக்குமுறை இயல்பிலான அனைத்துச் சட்டங்களையும் ஒழித்து, நாட்டின் அனைத்துப் பாகங்களிலும் வாழ்ந்து வரும் மக்களின் சிவில் உரிமைகளை" உறுதிப்படுத்துவதற்கான கடப்பாடொன்றையும் உள்ளடக்கியிருந்தது. அனுகூலமான GSP+ வர்த்தக ஏற்பாட்டுக்கான ஒரு நிபந்தனை என்ற முறையில் முன்னைய அரசாங்கங்கள் மனித உரிமைகள் பேரவைக்கும், ஐரோப்பிய யூனியனுக்கும் இதே மாதிரியான வாக்குறுதிகளை மீண்டும் மீண்டும் வழங்கியிருந்தன. எவ்வாறிருப்பினும், 2024 இல் 38 சம்பவங்களிலிருந்து 2025 இன் முதல் ஐந்து மாத காலப் பிரிவின் போது 49 சம்பவங்கள் வரையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் பாவனையை பொலிஸ் அதிகரித்திருந்தது.
சிறுபான்மை தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆகியோர் ஆதாரமற்ற பயங்கரவாத குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றார்கள். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் செயல்பட்டு வரும் மனித உரிமைகள் பாதுகாவலர்கள், தாம் மேற்கொண்டு வரும் பணிகள் காரணமாக பயங்கரவாதம் தொடர்பான குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட முடியுமென பொலிஸ் மற்றும் புலனாய்வு முகவரகங்களைச் சேர்ந்த உறுப்பினர்கள் தமக்கு வழமையாக எச்சரிக்கை விடுத்து வருவதாக தெரிவித்துள்ளார்கள்.
பயங்கரவாத செயல்களுக்கான நிதிப்படுத்தலை தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் விதிமுறைகள் பிழையான விதத்தில் பிரயோகிக்கப்படுவதன் காரணமாக சில சந்தர்ப்பங்களில் தம்மால் வங்கி நிதி மாற்றல்களை மேற்கொள்ள முடியாதிருப்பதாக அரசு சாரா அமைப்புக்களின் நிர்வாகிகள் கூறியுள்ளார்கள்.
கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குதல் மற்றும் பயங்கரவாதச் செயல்களுக்கான நிதிப்படுத்தல் என்பவற்றை எதிர்த்துப் போராடும் அரசாங்கங்களுக்கிடையிலான ஒரு அமைப்பான நிதி நடவடிக்கை செயலணி (FATF) என்ற அமைப்பினால் இலங்கை மதிப்பீடு செய்யப்பட்டு வருகின்றது. இந்தச் செயலணியின் விதிக்கோவை "ஒரு விடயத்தில் முழுமையாக கவனம் செலுத்தும், விகிதாசார இயல்பிலான மற்றும் இடர்நேர்வை அடிப்படையாகக் கொண்ட வழிமுறைகள்" மேற்கொள்ளப்பட வேண்டுமெனக் கேட்டுக் கொள்வதுடன், இலாபநோக்கற்ற அமைப்புக்கள் மேற்கொண்டு வரும் சட்ட ரீதியான "பணிகளை அநாவசியமாக சீர்க்குலைத்தல் அல்லது ஊக்கமிழக்க செய்தல்" என்பதற்கு எதிராக அது எச்சரிக்கை விடுக்கின்றது. அரசாங்கம் FATF இன் விதிக்கோவையை மீறியிருப்பதாக கூறி செயற்பாட்டாளர்கள் கரிசனை எழுப்பியுள்ளனர். "பயங்கரவாத எதிர்ப்பு விதிமுறைகள் பரவலாக பிரயோகிக்கப்படுவது" உத்தியோகபூர்வ ஊழல் தொடர்பாக முன்னெடுக்கப்படும் சிவில் சமூகத்தின் உன்னிப்பான கண்காணிப்பை வரையறுத்துள்ளதென 2023 செப்டம்பர் மாதத்தில் சர்வதேச நாணய நிதியம் கண்டறிந்திருந்தது.
சமய மற்றும் நம்பிக்கை சுதந்திரம்
அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கிழக்கு மாகாணத்தின் தொல்லியல் மரபுரிமை முகாமைத்துவத்துக்கான ஜனாதிபதி செயலணியை உருவாக்கிய பொழுது இந்துக் கோயில்களை பௌத்த அமைவிடங்களாக மாற்றியமைக்கும் ஒரு பிரச்சாரம் 2020 இல் துரிதமடைந்திருந்தது. இந்தச் செயலணி இப்போது செயற்படாது விட்டாலும் கூட, ஒரு சில அரச முகவரகங்கள் அத்தகைய செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுத்து வந்துள்ளன.
தொல்லியல் திணைக்களம், வன பரிபாலன திணைக்களம், வன ஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம், இராணுவம், பொலிஸ் என்பவற்றையும் உள்ளடக்கிய முகவரகங்கள் இந்துக் கோயில்களையும், அவற்றுக்கு அருகிலுள்ள காணிகளையும், அதே போல முஸ்லிம் மையவாடிகளை கொண்டிருக்கும் சொத்துக்களையும் கையகப்படுத்துவதற்கான தொடர்ச்சியான ஒரு உத்தியை பின்பற்றி வந்துள்ளன. இத்தகைய செயற்பாடுகள் சமய சுதந்திரத்துக்கான உரிமை, அதே போல சொத்துரிமைகள் என்பவற்றை மீறுகின்றன. அந்த நிலையில், போருக்குப் பிற்பட்ட "நல்லிணக்கம்" தொடர்பான அரசாங்கத்தின் சொல்லாடல்கள் பாதிக்கப்பட்ட சமூகங்களைப் பொருத்தவரையில் வெற்று வார்த்தைகளாக தென்படுகின்றன.